மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

சிறப்புக் கட்டுரை: பட்டினிச் சாவில் ஒளிர்கிறது டிஜிட்டல் இந்தியா!

சிறப்புக் கட்டுரை: பட்டினிச் சாவில் ஒளிர்கிறது டிஜிட்டல் இந்தியா!

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவர திட்டமிடப்பட்ட ஆதார் அட்டையை அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த பாரதிய ஜனதா கடுமையாக எதிர்த்தது. ஆனால் 2014ஆம் ஆண்டு பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு முந்தைய கொள்கைக்கு நேர்மாறாக ஆதாரை வலுக்கட்டாயமாக எல்லாத் திட்டங்களுக்கும் கட்டாயப்படுத்தி வருகிறது. ஆதார் என்பது வெறும் அடையாள அட்டைதான் அதை எதனோடும், ஆதார் உரிமையாளரின் விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி இணைக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ள போதிலும், அதைப் பொருட்படுத்தாமல் மத்திய அரசு எல்லாத் திட்டங்களோடும் ஆதார் எண்ணை இணைத்து வருகிறது.

இதன் விளைவை பொதுமக்கள் பல்வேறு வகையில் அனுபவித்திருந்தாலும், ஜார்க்கண்டில் நடந்த ஒரு சம்பவம் மனதை உலுக்குகிறது. ஜார்க்கண்டில் உள்ள கரிமதி என்ற கிராமத்தில் சந்தோசி குமார் என்ற 11 வயது பெண் குழந்தை கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து க்ரியஸ் இணையப்பக்கத்தில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள இந்தக் குழந்தையின் இறப்புக்கான காரணம் தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குழந்தையின் குடும்பத்துக்கு நிலையான வருமானம் இல்லை. விவசாயம் செய்ய சொந்தமாக நிலமும் இல்லை. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி இவர்களுடைய குடும்பம் பொது விநியோகத் திட்டத்தில் மானியம் பெற தகுதியான குடும்பம்தான். ஆனால், கடந்த ஆறு மாத காலமாக ரேஷன் கடைகளில் இந்தக் குடும்பத்துக்குப் பொது விநியோகத் திட்டத்தில் அரிசி உள்ளிட்ட உணவுப்பொருள்கள் வழங்க ரேஷன் கடை விநியோகர் மறுத்துவிட்டார். அதற்கான காரணம் என்னவென்றால் இந்தக் குடும்பத்தினர் தங்களுடைய ஆதார் எண்ணை ரேஷன் அட்டையுடன் இணைக்கவில்லை.

உணவுச் செலவுக்கான போதிய பணமும் இல்லை. எனவே பட்டினியிலேயே இந்தக் குடும்பம் வாடிக்கொண்டு இருந்திருக்கிறது. தொடர்ந்து எட்டு நாளாக உணவில்லாமல் பட்டினியில் இருந்த சந்தோசி பரிதாபமாக செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி உயிரிழந்தார். ஆனால், இவருடைய மரணத்துக்கு மாவட்ட அதிகாரிகள் மலேரியாதான் காரணம் என்று பொய்யான அறிக்கையைக் கொடுத்திருக்கிறார்கள். இந்தக் குழந்தையின் பெற்றோர் தங்கள் மகள் உணவில்லாமல்தான் இறந்தாள், அவள் சாகும்போது ‘பாத் பாத்’ (இந்திச் சொல்லான ‘பாத்’ என்றால் தமிழில் சோறு என்று பொருள்) என்று அழுதாள். இதையடுத்து அம்மாநில முதல்வர் ரகுபார் தாஸ் அடுத்த 24 மணி நேரத்தில் சந்தோசி குடும்பத்துக்கு எதனால் உணவில்லை என்று கண்டுபிடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ரேஷன் கடைகளில் இந்தக் குடும்பத்துக்கு உணவுப்பொருள்கள் மறுக்கப்பட்ட நாள் முதல் சந்தோசி பள்ளியில் கொடுக்கும் உணவையே உண்டு வந்திருக்கிறாள். செப்டம்பரில் துர்கா பூஜையை ஒட்டி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் உணவின்றி தவித்திருக்கிறாள். சமூக ஆர்வலர்கள் சிலர் கரிமதிக்குச் சென்று நடத்திய ஆய்வில் அந்தக் குடும்பம் தற்போதுவரை இரவில் உணவின்றி வெறும் வயிற்றோடு தான் உறங்கிக்கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்கள். ஓர் அடையாள அட்டையை இணைக்கவில்லை என்பதற்காக ஒரு குடும்பத்துக்கு உணவுப்பொருள் மறுத்திருப்பது, அதன் விளைவாக உணவின்றி 11 வயதுக் குழந்தை கொல்லப்பட்டிருக்கிறாள் என்பதற்குப் பின்னால் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு எதை நோக்கி இந்த நாட்டை இழுத்துக்கொண்டு செல்கிறது என்பதைக் கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது.

இப்படி அவசரகதியில் செயல்படுத்தப்பட்ட பாஜக அரசின் திட்டங்கள் கடந்த மூன்றாண்டுகளில் கடுமையான நெருக்கடியை ஏழை, எளிய மக்களுக்கும், சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கும் அளித்திருக்கிறது. கறுப்புப் பணத்தை ஒழிப்போம் என்று சொல்லி 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் கொண்டுவரப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கையை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டோம். பல நாள்கள் வங்கி வாசல்களிலும், ஏ.டி.எம். வாசல்களிலும் நம்மைக் காக்க வாய்த்த அந்த நிகழ்வுகளை எப்படி மறக்க முடியும் எளிதில்.

வரிசையில் காத்திருந்தே ராமநாதபுரம் கீழக்கரையில் கடந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் சித்திக் அலி என்ற 65 வயது முதியவரும், அதே மாதத்தில் டிசம்பர் 6ஆம் தேதி தஞ்சை பாபநாசத்தில் ஒரு முதியவரும் இறந்தனர். கறுப்புப் பணத்தை ஒழிக்க நாட்டுக்காக நீங்கள் தியாகம் செய்கிறீர்கள் என்று மோடி மக்களைக் குளிரவைப்பது போன்ற பேச்சுகளை அப்போது தொடர்ந்து பேசினார். திரும்பப் பெறப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளில் 99 சதவிகிதம் வங்கிகளுக்குத் திரும்ப வந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி ஏற்கெனவே அறிவித்துவிட்டது. ஆக, கறுப்புப் பணம் என்பது பணமாக மட்டும்தான் இருக்கும் என்று மோடி அரசு நம்புகிறதா அல்லது மக்களை முட்டாள்கள் ஆக்கி நம்ப வைக்கிறதா என்பதை நாம் இங்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேலும், இதுவரையில் எண்ணப்பட்ட நோட்டுகளில் கறுப்புப் பணம் எதுவும் சிக்கவில்லை என்று இப்போது ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது. ஆக, இத்திட்டம் தோல்வியடைந்துள்ளது, மக்களின் தியாகம் வீணாகியுள்ளது என்பதை எப்போது ஒப்புக்கொண்டு எப்போது மன்னிப்பு கேட்பார் மோடி?

இவ்வாறு மக்களின் மீது அக்கறையின்றி பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி., பயிர்க்காப்பீடு, பணமதிப்பழிப்பு எனப் பல திட்டங்கள் மக்களின் எதிர்ப்புகளைப் பெற்றுள்ளது. மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே இருந்த பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் 16 தனியார் நிறுவனங்களை இணைத்து 2015-16ஆம் நிதியாண்டில் ரூ.12,000 கோடியை தனியார் நிறுவனங்கள் லாபாமீட்டு வைத்தது இந்திய அரசு. ஆனால், இதே காலகட்டத்தில் நாடு முழுக்க விவசாயிகள் தனது உற்பத்திக்கான குறைந்தபட்ச ஆதார விலைகூட கிடைக்காமல் சாலைகளில் உற்பத்திப் பொருள்களைக் கொட்டி போராட்டம் நடத்தினர். நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கொண்டுவரப்பட்ட ஆதார் இணைப்போ, மேற்கண்டவற்றினிலும் ஒருபடி மேலே சென்று பட்டினிச் சாவு வரை அழைத்துச் சென்றிருக்கிறது இந்த நாட்டை.

இப்படி மக்களைப் பட்டினிக்குள்ளாகி, எதிர்கால சந்ததிகளைக் கொன்று பெறப்படுகிற ஆதார் தகவல்களைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கிற திறமையும், தொழில்நுட்ப வசதியும் இந்த அரசுக்கு இருக்கிறதா என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறியே.

சாமானியன் முதல் பிரபலங்கள் வரை பலரது ஆதார் தகவல்கள் கடந்த காலங்களில் இணையதளங்களில் வெளியாகி இந்த அரசின் மீதான நம்பகத்தன்மையை இழக்கச் செய்தது. பொது விநியோகத் திட்டத்தில் உணவுப்பொருள்கள் பெரும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழை எளிய மக்களின் ஆதார் எண்ணைக் கட்டாயப்படுத்தி பெற்றதன் மூலம் என்ன பயனை அடைந்திருக்கிறது இந்த அரசாங்கம்? சொந்த நாட்டு மக்களை பயங்கரவாதிகளைப் போலவும், திருடர்களைப் போலவும் கண்காணிக்கின்ற ஆதார் போன்ற மோசகரமான திட்டத்தைச் செயல்படுத்தி ஒரு குழந்தையின் பட்டினிச் சாவில் ஒளிர்கிறது டிஜிட்டல் இந்தியா!

- பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon