மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 10 அக் 2017

டெங்கு: தமிழக அரசுக்குக் கவலையே இல்லை!

டெங்கு: தமிழக அரசுக்குக் கவலையே இல்லை!

டெங்கு பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து தமிழக அரசு கவலைப்படுவதே இல்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 10) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரே நாளில் பள்ளி மாணவி உள்ளிட்ட 17 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் இதயத்தை நடுங்கவைக்கிறது. செயலிழந்த ஆட்சியால் இன்றைக்கு மாநிலத்தின் சுகாதார நிலைமை சகஜ நிலைக்குத் திரும்ப முடியாத அளவுக்கு நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. எதிர்காலக் கனவுகளுடன் வளர்ந்துவரும் மாணவ, மாணவியர், குழந்தைகள் என்று அனைத்துத் தரப்பினரும் டெங்கு காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி நிவாஷினி, வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவி கிருத்திகா, பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவன் சிவகார்த்தி ஆகியோர் அடுத்தடுத்து டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்துள்ள கொடுமை நிகழ்ந்துள்ளது. ஆனால், ‘குதிரை பேர’ அரசோ உயிரைப் பறிக்கும் காய்ச்சலைக்கூடத் தடுக்க முடியாமல் தத்தளித்து நிற்கிறது.

எதிர்க்கட்சிகளை விமர்சிக்க எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஆடம்பரமாகக் கொண்டாடுவதற்கு அரசுப் பணத்தைக் கோடி கோடியாக வாரி இறைக்கும் இந்தக் கேடுகெட்ட அரசு, டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நிர்வாகத் திறமை இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது.

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சைகள் கிடைக்க மருத்துவமனைகளில் போதிய வசதிகளை ஏற்படுத்தவில்லை. பல அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள்கூட இல்லாமல் அவதிப்படும் நிலை உள்ளது. ஆனால், “அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்” என்பதுபோல் இந்த ‘குதிரை பேர’ அரசு விளம்பர மோகத்திலும், வீண் செலவுகளிலும், வீறாப்புப் பேச்சுகளிலும் கவனம் செலுத்துகிறதே தவிர, பொதுமக்களின் உயிரைப் பறிக்கும் டெங்கு காய்ச்சலை ஒழிக்க முடியாமல் தடுமாறி நிற்கிறது.

“கொசு ஒழிப்பிற்கு 16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு விட்டது” என்று ‘குட்கா’ அமைச்சரும்,அவருக்குத் துணைப்போகும் அரசு சுகாதாரத் துறைச் செயலாளரும் கூறிவந்தாலும், ஊடங்களில், “டெங்கு பரப்பும் கொசுவை ஒழிக்க முடியாததற்குத் தரம் குறைந்த மருந்துகள் பயன்படுத்தப்படுவதே காரணம்” என இன்று வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

‘நீட்’ தேர்வில் பொதுமக்களையும் மாணவ, மாணவியரையும் நம்ப வைத்துக் கழுத்தை அறுத்தது போல், டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கையை மறைத்தும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தும் குறிப்பிட்டு சுகாதாரத் துறையின் செயலாளர், அமைச்சர், முதலமைச்சர் ஆகியோர் இணைந்து ஒரு மோசடி நாடகத்தை நடத்தி, தமிழக மக்களை டெங்கு பீதியில் உறைய வைத்துள்ளார்கள்.

ஏறக்குறைய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு ஜுரத்தால் பாதிக்கப்பட்டு, தினமும் ஆங்காங்கே கொத்துக் கொத்தாக மரணங்கள் நிகழ்ந்துவந்தாலும், விழாக் கொண்டாட்டங்களில் மட்டும் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி கவனம் செலுத்துவதால், மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, மாநிலத்தில் தினமும் மரணங்கள் ஏற்படுவதற்குக் காரணமான டெங்கு காய்ச்சலைத் தடுக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக சட்டமன்ற பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்”

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon