மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 15 ஜன 2021

சிகிச்சையில் சந்தேகப்படுவது அரசியல் நாகரிகமா?

சிகிச்சையில் சந்தேகப்படுவது அரசியல் நாகரிகமா?

புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான எம். நடராசன் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாகி, அண்மையில் அவருக்கு சிறுநீரக, கல்லீரல் மாற்று சிகிச்சையும் நடத்தப்பட்டது. இப்போது உடல் நலம் தேறி வருகிறார்.

இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்திருப்பதில் சந்தேகம் இருக்கிறது அதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், ‘விசாரணை நடத்தினால் நடத்தட்டும்’ என்று கூறினார்.

இந்த நிலையில், ‘சிகிச்சையில்கூட சந்தேகம் தெரிவிப்பது அரசியல் நாகரிகமா?” என்று நடராஜனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

இது பற்றி இன்று (அக்டோபர் 10) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரைப் பார்த்து கண் கலங்கினாரே தந்தை பெரியார் - இத்தனைக்கும் ஒருவருக்கொருவர் அன்பார்ந்த எதிரிகள் என்று வர்ணித்துக்கொண்டவர்கள்! அறிஞர் அண்ணா பொது மருத்துவமனையில் இருந்தபோது, கலைஞரையும், மற்ற மூத்த அமைச்சர்களையும், ’இவரை வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லாமல் இன்னமும் ஏன் தாமதிக்கிறீர்கள்?’ என்று கடிந்துகொண்டார் பெருந் தலைவர் காமராசர்!

தமிழக அதிமுக அமைச்சர்கள் சிலர் - இப்படி மனிதாபிமானமற்று (முன்பு நெடுஞ்சாண் கிடையாக அவர் காலில் விழுந்து, அவர் பெயரைக்கூட உச்சரிக்கும் தைரியமற்ற இந்த வீரர்கள்) இன்று தரக்குறைவான - கேள்விகளை எழுப்புவது, சம்பந்தமில்லாமல் பேசுவது தமிழ் மண்ணுக்கு ஏற்புடையதா? வடக்கே உள்ள பல கட்சித் தலைவர்கள்கூடப் பண்பு தவறாமல் நடக்கிறார்களே - இங்கே அரசியல் இவ்வளவு தரம் குறைந்து போகலாமா?

இந்தப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். தனிப்பட்ட முறையில் எவர்மீதும் நமக்கு விருப்பு வெறுப்பு இல்லை. பொது நிலையில் நின்று யோசிக்கும் போது, இப்படி நோயாளிகளிடம்கூட மனிதாபிமானம் காட்டாத மந்திரி பதவி, கட்சித் தலைவி பதவி அரசியல்மீது என்றைக்கு மண் மூடும் என்பதுதான் நம் நெஞ்சை உறுத்தும் கேள்வி’’ என்று கூறியிருக்கிறார் கி.வீரமணி.

நடராஜனும் வீரமணியும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon