மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

திரையரங்க டிக்கெட்: ஒரே விலை வேண்டும்!

திரையரங்க டிக்கெட்: ஒரே விலை வேண்டும்!

திரையரங்க டிக்கெட் கட்டண உயர்வு குறித்து சமூக வலைதளத்தில் பதிவிடப்படும் பொதுமக்களின் கருத்துகளுக்குத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு பதிலளித்திருக்கிறார்.

தமிழக அரசு திரையரங்க கட்டணத்தை 25% உயர்த்தி இருக்கிறது. இந்தப் புதிய கட்டணம் நேற்று (அக். 9) முதல் அமலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்தப் புதிய கட்டண நிர்ணயத்தால் திரையுலகினர் கடும் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். சென்னையில் உள்ள திரையரங்குகள் தவிர மற்றவற்றுக்கு மிகவும் குறைந்த விலையை நிர்ணயித்துள்ளதாகவும், அவற்றின் கட்டணம் குறித்து மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று திரைத்துறை சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் விலை உயர்வைத் தொடர்ந்து, சமூக வலைதளத்தில் பலரும், "இனிமேல் இணையதளத்தில் படம் பார்த்துக்கொள்ள வேண்டியது தான்" என்று கருத்து தெரிவித்திருந்தார்கள். இதனையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு தனது முகநூல் பக்கத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், "கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்திற்கு முதலமைச்சர்களைத் தந்த திரைத்துறையால், திரைத்துறையின் சிக்கல்கள் பற்றி அவர்களுக்குப் புரிய வைக்கவோ அல்லது புரிந்தும் சிலவற்றைச் சாதிக்கவோ இயலவில்லை. டிக்கெட் விலையைச் சீரமைப்பதில் அரசுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "அத்தியாவசிய பொருட்கள் அனைத்தின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மக்கள் மாட்டு மந்தைகள் போல் எதுவும் சொல்லாமல் வாய்மூடி செல்கின்றனர். ஆனால் பத்து வருடங்கள் கழித்து 25% டிக்கெட் விலை உயர்த்தியதற்கு வீராவேசமாக `நாங்கள் திருட்டுத்தனமாகப் பார்த்துக்கொள்கிறோம்' என்கின்றனர். `ஏன்டா பருப்பு விலை அதிகமென்று கடையில் போய் திருடிப் பாரேன்னு' சொல்லத் தோன்றுகிறது. இதோ இன்று '150 +ஜிஎஸ்டி+புக்கிங் சார்ஜ்ஸ்' என அனைவரும் சினிமாவை ஒதுக்குவது பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள்".

"தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1150 திரையரங்குகளில் இந்த 150 ரூபாய் கட்டணத்தில் 10% மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மட்டுமே உள்ளன. மீதமுள்ள திரையரங்குகளில் சுமார் 30% திரையரங்குகள் 70 ரூபாய் கட்டணத்திலும், எஞ்சிய 60% திரையரங்குகள் 25ரூபாய் கட்டணத்திலும் இனி நடத்த வேண்டிவரும். இதில் 10% கேளிக்கை வரியும் அடக்கம். இதுவரை 50 ரூபாய் முதல் 200 ரூபாய்வரை வாங்கிக்கொண்டிருந்த 80% திரை அரங்குகள் இனி இந்தப் புதிய கட்டணத்தில்தான் நடத்த வேண்டும் என்றால் அது சாத்தியமே இல்லை" என்றதோடு,

"டாஸ்மாக் நடத்தும் அரசு 128 மில்லி பிராந்தியை பஞ்சாயத்திலும் தாலுகாவிலும் ஒரு விலையில் விற்பதில்லை. எங்கு திரை அரங்கு அமைந்தாலும் அங்கு சிமெண்ட், கரண்ட், தொழில்நுட்ப சாதனங்கள் என அனைத்தும் ஒரே விலைதான். அப்படி இருக்க, திரையரங்க டிக்கெட் விலையை மட்டும் எப்படி ஏரியாவிற்கு ஏரியா மாற்றி விலை நிர்ணயம் செய்கிறது அரசு? என்ன சொல்லி அரசுக்கும், மக்களுக்கும் இந்த பிரச்சினைகளைப் புரியவைப்பது? இனி நடக்கப்போகும் நாடகங்கள் அனைவருக்கும் ஒரு உணர்வுபூர்வமான காமெடி படமாக வரப்போகிறது என்பது மட்டும் உண்மை" என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon