மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

அமைச்சர் உண்மையை ஒப்புக்கொண்டார்: திருமா

அமைச்சர் உண்மையை ஒப்புக்கொண்டார்: திருமா

‘தமிழக அரசின் நடவடிக்கை மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் பா.ஜனதாவின் தலையீடு உள்ளது என்பதை ஒப்புக்கொள்ளும் வகையில் ராஜேந்திர பாலாஜி பேசி இருப்பது அவரது ஒப்புதல் வாக்குமூலம்’ என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று (அக்டோபர் 22) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில், “தமிழக அரசின் நடவடிக்கை மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் பாஜகவின் தலையீடு உள்ளது என்பதை ஒப்புக்கொள்ளும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனம் திறந்து உண்மையைப் பேசி இருக்கிறார். இது அவரது ஒப்புதல் வாக்குமூலம்.

பாஜக, தமிழக அரசின் நடவடிக்கையில் தலையிடுகிறது என்று ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதலில் சுட்டிக்காட்டியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான். தமிழக அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அது சுதந்திரமாகவும், சுயமாகவும் இயங்க அனுமதிக்க வேண்டும். இதில் பாஜக மற்றும் மத்திய அரசு தலையிடுவதில் எந்த நியாயமும் இல்லை. ஜனநாயகமும் அல்ல.

அதேபோல், மெர்சல் படம் குறித்து தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி உள்ளனர் என்பது எனது கருத்து. படத்தின் கருத்தால் மத்திய அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மெர்சல் படத்துக்குக் கூடுதல் விளம்பரத்தைத் தேடி தரவும், நடிகர் விஜய்யைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற உள்நோக்கத்துக்காகவும்தான் இந்தச் சர்ச்சைகள் கூறப்பட்டு வருகிறது.

நியாயமாக தணிக்கைத் துறையை எதிர்த்துத்தான் பாஜக போராடி இருக்க வேண்டும். விமர்சித்து இருக்க வேண்டும். இதை அவர்கள் செய்யவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon