மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

2019இல் கூட்டணி ஆட்சிதான்: தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி!

2019இல் கூட்டணி ஆட்சிதான்: தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி!

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் 2019ஆம் ஆண்டு மத்தியில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகனும் அம்மாநில அமைச்சருமான ராமராவ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பாஜகவின் ஆட்சியையும் கடுமையாக விமர்சித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேட்டுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வட இந்தியாவில் ஆட்சிக்கு எதிரான அலை வீசினாலும் தென்னிந்தியாவில் சில கூட்டணிக் கட்சிகள் மூலம் கணிசமான இடங்களைப் பிடிக்கலாம் என்று பாஜக திட்டமிட்டு வருகிறது. அந்தக் கட்சிகளில் தெலுங்கானாவின் ஆளுங்கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியும் ஒன்று.

பாஜகவின் திட்டம் இப்படி இருக்க அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவின் மகனும், அம்மாநிலத்தின் முக்கிய அமைச்சருமான ராமராவ், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு தனிக்கட்சியும் ஆட்சியைப் பிடிக்காது. மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி பாஜகவோடு கூட்டணி வைக்க எந்த சாத்தியக் கூறுகளும் இல்லை. அது தேவையற்றதும்கூட.

மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சி கடந்த மூன்றாண்டுகளில் பெரிதாக எந்த சாதனையும் செய்ததாகத் தெரியவில்லை. வெறும் சுலோகன் ஆட்சிதான் நடக்கிறது. அதாவது புதிய சொற்றொடர்களைச் சொல்கிறார்களே தவிர, செயலில் எதுவும் இல்லை. ஆனால், பிரதமர் மோடியின் அதிர்ஷ்டம் என்னவென்றால், இதையெல்லாம் வலுவாக தோலுரிக்கக் கூடிய அளவுக்கு எதிர்க்கட்சி வலிமையாக இல்லை. நாங்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கூட்டணி பற்றியெல்லாம் நினைக்கவே இல்லை” என்று சொல்லியிருக்கிறார் ராமராவ்.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon