மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 10 ஆக 2020

பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்படுமா?

பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்படுமா?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையிலும், முருகனின் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில், பேரறிவாளன் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர். இவரது தந்தை குயில்தாசன் உடல் நலம் சரியில்லாமல் உள்ளார்.

எனவே, தந்தையை உடனிருந்து கவனிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து பேரறிவாளனை பரோலில் விட வேண்டும் என்று அவரது தாய் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையேற்று, கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி ஒரு மாத பரோலில், பல்வேறு நிபந்தனைகளுடன் பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

பின்னர் பரோல் முடிவடைய சில நாட்கள் இருந்த நிலையில், அவரது தந்தைக்கு மேலும் இரு அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் எனவே பரோலை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அற்புதம்மாள் மீண்டும் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அவரது பரோல் அக்.24ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, உடல்நலக் குறைவால் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த அக்.3ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், பேரறிவாளனின் பரோல் நாளையுடன் அக்.24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. நாளை மாலை 5 மணிக்குள் பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட வேண்டும்.

இதற்கிடையில், பேரறிவாளன் தாய் அற்புதம்மாள், கணவர் குயில்தாசன் உடல் நிலையைக் காரணம் காட்டி மீண்டும் பரோல் நீட்டிப்பு வழங்க வேண்டும் என 3வது முறையாக அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். இதனை அரசு பரிசீலிக்குமா? இல்லையா? என்பது உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், பரோல் நீட்டிப்பு தொடர்பாக எந்த தகவலும் தங்களுக்கு வரவில்லை என சிறை வட்டாரம் தெரிவித்துள்ளது. எனவே நாளை மாலை பேரறிவாளன் சிறைக்கு கொண்டு வரப்படுவார். அதன் பிறகு அவருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். அதன் பின்னர் பரோல் வழங்கப்பட்டால் அவரை வீட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon