மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 22 ஜன 2021

ஈரானிய சினிமாவின் பாதிப்பில் ஒரு தமிழ் படம்!

ஈரானிய சினிமாவின் பாதிப்பில் ஒரு தமிழ் படம்!வெற்றிநடை போடும் தமிழகம்

‘வெங்கடசுப்பிரமணி மைக் டெஸ்டிங் 1,2,3’ திரைப்படம் மனதைத் தொடும் கதையாக இருக்கும் என அறிமுக இயக்குநர் முருகேஷ் பாரதி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஹரியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய முருகேஷ் பாரதி உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை இயக்கியுள்ளார். படம் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில், “சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை கதை பேசும். படத்தை பார்த்த பின் பார்வையாளர்களின் மனதில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “ரோஷன் கதாநாயகனாக நடிக்கிறார். ஈரானியப் படங்களைப் போல யதார்த்தமாக நம் மக்களின் வாழ்வை பதிவு செய்துள்ளோம். கதை வர்ணனை முள்ளும் மலரும், கிழக்குச் சீமையிலே, தண்ணீர் தண்ணீர் போன்ற படங்களை ஒத்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரோஷன் மைக் டெஸ்ட் செய்யும் இளைஞராக நடிக்கிறார். இதில் சுவாரஸ்யம் என்னவெனில் இயக்குநர் முருகேஷ் திரைத்துறைக்கு வரும் முன்னர் அந்த தொழிலில் தான் ஈடுபட்டிருந்தார். “எனது கள ஆய்வின் போது பார்த்த சம்பவத்தின் தாக்கத்தில் இந்த கதையை அமைத்தேன். ரோஷன் பல்வேறு பயிற்சிகளுக்கு பின்னர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்” என்று அவர் கூறியுள்ளார்.

“திருவண்ணமலை மாவட்டத்தில் உள்ள வேட்டவலம் என்ற கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தினோம். மலைகள் சூழ்ந்த அழகான பகுதி. ஒவ்வொரு நாளும் நாங்கள் படப்பிடிப்பை முடித்து கிளம்பும் போது தூறல் விழும். மழையினால் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து கொண்டிருந்தோம். ஆனால் முழுவதுமாக நாங்கள் படப்பிடிப்பை முடித்த பின்னரே மழை கொட்டி தீர்த்தது. மூன்று வருடமாக மழை பெய்யாமல் இப்போது தான் மழை பெய்வதாகவும் அதனால் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றும் கிராம மக்கள் கூறினர்” என்று சிரித்த படியே தங்களது படப்பிடிப்பு அனுபவத்தை இயக்குநர் முருகேஷ் பகிர்ந்துகொண்டார்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon