மெர்சல் படத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கொடுத்திருக்கும் புரமோஷனில் இந்தியா முழுவதிலுமிருந்தும் ஆதரவுக் குரல்கள் வந்திருக்கின்றன. அதிகாரத்தின் பெயரால் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆபத்து நேரும்போதெல்லாம் மத, சாதி, இன, மொழி பேதமின்றி எப்படி மக்கள் ஒன்றிணைவார்கள் என்பதை மெர்சல் படத்துக்கு ஏற்பட்ட பிரச்னை உருவாக்கியிருப்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். அப்படியொரு நிலையில், இந்திய சினிமாவின் முகமாகத் திகழும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் ஒரே நாளில் மெர்சல் படத்தைப் பார்த்திருக்கிறார்கள்.
மெர்சல் படத்துக்கான பிரச்சினைகள் தொடங்கியபோதே “மெர்சல் ஏற்கெனவே தணிக்கை செய்யப்பட்டுவிட்டது. அதைத் திரும்ப தணிக்கை செய்யாதீர்கள். விமர்சனத்தை நேர்மறையாக எதிர்கொள்ளுங்கள். விமர்சகர்களை அமைதியாக்க முயற்சிக்க வேண்டாம். இந்தியா பேசும்போதுதான் ஒளிரும்” என்று கருத்து கூறியிருந்தார் கமல். எனவே, நேற்று (22.10.2017) மெர்சல் படத்தைப் பார்த்ததற்கு வெளிப்படையாக எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், ரஜினி மெர்சல் படம் பார்க்கும்வரை காத்திருந்து, “முக்கியமான விஷயத்தைப் பேசியிருக்கிறீர்கள். வெல்டன். மெர்சல் டீமுக்கு வாழ்த்துகள்” என்று ட்வீட் செய்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் போன் மூலம் ரஜினி விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது.
ரஜினி போல அல்லாமல், கமல் தனது ஸ்டூடியோவுக்கு விஜய்யை அழைத்து அவருடன் அமர்ந்து மெர்சல் படத்தைப் பார்த்திருக்கிறார். விஜய்யின் இந்த தைரியத்துக்காகப் பாராட்டு தெரிவித்ததுடன், இதற்கு முன் இதேபோல தான் விமர்சனம் வைத்தபோதெல்லாம் எப்படி எதிர்ப்புகள் வந்தன என்பதைப் பற்றியும் பேசியிருக்கிறார். அதிலும் முக்கியமாக விஜய்யுடன் போட்டோ எடுத்துக்கொண்டபோது பின்னணியில் அபூர்வ சகோதரர்கள் பட போஸ்டர் இருக்குமிடத்தில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறார்.
மெர்சல் திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திர வடிவமைப்பில் அபூர்வ சகோதரர்கள் படத்தின் அமைப்பு அப்படியே இடம்பெற்றிருந்தது படம் பார்த்த அனைவருக்குமே தெரியும். அப்படியொரு விமர்சனம் இருக்கும் நிலையில் கமல் தனது ஸ்டூடியோவில் அபூர்வ சகோதரர்கள் படம் மாட்டியிருக்கும் இடத்தில் போட்டோ எடுத்திருப்பது கமலின் ஸ்டைல்.
இவற்றையெல்லாம் தாண்டி, பிரச்சினை கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் கமல் மற்றும் ரஜினியின் இந்த நடவடிக்கைகள் தேவைதானா, இது மேலும் பிரச்னைகளை வரவழைக்காதா என்ற கேள்விகளே அதிகமாக எழுந்திருக்கின்றன. ஒரு படத்தைப் பார்க்காமல் அதன் கருத்துகளை ஆமோதிப்பது ரஜினி - கமல் ஆகியோருக்குத் தகுந்த செயல் அல்ல. அதனால்தான் கமல் முதலில் வெளியிட்ட தனது ட்விட்டில் கருத்துச் சுதந்திரத்தை முன்னிலைப்படுத்தியே பேசியிருந்தாரே தவிர படத்தின் கதையை எங்கும் ஆதரிக்கவில்லை. இப்போது படம் பார்த்த பிறகு ரஜினி மெர்சல் திரைப்படத்தைப் பற்றிய தனது கருத்தைப் பொது வெளியிலும், கமல் மெர்சல் டீமிடமும் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், மெர்சல் திரைப்படத்தின் பிரச்சினைகள் முடிந்துவிடவில்லை என்பதே தற்போதைய
நிலை. நேற்று இரவு எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், கிடப்பில் கிடக்கும் விஜய் மீதான வழக்கு மீண்டும் தூசி தட்டப்படுமா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
2015 அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸான விஜய்யின் புலி திரைப்படத்தின்போது விஜய் வீட்டில் வருமான வரித் துறை ரெய்டு நடத்தப்பட்டது. அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் தூண்டுதலால் ரெய்டு நடத்தப்பட்டது என்று பேசப்பட்டாலும், 5 வருடங்களாக நடிகர் விஜய் வரி ஏய்ப்பு செய்திருந்தது தெரியவந்ததால் அவர் குற்றம் செய்தவராகக் கருதப்பட்டார். அதே சமயத்தில் நயன்தாரா, சமந்தா ஆகியோரது வீடுகளிலும் ஐ.டி ரெய்டு நடத்தப்பட்டது.
விஜய் சமர்ப்பித்திருந்த ஆவணங்களின்படி, அவரிடம் கணக்கில் வராத மூன்று கோடி ரூபாய் பணமாக இருந்ததாக வருமான வரி அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது. கணக்கில் வராத பணம் தொடர்பாக, விஜய் தரப்பிலிருந்து வருமான வரித் துறையிடம் கூடுதல் ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. கணக்கில் வராத பணத்துக்கான வரியை செலுத்திவிடுவதாகவும், தன்மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாமென்றும் விஜய் தரப்பில் கேட்கப்பட்டிருக்கிறது. இந்த மனு மீதான விசாரணையில் வருமான வரித் துறையினர் இரண்டு விதமான மனநிலையில் இருந்ததால் முடிவெடுக்கப்படாமலே இருந்தது.
எகனாமிக் டைம்ஸ் செய்திக் குறிப்பின்படி, இந்த வருடத் தொடக்கத்திலும் இக்குழு கூடியிருக்கிறது. ஆனால், முடிவு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. 3 கோடி ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக வைத்திருந்த குற்றத்துக்காக விஜய் மீது வழக்கு பதிவு செய்வதற்கும், எஞ்சிய வரியைக் கட்டிவிடுவதாக அவர் சமர்ப்பித்திருக்கும் மனுவை ஏற்று அவரை சுதந்திரமாக விடுவதற்கும் வருமான வரித் துறைக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், தற்போது மெர்சல் படத்தின் மூலம் விஜய் மீது உருவாகியிருக்கும் இமேஜ் இந்த வழக்குக்கு உயிர் கொடுக்குமா, அதில் விஜய்க்கு எதிரான முடிவெடுக்கப்படுமா என்பவைதான் அடுத்தடுத்த பிரேக்கிங் நியூஸ். தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்திய அளவில் மெகா பிரேக்கிங் நியூஸ்.