மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து!

பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து!

கோவை நீலாம்பூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

சூலூர் அருகே நீலாம்பூர் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இந்தப் பள்ளி கட்டிடம் கடந்த 2015ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாகவும், எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டிவந்த நிலையில், பள்ளியின் மேற்கூரை தொடர்பாகத் தலைமை ஆசிரியர் கடந்த 17ஆம் தேதி கல்வித் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் கல்வி துறை இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் இன்று (அக்டோபர் 10) காலை அப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் பள்ளிக் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அப்பகுதி மக்கள் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து அப்பகுதியில் முற்றுகையிட்டு வருகின்றனர். சம்பவம் அறிந்து வந்த காவல் துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகள் பள்ளியின் மேற்கூரை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதுபோல் அக்டோபர் 3ஆம் தேதி வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள சேம்பள்ளி ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர்களும் மாணவர்களும் காயமடைந்தது இங்கு நினைவுகூரத்தக்கது. தமிழகம் முழுவதும் இதுபோன்று சேதமடைந்த அரசுப் பள்ளிகளை ஆய்வு நடத்திச் சீர் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோருகிறார்கள்.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon