‘மத்திய அரசிடம் அடிமையாக இருந்தது திமுகதான்’ என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் குற்றம் சுமத்திய நிலையில், அதற்கு தமிழக பாஜகவினர், “அதிமுகவைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் தங்களுக்கில்லை” என்று விளக்கமளித்து வந்தனர். ஆட்சியாளர்களும், மத்திய அரசு தங்களைக் கட்டுப்படுத்தவில்லை என்றும், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் தமிழகத்துக்கான நிதியையும், நலத்திட்டங்களையும் பெற முடியும் என்றும் கூறி வருகின்றனர். இதே கருத்தை நேற்றைய தினம் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதற்கிடையே திமுக செயல்தலைவர் ஸ்டாலின், “அதிமுகவினர் மத்திய அரசிடம் போட்டிப் போட்டுக்கொண்டு தான்தான் சிறந்த அடிமை என்று காட்டுகின்றனர்” என்றும், “இணக்கம் என்ற பெயரில் அதிமுகவினர் செய்யும் அடிமை சேவகத்தால் மக்களுக்கு நன்மை இல்லை” என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழ்நிலையில் நேற்று (அக்டோபர் 22) மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, “மத்திய அரசிடம், தமிழக அரசு இணக்கமாக இருப்பதில் தவறில்லை. மாநில அரசுக்கு நிறைய நிதிகளை ஒதுக்கீடு செய்துள்ளனர். டிஜிட்டல் உரிமைகளைக்கூட எந்த மாநிலத்துக்கும் ஒதுக்கீடு செய்யவில்லை. தமிழகத்துக்குத்தான் ஒதுக்கீடு செய்துள்ளனர். எனவே, யாருக்காகவும் தேவையில்லாமல் பயந்துகொண்டு மத்திய அரசோடு முரண்பாடாக இருப்பது மக்களுக்கு நாங்கள் செய்கிற துரோகமாகத்தான் இருக்கும்.
நாங்கள் மட்டுமல்ல திமுதான் அடிமையாகவே இருந்துள்ளது. மத்திய அரசு கூறியதற்கெல்லாம் ஆமாம் சாமி போட்டது திமுகதான். திமுக ஆட்சிகாலத்தில் தமிழக உரிமைகள் முற்றிலும் பறிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.