மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 13 ஆக 2020

டெங்கு: பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து!

டெங்கு: பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து!

‘டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் பள்ளி வளாகத்தைச் சுகாதாரமற்ற முறையில் வைத்திருக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்’ என பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும், ஒருநாளைக்கு பத்து பேர் வரை உயிரிழக்கின்றனர். டெங்கு காய்ச்சலை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருக்கும் வீடுகள், பள்ளிகள் உள்ளிட்டவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், கொசு உருவாகக் காரணமாக இருக்கும் வீடுகளில் குடிநீர் மற்றும் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பள்ளி முழுவதும் ஏராளமான டெங்கு புழுக்கள் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அப்பள்ளிக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து அவர், “டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்படும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். பள்ளிகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும்படி சுகாதாரமற்று இருந்தால் 104 என்ற எண்ணுக்குப் பெற்றோர்கள் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon