மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 21 செப் 2020

சிறப்புக் கட்டுரை: நரேந்திர மோடி - மங்கி வரும் ஒளிவட்டம்

சிறப்புக் கட்டுரை: நரேந்திர மோடி - மங்கி வரும் ஒளிவட்டம்

ஹர்பன்ஸ் முக்கியா

2014 மே மாதத் தேர்தலுக்கு முந்தைய நாள்களோ அல்லது அதே ஆண்டோ நினைவுக்கு வருகிறதா? இவரைப் போற்றித் துதிக்கும் இந்திய ஊடகம் இந்த தேசம் 67 ஆண்டுகளாக எப்படித்தான் தாக்குப்பிடித்ததோ என்று வியக்காத குறைதான். தொலைதூரத்தில் உள்ள பள்ளிக்கூடத்திலோ அல்லது டெல்லியில் உள்ள கல்லூரியிலோ அவர் நிகழ்த்தும் ஒவ்வொரு சின்னச்சின்ன உரைகளும் செய்திகளாகி, தொலைக்காட்சித் திரைகளில் பளிச்சிட்டன. நல்ல செய்தியோ, மோசமான செய்தியோ அல்லது மாறுபட்ட எந்த செய்தியோ அது தேசிய அல்லது சர்வதேச நிகழ்வாக இருந்தாலும் அவை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவில்லை. இந்தத் தேவதூதர் காட்சியளிக்கும்போதெல்லாம் சமூக ஊடகங்களும் நன்றி கீதங்களை ஓய்வில்லாமல் இசைத்தன.

தன்னைச் சுற்றிலும் ஒரு மாயையை உருவாக்குவதில் இந்தத் தூதரும் தன் கைவரிசையைக் காட்டினார். கடந்த 60 ஆண்டுகளாகவோ அல்லது சுதந்திரம் அடைந்ததிலிருந்தோ என்ன ஆதாயம் அடைந்தீர்கள் என பெருந்திரளான மக்களிடம் அவர் தவறாமல் கேட்டபோதெல்லாம், அவர்கள் ‘பூஜ்ஜியம்’ என உரத்த குரலில் பதிலளித்தனர். எப்படி இருந்தாலும் பூஜ்ஜியம் என்பது இந்தியக் கண்டுபிடிப்புதானே. அனைத்துமே மாறி, 60 மாதங்களில் பொற்காலம் (‘நல்ல காலம்’) பிறக்கும் என உறுதி அளித்தார். உண்மையிலேயே வாக்களித்தவர்களில் 31% பேர் – மொத்த வாக்காளர்களில் 21% அல்லது 22% பேர் அல்லது இந்திய மக்களில் சுமார் 12% பேர் - அவரது வாக்குறுதிகளை நம்பினர். போட்டியிடும் பல வேட்பாளர்களில் அதிக வாக்குகளைப் பெறும் ஒரு வேட்பாளர் வெற்றிபெறுவதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால், இது பெருவாரியான மக்களின் தீர்ப்பு என்று சொல்ல முடியும்.

இந்த ஆதரவு அலை இப்போது பின்வாங்கத் தொடங்கியுள்ளதா? இந்தத் தூதரின் உறுதி அளிக்கப்பட்ட அல்லது உறுதி அளிக்கப்படாத செயல்கள் அனைத்தும் நீர்த்துப்போய்க்கொண்டிருக்கின்றன. வேறு எந்த பிரதமரும் மோடியைப் போன்று நாள்தோறும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடகங்களில் இந்தளவுக்கு கேலி, கிண்டலுக்கு ஆளாகவில்லை. ஜோக்குகள், கார்ட்டூன்கள், வீடியோக்களாக வரும் இந்த நையாண்டிகள், அவரது அருமை சகாவான உமா பாரதி போன்றவர்கள் “விகாஸ் புருஷ்” (வளர்ச்சியைத் தருபவர்) என்ற அவரது இமேஜ் குறித்து முன்னர் என்ன சொன்னார்கள் (வினாஸ் புருஷ் – நாசம் ஏற்படுத்துபவர்) என்பதை நினைவூட்டுகின்றன.

பீதியான சூழலில் கேலி, கிண்டல் என்பது அதிகார மையத்துக்கு விடுக்கப்படும் கடுமையான சவாலாகும். தலைவர்களை நையாண்டி செய்வது, அதிலும் ஒட்டுமொத்த அமைப்பையும் எள்ளி நகையாடும் போக்கு சோவியத் ஒன்றியத்தில் 1980களில் உச்சத்தில் இருந்தது. பெரும் இழப்பை அடுத்து சோவியத் அதிகாரவர்க்கம் இதைக் கண்டுணர்ந்தது. வதந்திகள் இதில் இன்னொரு வகை. இவை இந்திரா காந்தியின் அவரச நிலை ஆட்சியைத் தகர்த்தன.

கரையும் வாக்குறுதிகள், கலையும் பிம்பங்கள்

மோடியின் பெரும் வாக்குறுதிகள், கண்ணெதிரே காற்றோடு கரைகின்றன. தடபுடலாக அவர் தொடங்கிய அனைத்துத் திட்டங்களும் தோல்வி அடைந்துள்ளன. மிக மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ள பண மதிப்பு நீக்கம், “விதியுடன் ஒரு சந்திப்பு”க்கு நிகராக முன்னிறுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு அடாவடியாக நிர்வகிக்கப்படுவது உள்ளிட்டவை இதற்குச் சான்று. வீழ்ச்சியடைந்துள்ள இந்தியாவை வீறுகொண்டு எழவைக்கும் தூதர் என்ற அவருடைய பிராண்ட் இமேஜ் மங்கிவருகிறது. ஒளிவட்டம் சோபை இழக்கிறது. அதுவும் குறுகிய காலமான மூன்றரை ஆண்டுகளுக்குள்.

இவருக்கு முந்தைய பல பிரதமர்கள் சீக்கிரமாகவே வீழ்ச்சியடைந்தார்கள் என்றால், கோஷ்டிப் பூசல்களும், ஒன்றிணைந்து செயல்படாத கூட்டணிக் கட்சிகளும்தான் காரணமாக இருந்தன. இவர்கள் யாருக்குமே, தங்கள் வாக்குறுதிகளை, குறைந்தது அதில் ஒரு பகுதியையாவது நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் மோடிக்குக் கிடைத்தது போன்று கிடைத்ததில்லை. தன்னை மையமாகக்கொள்ளும் போக்கே இவர் மீதான நம்பிக்கையை உருவாக்கியதற்கான ஆதார சக்தி. அதே ஆதாரமே அவர் மீதான நம்பிக்கை வேகமாகக் குறைவதற்கும் காரணமாக உள்ளது.

மக்கள் மத்தியில் அவர் மீதான நம்பிக்கை பெருமளவு குறைந்திருப்பதைப் போன்றே அவரது சொந்த முகாமிலும் குறைந்துவருகிறது. பாரதிய ஜனதாவின் துணை அமைப்புகளான பாரதிய கிஸான் சங்கம், பாரதிய மஸ்தூர் சங்கம் போன்றவை, மோடிக்கு வாக்களித்ததை இப்போதும் ஒப்புக்கொள்ளும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு வர்த்தகர் அமைப்புகள், இளைஞர்கள் (ஆதரவுதளத்தின் பிரதான அங்கம்) ஆகிய அனைவருமே நாட்டின் பொருளாதாரத்தை அவர் கையாளும் அணுகுமுறையைப் பார்த்து கொந்தளிப்படைந்துள்ளனர்.

பாரதிய ஜனதாவின் நீண்டகாலத் தலைவரான யஷ்வந்த் சின்ஹா இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதிய கட்டுரை அரசின் பொருளாதாரத் தோல்விகளின் மையத்தைச் சுட்டிக்காட்டாமல் இருந்திருந்தால், அது புறக்கணிக்கப்பட்டிருக்கும். அதையடுத்து, பல்வேறு அம்புகள் அதே திசையை நோக்கிப் பறந்துகொண்டிருக்கின்றன. பாரதிய ஜனதா அரும்பாடுபட்டும் அகமது பட்டேலுக்குக் கிடைத்த வெற்றி, அடுத்தடுத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் அது தோல்வி அடைந்து தனது பெரும் ஆதரவு தளமான இளைஞர்களை இழந்தது, குர்தாஸ்புரில் தனது இடத்தைப் பறிகொடுத்தது, கட்சித் தலைவரின் மகன் நடத்திய பிசினஸ் நடவடிக்கைகளை தி வயர் அம்பலப்படுத்தி, கட்சியை மிகவும் தர்மசங்கடப்படுத்தியது என எதிர்மறை அம்சங்கள் அணிவகுக்கின்றன. பாரதிய ஜனதா தலைவர்கள் பங்கேற்ற குஜராத் தேர்தல் கூட்டங்களில் மக்கள் கூட்டம் மிகவும் குறைந்தோ அல்லது எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்கள் கூட்டமோ காணப்படும் காட்சிகள் சமூக ஊடக வீடியோக்களில் வலம்வருகின்றன. இவை அனைத்துமே தனித்தனியான துரும்புகளா, அல்லது அவை ஒன்று திரண்டு ஒரு புயலாக இல்லாவிட்டாலும் பெரும் காற்றாக வலுப்படுகிறதா? தான் சாதித்துள்ளவற்றின் அடிப்படையில் மேலும் அதிக வளர்ச்சியைத் தரும் உறுதிமொழியுடன் 2019 தேர்தலை எதிர்கொள்ளும் மோடியின் நம்பிக்கைகளுக்கு அவரது நடவடிக்கைகளே முட்டுக்கட்டையாகிவிட்டன.

மீண்டும் முஸ்லிம் எதிர்ப்பு அஸ்திரம்

ஆர்.எஸ்.எஸ். தலைவர், மோகன் பாகவத் ஆற்றிய தசரா விழா உரையும் அண்மையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘சமன்வய பைட்டக்’ நிகழ்ச்சியும் அடுத்த தேர்தல் விவகாரத்துக்கான அளவுகோலாக உள்ளன. சிறு விவசாயிகள், நடுத்தர மற்றும் சிறிய வியாபாரிகளின் நலன்களை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை இந்தத் துறைகளில் பாரதிய ஜனதாவின் தோல்வியை ஒப்புக்கொள்வதாக உள்ளது. எனவே, ரோஹாங்கியா முஸ்லிம்களால் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, இந்தப் பிரச்னைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதிலும் ரோஹாங்கியா என்பதை இரண்டாம்பட்சமாக ஆக்கி, முஸ்லிம் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் முஸ்லிம்களை மட்டும் குறிப்பிட்டு அவர்கள்தான் இந்த தேசத்துக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரே தரப்பு என்று கூறுவதற்கு இந்தப் பிரச்னை அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும். இந்த அடிப்படையில், இந்துக்கள் ஒன்றிணைந்து பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பிரசாரம் செய்வதற்கும் வசதியாகிவிடும். அடுத்த மாற்று வழி, பாகிஸ்தானுடன் மோதலில் இறங்குவது. இது கொஞ்சம் ஆபத்தான விஷயம்.

பாரதிய ஜனதாவின் வாய்ப்புகள் சரிந்துவரும் நிலையில், வேறு எந்த மாற்றும் இல்லை (TINA-there is no alternative) - மோடியின் உயரத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய யாரும் இல்லை என்ற வாதம் பொய்த்துப்போய் விடலாம். 2004ஆம் ஆண்டில் இந்தியா ஒளிர்கிறது என்ற முழக்கம் ஒலித்தபோது, இந்திய ஊடகங்கள் அதில் மதிமயங்கிய நாள்களை நினைவுகூர்வோம். இளம் கம்ப்யூட்டர் மோகம் கொண்ட இளைஞர் படை ஒன்றின் உதவியுடன் மறைந்த பிரமோத் மகாஜன் தொலைதூரத்தில் உள்ள தொகுதியின் சிறு சிறு விவரங்களைக்கூட விரல் நுனியில் வைத்திருந்தார். அப்போதோ எதிர்க்கட்சிகள் நிராயுதபாணிகளாக இருந்தன. அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சி நிர்வாகத்தின் ஒளிமயமான செயல்பாடுகளும் அவரது வெளியுறவுக் கொள்கையும் உலகம் முழுவதும் அவரது மதிப்பை உயர்த்தி, யாருமே அவரை நெருங்கக்கூட முடியாத அளவுக்குச் சிகரத்தில் வைத்திருந்தன. ஆனால், ‘வேறு எந்த மாற்றும் இல்லை’ என்ற அம்சம் அந்தத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு வெற்றியைத் தரவில்லை.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல்கள், அதிபர் தேர்தல் முறையை நோக்கி எந்த அளவுக்கு திசை திரும்பிச் சென்றாலும் பிரதம மந்திரியை அல்லாமல், எம்.பி.க்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்ற வழக்கமான நிலைக்குத்தான் நமது அமைப்பு முறை திரும்ப வருகிறது. வேட்பாளரின் பிம்பம் மங்கத் தொடங்கும்போது இது மேலும் வலுவடைகிறது.

இந்திய வாக்காளர்களைக் கிள்ளுக்கீரையாகக் கருதாதவர்கள்தான் புத்திசாலிகள்.

நன்றி: https://thewire.in/188094/narendra-modi-bjp-2019-image/

தமிழில்: ராஜலட்சுமி சிவலிங்கம்

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon