மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

ராமானுஜரும் வீராணம் ஏரியும்!

 ராமானுஜரும் வீராணம் ஏரியும்!

விளம்பரம்

ராமானுஜர் தனது சீடர்களுக்கு 74 வார்த்தைகள் உபதேசித்தார் என்று பார்த்தோம். அதன் பின் ராமானுஜர் வைணவ சித்தாந்தத்தை நிறுவன மயமாக்கும் வகையில் 74 சிம்மாசனாதிபதி களை நியமித்தார் என்று பார்த்தோம்.

ராமானுஜருக்கும் அந்த 74 என்ற எண்ணுக்கும் என்ன அப்படி ஒரு விசேஷ தொடர்பு?

ராமானுஜருக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் இருந்த நிலையில் சிம்மாசனாதிபதிகள் என்ற நிலையில் ஏன் வெறும் 74 பேரை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற கேள்விகள் நமக்குள் எழலாம்.

இதற்கு பதில் தேட முற்படும் முன் நாம் வைணவத்துக்கும் விவசாயத்துக்கும் உள்ள தொடர்பை பார்த்தோம்.

ராமானுஜர் பிறந்த திருபெரும்புதூர், வளர்ந்த காஞ்சிபுரம், சென்ற திருவரங்கம் எல்லாமே ஆற்றுப் படுகைகள். பாலாறு, வேகவதி ஆறு என்று காஞ்சியிலும் காவிரி என்று ஆறுகள் சூழ வாழ்ந்தவர் ராமானுஜர்.

ராமானுஜருக்கு முன்பே வாழ்ந்த வைணவ ஆசாரியர்கள் எல்லாருமே ஆற்றங்கரைகளில் வாழ்ந்தவர்கள்தான். முதன்முதலில் நாதமுனிகள் நம்மாழ்வாரிடம் திருவாய்மொழியைப் பெற்றது தாமிரபரணி நதிக்கரையில். நாதமுனிகள் குமாரர் ஈஸ்வர முனிகள், அவரது குமாரர் ஆளவந்தார், அப்புறம் ராமானுஜர் என்று எல்லாரும் கோலோச்சியது காவிரிக் கரையில்.

ராமானுஜர் திருவரங்கத்தில் இருந்த ஒரு நாள் கூட காவிரியில் நீராட்டம் கொள்ளாமல் இருந்ததில்லை. நஞ்சீயரின் சிஷ்யர் நம்பிள்ளை தனது குருவின் திருவாய்மொழி வியாக்யானத்தை பட்டோலையில் எழுதி அதை தலையில் கட்டி காவிரியைக் கடந்தபோது, திருவாய்மொழியைப படித்து முடித்துவிட்டாள் காவிரித் தாய்.

இவ்வாறு காவிரி உள்ளிட்ட ஆறுகளுக்கும் வைணவத்துக்கும் உள்ள தொடர்பு ஈரமானது. தொன்மையானது. ஆறுகள் மட்டுமல்ல... ஏரிகளுக்கும் வைணவத்துக்கும் கூட மிக நெருங்கிய தொடர்புண்டு.

அற்புதமான இந்த பந்தத்தை நாதமுனிகளே நமக்கு உரைத்துச் சென்றிருக்கிறார்,

நம்மாழ்வார் நாதமுனிகளிடம், 'எதிர்காலத்தில் ஆசாரிய புருஷர் ஒருவர் அவதரிப்பார். அவரை உன் பேரன் ஆதரிக்க வேண்டும்' என்று சொல்லிச் சென்றார் அல்லவா? அதைத் தொடர்ந்து நாதமுனிகள் தனது சீடர்களிடம் அடிக்கடி சொல்வார்,

'குளப்படியிலே தேங்கினால் குருவி குடித்துப் போம். வீராணத்து ஏரியிலே நாடு விளையும்' என்று சொல்லிக் கொண்டிருப்பார் நாதமுனிகள்.

அவர் ஏன் வீராணத்து ஏரியை குறிப்பிட்டு சொன்னார் என்றால், நாதமுனிகளின் அவதார பகுதியான காட்டுமன்னார் கோயிலில்தான் வீராணம் ஏரி தொடங்கி பல மைல் பரப்புக்கு விரிந்துள்ளது. அதனால் அவர்களுக்கு அப்போது வீராணம் ஏரியை குறிப்பிடாமல் பேசுவது கடினம்.

நாதமுனிகள் சொன்ன சொற்றொடருக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

குளப்படி என்றால் மாட்டின் குளம்பு பதிந்த இடம். அந்த சிறு குழியில் தேங்கிய தண்ணீர் என்பது சில குருவிகளுக்கு மட்டுமே குடி நீராகும். ஆனால் வீராணம் ஏரியிலே இருக்கும் தண்ணீர் நாடெல்லாம் விளைவதற்கு காரணமாக இருக்கும். ஆக பெரும் பயனாக இருக்கும்.

அதுபோல ராமானுஜருக்கு முன் தோன்றிய ஆச்சாரியர்கள் காலத்தில் வைணவம் செழித்தது உண்மைதான். எப்படி என்றால் மாட்டின் குளம்பு மிதித்த குழியில் தேங்கிய தண்ணீர் போல சிறு அளவுக்கு மட்டுமே பயன்பட்டு வந்தது. ஆனால் ராமானுஜர் காலத்தில்தான் வீராணம் ஏரியை போல பல்வேறு பகுதிகளுக்கு பயன் விளைவித்தது.

ராமானுஜருக்கு முன்பிருந்த ஆச்சாரியர்களால் ஒரு சில சிஷ்யர்களுக்கே பயன்பட்டு வந்தன அர்த்தங்கள். அதே அர்த்தங்கள் இராமானுஜருக்குப் பின்னால் உலகனைத்துக்கும் பயன்படும் என்பது நாதமுனிகள் வாக்கு.

மிகப் பெரும்பாலானோர் அறியாத இன்னொரு ரகசியம் இருக்கிறது. நாதமுனிகளின் இந்த வாக்கு ஆளவந்தார் வழியாக, அவரது சீடர்கள் வழியாக ராமானுஜருக்கு எட்டியது.

வீராணம் ஏரிக்கு 74 மதகுகள் உண்டு. அதனால்தான் ராமானுஜரும் தன்னை வீராணம் ஏரியாக உருவகப்படுத்தி 74 சிம்மாசனாதிகளை நியமித்தார். எவ்வளவு அருமையான வைணவம்!

ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் மூலமாக எண்ணற்ற பாமரர்கள் வரை சென்று சேர்ந்திருக்கிறது வைணவம். அதற்குக் காரணமான வைணவ செம்மல் ஜெகத்ரட்சகன் அவர்களை பாராட்டாமல் வேறென்ன செய்ய?

ஆழ்வார்கள் ஆய்வு மையம் வளரட்டும்.... ராமானுஜர் புகழ் ஓங்கட்டும்!

விளம்பர பகுதி

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon