மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

விஜய்யை வைத்து அரசியலா?: தமிழிசை

விஜய்யை வைத்து அரசியலா?: தமிழிசை

நடிகர் விஜய்யை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்து கடந்த தீபாவளியன்று வெளியான மெர்சல் திரைப்படத்தில், ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா தொடர்பாக இடம்பெற்றுள்ள காட்சிகளுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். ஆனால், மெர்சல் படத்திலுள்ள காட்சிகளை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவருக்கு ஆதரவாக ராகுல், ஸ்டாலின், திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கமல்ஹாசன், விஷால், பிரபு உள்ளிட்ட திரை பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நடிகர் விஜய்யை பாஜகவிற்குள் இழுக்கும் நடவடிக்கையாகத்தான் இது பார்க்கப்படுகிறது என்றும், விஜய்யை வைத்து பாஜகவினர் அரசியல் செய்கிறார்கள் என்றும், ஆனால் மிரட்டி பணிய வைக்க அனைவரும் அதிமுக அல்ல எனவும் கூறி வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 22) செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்," நடிகர் விஜய்யை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. காங்கிரஸ் ஆட்சியில் அவசர நிலை குறித்த படம் வெளியிட அனுமதிக்கப்படவில்லை. தவறான கருத்தை யார் சொன்னாலும் அதனை நாங்கள் எதிர்ப்போம். எந்த திரைப்படத்தில் தவறான கருத்துகள் வந்தாலும் அதை நீக்க கோரிக்கை வைப்போம். நல்ல திட்டங்கள் வரும்போது அதற்கான விமர்சனங்களைக் கண்டு நாங்கள் அஞ்சப்போவதில்லை. ஜிஎஸ்டி குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதை காங்கிரஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்"என்றார்.

மேலும் ஹெச்.ராஜா குறித்து டிவிட்டரில் விஷால் கருத்து தெரிவித்ததை நான் பார்க்கவில்லை. கரூரில் நடைபெறும் பொதுக்குழுவில் தற்போதைய அரசியல் சூழல், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்படும்"என்று தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon