மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

டிஜிட்டல் திண்ணை: யாத்திரைக்குத் தயாராகும் ஸ்டாலின்!

டிஜிட்டல் திண்ணை:  யாத்திரைக்குத்  தயாராகும் ஸ்டாலின்!

மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.

“நேற்றைய டிஜிட்டல் திண்ணையில், ‘ஆட்சியைக் கலைக்கும் எண்ணம் இல்லை’ என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சொல்லிவருவதைச் சொல்லியிருந்தேன் இல்லையா... அது எடப்பாடி தரப்பிலும், திமுக தரப்பிலும் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ‘ஆட்சியைக் கலைக்கிற எண்ணம் இல்லை என்று திரும்பவும் பேசி இருக்காங்க. அந்தம்மா ஜெயில்ல இருந்து வந்த பிறகுதான் இப்படி பேச ஆரம்பிச்சிருக்காங்க...’ என அதிமுக எம்.பி. ஒருவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சொல்லி இருக்கிறார். ‘நல்ல விஷயம்தானே.. இனியாவது திருந்தினால் நல்லதுதான்! என்ன நடந்துச்சுன்னு விசாரிக்கச் சொல்லுவோம்’ என சொன்னாராம் எடப்பாடி.

இன்னொரு பக்கம் திமுகவுக்குத்தான் இந்த தகவல் ஷாக். ‘எடப்பாடி ஆட்சிக்கு எதிராக இருப்போம். ஆட்சியை கலைக்கிறதுக்கு எல்லா வகையிலும் நாங்க உங்களோடு இருக்கோம்னு சொல்லிட்டு இருந்தாங்க. இப்போ சசிகலா வெளியே வந்ததும் அவங்க முடிவு மாறின மாதிரி தெரியுது. இவங்களை முழுசா நம்பவே முடியாது’ என ஸ்டாலின் தரப்பில் சொன்னதாகத் தகவல்.

தினகரனை போனில் தொடர்பு கொண்டு சசிகலா வருத்தத்துடன் பேசியதில் இருந்தே அப்செட்டில்தான் இருக்கிறாராம் தினகரன். ‘ஆட்சியையும், கட்சியையும் நம்ம கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத்தானே நான் இவ்வளவு பாடுபட்டுகிட்டு இருக்கேன். அந்த அணியில் இருக்கிறவங்க சொல்றதைக் கேட்டுட்டு சின்னம்மா என்னை திட்டிட்டு இருக்காங்க. அவங்க நோக்கமே எப்படியாவது நம்ம பக்கம் இருக்கிற ஆட்களை அங்கே இழுப்பதுதான். அதுக்காத்தான் எல்லா வேலைகளையும் பார்த்துட்டு இருக்காங்க. நம்ம பக்கம் இருக்கிறவங்க எல்லோரையும் இழுத்துட்டாங்கன்னா நம்ம குடும்பத்துல ஒருத்தரும் கட்சி பக்கமோ, ஆட்சி பக்கமோ நெருங்கவே முடியாது. அதுதான் அவங்க போடுற கணக்கு.. இதை சின்னம்மாவுக்கு சொல்லி புரிய வைக்கணும்..’ என விவேக்கிடம் சொல்லி புலம்பினாராம் தினகரன்” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த வாட்ஸ் அப், வந்திருந்த ஒரு மெசேஜில் சில கரெக்‌ஷன் செய்து செண்ட் கொடுத்தது.

“சசிகலா பரோலில் வெளியே வந்ததிலிருந்து, தி.நகரில் அவர் தங்கியிருக்கும் வீட்டிலேயே இருக்கும் நபர்களில் ஒருவர் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த். சசிகலா வந்ததில் இருந்தே தினகரன் மீது அடுக்கடுக்கான புகார்கள் அவருக்கு வந்தபடியே இருக்கிறது. அதனால், கட்சியில் ஜெய் ஆனந்துக்கு முக்கியப் பொறுப்பைக் கொடுக்கத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். கட்சியில் மட்டுமல்ல... ஜெயா டிவியிலும் ஜெய் ஆனந்துக்கு முக்கியமான பொறுப்பைக் கொடுத்து, எல்லாவற்றையும் கண்காணிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் சசிகலா.

தினகரன் துணைப் பொதுச் செயலாளராக இருந்தாலுமே கட்சியைப் பொறுத்தவரை இனி எல்லா நடவடிக்கைகளிலும் ஜெய் ஆனந்த் தலையீடு இருக்குமாம். ஜெய் ஆனந்த்தைக் கேட்டு முடிவெடுக்கும் வகையில் அவருக்கான முக்கியத்துவம் இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

சசிகலா பரோலில் இருக்கும்போது, இதற்கான அறிவிப்பை வெளியிட்டால், அது சிறை விதிமுறைகளுக்கு எதிரானதாக ஆகிவிடும் என்பதால், பரோல் முடிந்து சிறைக்குத் திரும்பிய பிறகு இதற்கான அறிவிப்பு வரும் என்று சொல்கிறார்கள்” என்பதுதான் அந்த மெசேஜ்.

அதைத் தொடந்து ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்தது ஃபேஸ்புக்.

“நமக்கு நாமே என்ற பெயரில் ஏற்கெனவே தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார் ஸ்டாலின். இப்போது இருக்கும் சூழ்நிலையில் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கலையலாம், தேர்தல் வரலாம் என ஸ்டாலின் நினைக்கிறார். அதனால், மறுபடியும் தமிழகம் முழுக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுவருகிறார். ஏற்கெனவே நமக்கு நாமே என்ற பெயரில் போனது போல இந்த முறை திட்டமிடும் பயணத்துக்கு ‘யாத்திரை’ என பெயர் வைக்கலாமா என டிஸ்கஷன் நடந்துவருகிறது, கன்னியாகுமரியில் தொடங்கும் பயணம், நாகர்கோயில், திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, சேலம், தர்மபுரி, வேலூர், சென்னை எனத் தொடரும் வகையில் ரூட் போட்டிருக்கிறார்கள்.

இந்தப் பயணத்தில் அந்தந்த ஊரில் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் இணைத்துக்கொள்ளும் யோசனையிலும் இருக்கிறாராம் ஸ்டாலின். பயணத்தில், ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள் நடக்கும். அங்கெல்லாம் ஸ்டாலின் பேசுவார் என்பதுதான் இந்தப் பயணத் திட்டமாம். ஸ்டாலினின் யாத்திரை அறிவிப்பு, டூர் புரோகிராம் என எல்லாம் விரைவில் வெளியாகும் என்றார்கள் திமுக வட்டாரத்தில்!” என்பதே அந்த ஸ்டேட்டஸ்.

அதற்கு லைக் போட்டு ஷேர் செய்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

செவ்வாய், 10 அக் 2017

அடுத்ததுchevronRight icon