மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 28 மே 2020

அனுஷ்கா: கதையும் இயக்குநருமே முக்கியம்!

அனுஷ்கா: கதையும் இயக்குநருமே முக்கியம்!

எவ்வளவு பணம் கொடுத்தாலும் மலிவான கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் நடிகை அனுஷ்கா.

நடிகர்கள் எத்தனை வயதைக்கடந்தும் கதாநாயகனாக நடிக்கும் போது நடிகைகளுக்கு மட்டும் முப்பது வயதைத் தொட்டவுடன் டிட்டயர்மென்ட் கொடுத்துவிடும் நிலை தான் தமிழ் திரையுலகில் நிலவுகிறது. ஆனால் த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா உள்ளிட்ட சில நடிகைகளே இதை மாற்றிக்காட்டியுள்ளனர். அதில் முக்கியமானவர் அனுஷ்கா. மிகவும் தாமதமாக திரையுலகில் கவனிக்கப்பட்டாலும் நடிப்பால் தனது இருப்பை தொடர்ந்து தக்கவைத்து வருகிறார். அதற்கான காரணத்தை நிகழ்ச்சி ஒன்றில் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஐதராபாத்தில் நேற்று (அக்டோபர் 21) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அனுஷ்கா, “நல்ல கதாபாத்திரங்களில் நடித்து திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு நடிகைகளுக்கு அமைய வேண்டியது முக்கியம். என்னை விட திறமையான நடிகைகள் இருந்தும் அதிர்ஷ்டவசமாக எனக்கு நல்ல கதைகள் கிடைத்தன. அதனால்தான் திறமை காட்ட முடிந்தது. சினிமாவுக்காக உயிரை பணயம் வைத்து உழைக்கும் இயக்குநர்கள் இருக்கிறார்கள். அவர்கள் படங்களில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.”

“அருந்ததி, ருத்ரமாதேவி, இஞ்சி இடுப்பழகி ஆகிய படங்கள் அப்படித்தான் எனக்கு கிடைத்தன. அருந்ததி படம் என் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை கூட்டி நடித்தேன். அந்த கதாபாத்திரமும் திருப்தியை தந்தது. பாகுபலி படத்தில் இன்னொரு பரிணாமத்தில் வந்தேன். நான் நடிப்பதற்கு முன்னால் கதையையும் இயக்குநர் யார் என்பதையும்தான் முக்கியமாக பார்ப்பேன். கதை எனக்கு பிடிக்க வேண்டும். இயக்குநரும் திறமையானவராக இருக்க வேண்டும். ஒரு நல்ல இயக்குநர் படம் எடுத்தால் அதில் நடிக்கும் நடிகைக்கும் பெயர் கிடைக்கும். எவ்வளவு பணம் கொடுத்தாலும் மலிவான கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

பாகுபலி 2 படத்திற்கு பிறகு அசோகன் இயக்கத்தில் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பாக்மதி படத்தில் அனுஷ்கா நடித்துவருகிறார். இதில் மலையாள நடிகர் ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத், ஆதி, உள்ளிட்ட பலர் இணைந்து நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon