மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

சினிமாவில் தவறுகள்: பாவனா பதிலடி!

சினிமாவில் தவறுகள்: பாவனா பதிலடி!

மலையாள சினிமாவில் நடைபெறுவதாகச் சொல்லப்படும் தவறுகளை அடையாளம் கண்டு தைரியமாக எதிர்ப்பவர்கள் பட்டியலில் நடிகர்களைவிட நடிகைகளே அதிகம். பார்வதி, மஞ்சு வாரியார் என நீளும் அந்த லிஸ்டில் தவிர்க்க முடியாத இடம் பாவனாவுக்கும் உண்டு. அவரிடம் போய் மலையாள சினிமா மோசமாகிவிட்டதா என்று கேட்டால் என்ன பதில் சொல்லியிருப்பார் என யூகிக்க முடியும். ஆனால், இதிலும் கொஞ்சம் வித்தியாசமான அணுகுமுறையைக் கையாண்டிருக்கிறார் பாவனா.

ஆடை வடிவமைப்பாளர் ரெஹானா பஷீர் உருவாக்கிய உடைகளை வெளியிடும் விழா துபாயில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாவனா சில கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். அதில் ஒரு கேள்வி தான், ‘மலையாள சினிமாவில் அதிக தவறு நடைபெறுகிறதா?’ என்பது. இதற்கு பாவனா கொடுத்த பதில் பின்வருமாறு:

“சினிமா எப்போதும் தவறு செய்யாது. யாருக்கு எந்த நிலையைக் கொடுக்க வேண்டும் என்பதை எப்போதும் சினிமா சரியாகவே தெரிந்துவைத்திருக்கும். தவறு செய்வது எப்போதும் தனி நபர்கள்தான். அந்த தனி நபர்களால் மொத்த சினிமாவுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. நீங்கள் சொல்வதுபோல இப்போது நடைபெறும் தவறுகளுக்கு சினிமாவைக் காரணம் காட்டினால், அதே சினிமாவில் இருக்கும் சீனியர் நடிகர்கள் எப்படித் தங்களது வாரிசுகளை சினிமாவில் நடிக்க அனுப்புவார்கள்?” என்று பாவனா கேட்டிருக்கும் பதில் கேள்வி யோசிக்க வைக்கிறது.

வழக்கம்போலவே, திருமணத்துக்குப் பிறகு நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, சினிமா எனது தொழில். அதை நான் எப்போதும் விடமாட்டேன் என்று பதிலளித்திருக்கிறார். ஆனால், “திருமணம் நடைபெறும் ஒரு நாளை நினைத்து மகிழ்ச்சியடைவதைவிட, அந்தத் திருமணத்துக்குப் பிறகான நாட்களை எப்படி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது என்பதைப் பற்றி நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கும் பாவனா கண்டிப்பாக நினைத்ததைச் செய்வார்.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon