மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

தடையால் நடுங்கும் பட்டாசு நகரம்!

தடையால் நடுங்கும் பட்டாசு நகரம்!

டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் சிவகாசி பட்டாசுத் தொழிலில் வேலையிழப்பு மற்றும் வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் சுற்றுச் சூழல் மாசுபாட்டுப் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக வாகனப் புகை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்தியாவின் பிற பகுதிகளை விட டெல்லியில் சுற்றுச் சூழல் அதிகளவில் மாசடைந்து வருகிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில் வாகனப் புகையைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் அரசு தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தீபாவளியை முன்னிட்டு டெல்லியில் நவம்பர் 1ஆம் தேதி வரையில் பட்டாசு விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அக்டோபர் 19ஆம் தேதியன்று நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவிருக்கிறது. தீபாவளிக்குப் பட்டாசுகள் வாங்கி வெடித்துக் கொண்டாடுவது வழக்கமான ஒன்று. இந்த ஒரு நாளுக்காகக் காத்திருக்கும் மக்களை விட பட்டாசுத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருக்கும். ஏனெனில் தீபாவளிப் பண்டிகையை நம்பியே இவர்களது வாழ்வாதாரம் உள்ளது. வருடம் முழுவதும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு, தீபாவளிக்கு அவற்றை விற்றுத் தீர்த்தால் தான் அவர்களால் வருவாய் ஈட்ட இயலும். ஏதேனும் சில காரணங்களால் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் விற்பனையாகாமல் போனால் அவர்களின் நிலை கேள்விக்குறிதான்.

டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவரான ஆசைத்தம்பி ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையிடம் கூறுகையில், “நாங்கள் அதிக லாபமீட்டுவது தீபாவளி சமயத்தில்தான். ஆனால் உச்ச நீதிமன்றத் தடையால் நிலைமை தலைகீழாகிவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வழக்காடக் கால அவகாசமும் இல்லை. பட்டாசு வெடிப்பதால் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே மாசுபாடு ஏற்படுகிறது. அதற்காகப் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாகனங்களால் வருடத்தில் 365 நாட்களும் மாசுபாடு ஏற்படுகிறது. அதற்கு என்ன செய்வது?” என்றார்.

சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இத்தொழிலை மட்டுமே நம்பி சுமார் 3 லட்சம் பணியாட்கள் உள்ளனர். மேலும், பேக்கேஜிங், பிரிண்டிங், பேப்பர் ரோலிங் என பட்டாசு சார்ந்து பிற பிரிவுகளிலும் சுமார் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஆண்டுக்கு ரூ.7,000 கோடி வரையில் விற்று முதல் கிடைக்கிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவால் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ரூ.1,000 கோடி வரையில் இழப்பு ஏற்படும் எனவும், பல்வேறு நபர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதால் பட்டாசு உற்பத்தியாளர்களிடையே இந்த உத்தரவு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon