மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 21 அக் 2020

வைகோவின் கனவுப் படம் பாகுபலியை மிஞ்சுமா?

வைகோவின் கனவுப் படம் பாகுபலியை மிஞ்சுமா?

சிவகங்கை அரசி வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தை 'கண்ணகி பிலிம்ஸ்' சார்பில் மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளார் வைகோ. அதுவே தனது கனவு என்று அவர் கூறியிருக்கிறார்.

நேற்று (அக்டோபர் 9) சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு நாடகமாக நடத்திக் காண்பிக்கப்பட்டது. இவ்விழாவில் நாசர், விஷால், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், விஜயகுமார்,பார்த்திபன்,கஸ்தூரி ஆகியோருடன் வைகோவும் கலந்துகொண்டு சிறப்பித்தார். நாடகம் முடிவடைந்ததும் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியிடப்பட்டது.

இந்த விழாவில் பேசிய வைகோ, "பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்துப் போராடி முதன் முதலில் வெற்றி கண்டவர் வேலு நாச்சியார். அவருடைய வாழ்க்கை வரலாற்றைக் கூறும் இந்த நாட்டிய நாடகத்தைக் காண வந்த அனைவருக்கும் நன்றி. உணர்ச்சிகளின் கொந்தளிப்பான நடிப்பால் நடிகர் திலகம் நமக்கு எப்படி வீரபாண்டிய கட்டபொம்மனாகக் காட்சி அளித்தாரோ அதைப் போல சகோதரி மணிமேகலை சர்மா வேலு நாச்சியாராகவே இங்கு காட்சி அளித்தார். இந்தக் காவியத்தைத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுவதற்கான காரணம், இந்நாடகத்தில் ஹைதர் அலியும் வேலு நாச்சியாரும் சந்திக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. அவர்கள் இருவருக்கும் இருந்த நட்பு, இன்று இந்து முஸ்லிம் ஒற்றுமையை நிலை நாட்டுகின்ற ஒரு உணர்வு தமிழ்நாட்டுக்குத் தேவை என்பதை நினைவுட்டுகிறது. வேலு நாச்சியார் திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு அதை 'கண்ணகி பிலிம்ஸ்' மூலம் தயாரிப்பதில் பெருமைப்படுகிறேன்" என்று தெரிவித்தார்.

பிரிட்டிஷ் அரசின் வரிக் கொள்கைக்கு எதிராகப் போரடி வெற்றி பெற்று வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்டெடுத்தார். தமிழக அரசிடம் இருந்து கேளிக்கை வரியை ரத்துசெய்யக் கோரிக்கை வைத்து அதிலிருந்து தமிழ் சினிமா துறையை மீட்டெடுப்பது எப்படி என்று நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம், என்று பேசிய நடிகர் விஷால், "இந்த நாடகத்தின் முடிவைப் போன்றே எங்களுக்கும் நல்ல தீர்ப்பு கிடைக்கும், தமிழ் சினிமா துறைக்கு பாதுகாப்பான ஒரு பாதை உருவாகும். அனைவரும் செழிப்பாக இருப்போம் என்ற நம்பிக்கையை எனக்களித்த வேலு நாச்சியார் கதாபாத்திரத்தை என்றும் மறக்க மாட்டேன். அதே வீரத்தோடு, கேளிக்கை வரியை ரத்துசெய்யக் கோரி, புத்தியால் முயற்சி செய்து, எப்படியாவது அந்த வரியை முழுமையாக நீக்க அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்" என்று கூறினார்.

நாம் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் கனவு காண்கின்றோம், கோட்டைகள் கட்டுகிறோம், வானுயரச் செல்லுகிறோம். நம்முடைய சரித்திரம் தெரியாமல், எதிர்காலத்தை வடிவமைப்பது சாத்தியமில்லை என்று கூறிய நடிகர் நாசர், "வரலாறு சொல்லும் எல்லாப் போராட்டங்களும் சுதந்திரத்துக்காக நடந்தவையே. வேலு நாச்சியாரின் வரலாறு படமாக்கப்படுவது நம்முடைய கடமை. ஒரு வட்டாரத்தில் சிறிய நாடகமாக இருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் திரைப்படமாக எடுக்கப்படாவிடில் இன்று அந்த சரித்திரம் நமக்கு தெரிந்திருக்காது. அவருக்கு இணையான அல்லது அதற்கும் மேலான ஒரு வரலாறுதான் வேலு நாச்சியாருடையது. இன்றும் பெண்களுக்கு சுதந்திரம் வழங்கப்படுவது போல் வழங்கப்பட்டு அடிமைகளாகத்தான் வைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் ஆயிரம் ஆண்களை ஒருநிலைப்படுத்தி ஆங்கிலேயர்களை எதிர்த்த வேலு நாச்சியாரின் வரலாறு திரைப்படமாகப் பதிவு செய்யப்படவேண்டிய ஒன்று" என்று கூறினார்.

மேலும், அவர்,"கற்பனையில் வடிக்கப்பட்ட பாகுபலி என்ற திரைப்படம் உலகத்தை ஈர்க்கும் என்றால் மண்ணின் சுவாசமும் உலகத்தை ஈர்க்கும். இந்தப் படத்தை வணிக ரீதியாக அணுகினால்தான் பெரும் முதலீடு வரும். இன்று தொழில்நுட்பம் விரிவடைந்துள்ளது. இங்கு, நாடக வடிவம் வேறு, திரைப்பட வடிவம் வேறு, எனவே இந்த சமகால சினிமாவை உள்வாங்கி அதற்கேற்றவாறு திரைப்படத்தை உருவாக்குங்கள்" என்று வலியுறுத்தினர்.

வேலு நாச்சியார் வாழ்க்கையைப் படமாக உருவாக்குவது குறித்து இயக்குநர் ஸ்ரீராம் சர்மா,"இந்த வரலாற்றுக் காவியத்தை கடந்த ஆறு ஆண்டுகளாக நாடக வடிவில் அரங்கேற்றி வருகிறோம். இதுவரையில் சென்னை, மும்பை, டெல்லி மற்றும் அமெரிக்காவின் நியுயார்க், வாஷிங்டன் டிசி, அட்லாண்டா, நியூஜெர்சி உள்ளிட்ட பல பகுதிகளில் நாட்டிய நாடகமாக 60 பேர் கொண்ட குழுவால் இதுவரை 24 முறை அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த நாடகத்தை அனைத்து இடங்களுக்கும் கொண்டுசெல்லப் பொருளாதார உதவியில் இருந்து அனைத்து உதவிகளையும் செய்தது வைகோ அவர்கள்தான். தற்போது இந்த நாடகத்தைத் திரைப்பட வடிவில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். வைகோ அவர்கள் கதை, வசனம் எழுதி, தயாரிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இது பாகுபலி போன்று கற்பனைக் கதை அல்ல. உண்மை சரித்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் படம், எனவே திரைக்கதையில் வரலாற்று அறிஞர்களின் உள்ளீடுகள் இருக்கும்" என்று தெரிவித்தார்.

மேலும், அவர்,"பிரம்மாண்டம் என்பது வெறும் சோடனை மட்டும் அல்ல; அது திரைக்கதையிலும் இருக்க வேண்டும். அது கண்டிப்பாக வேலுநாச்சியார் படத்தில் இருக்கும். கடந்த பத்து ஆண்டுகளாக நான் அனிமேஷன் துறையில் பணியாற்றிவருவதால், அனிமேஷன் தொழில்நுட்பம் குறித்து நல்ல புரிதல் உள்ளது. மேலும் என்னுடைய பல நண்பர்கள் இந்தத் துறையில் முக்கியப் பொறுப்பில் உள்ளார்கள். அவர்களுடைய பங்களிப்பும் இந்த படத்தில் இருக்கும். தற்போது திரைக்கதையில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறோம். கூடிய விரைவில், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும். 18ஆம் நூற்றாண்டை மையமாகக் கொண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த ஆண்டின் மத்தியில் தொடங்கும்" என்று தெரிவித்தார்.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon