மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

மலையாள சினிமாவை நம்பும் மடோனா!

மலையாள சினிமாவை நம்பும் மடோனா!

பிரேமம் படத்தின் மூலம் மலையாள ரசிகர்களிடம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் மடோனா செபாஸ்டியன். தமிழில் விஜய் சேதுபதியுடன் இரண்டு படங்கள், தனுஷுடன் ஒரு படம் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்த நிலையில் மலையாளத்தில் இளம் நடிகர்களுள் ஒருவரான ஆசிப் அலிக்கு ஜோடியாக ‘இப்லிஸ்’ என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மடோனா.

முழுநீள நகைச்சுவை படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தை, ஆசிப் அலி - பாவனா ஜோடியில் வெளியான ‘அட்வென்ச்சர்ஸ் ஆஃப் ஓமனக்குட்டன்’ படத்தை இயக்கிய ரோஹித் வி.எஸ் என்பவர் இயக்கவுள்ளார். சித்திக் மற்றும் லால் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருக்கிறார்கள். ‘அட்வென்ச்சர்ஸ் ஆஃப் ஓமனக்குட்டன்’ படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் இணைந்து பணிபுரிந்த சமீர் அப்துல் இதிலும் பணிபுரிகிறார்.

மலையாளத்தில் கடந்த வருடம் திலீப்புடன் நடித்த கிங் லையர் படத்தைத் தொடர்ந்து புதிய படம் எதிலும் மடோனா ஒப்பந்தமாகவில்லை. ‘மாரி 2’வில் நடிக்க இருப்பதாகத் தகவல் வந்தது. ஆனால் அதுவும் கைகூடவில்லை. இதன் காரணமாக மீண்டும் மலையாள சினிமாவுலகில் கவனம் செலுத்தி வருகிறார்.

‘கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்’ என மடோனா கருத்து தெரிவித்து வருவதால் அவருக்குப் பட வாய்ப்புகள் பறிபோவதாகவும் கருத்துகள் நிலவிவருகின்றன.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon