மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

ஜூனியர் கால்பந்து: இந்தியாவின் போராட்டம் வீண்!

ஜூனியர் கால்பந்து: இந்தியாவின் போராட்டம் வீண்!

ஜூனியர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி, கொலம்பியா அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

டெல்லியில் நேற்று (அக்டோபர் 9) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி, கொலம்பியாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடியதால், முதல் பாதியில் கோல்கள் எதுவும் விழவில்லை. பின்னர் நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் கொலம்பிய வீரர் பீனாலோஸா கோலடிக்க, அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதற்கு பதில் கோல் அடிக்கப் போராடிய இந்திய அணிக்கு, ஜேக்சன் 82வது நிமிடத்தில் கோல் அடித்து ஸ்கோரை சமன் செய்தார். ஆட்டம் டிராவில் முடியும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அடுத்த நிமிடத்திலேயே பீனாலோஸா இரண்டாவது கோல் அடித்தார். கடைசி நிமிடங்களில் இந்திய வீரர்களின் போராட்டம் வீணானது. இறுதியில் கொலம்பியா அணி, 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு இது 2வது தோல்வியாகும். முன்னதாக முதல் ஆட்டத்தில் இந்தியா 0-3 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க அணியும், கானா அணியும் மோதின. இரு அணிகளும் சிறப்பாக ஆடியதால் முதல் பாதி ஆட்டம் கோல் இன்றி முடிந்தது. பின்னர் நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தின் 63வது நிமிடத்தில் களமிறங்கிய மாற்று ஆட்டக்காரரான அயோ அகினோலா, 75வது நிமிடத்தில் ஒரு கோலடிக்க, அமெரிக்கா 1-0 என முன்னிலை பெற்றது. அதன் பிறகு கானா அணியால் கோல் அடிக்கமுடியவில்லை. இறுதியில் அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் கானாவை வீழ்த்தி, நாக் அவுட் சுற்றான காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

`ஏ' பிரிவில் அமெரிக்க அணி இரண்டு போட்டிகளில் விளையாடி, இரண்டிலுமே வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. கொலம்பியா மற்றும் கானா தலா ஒரு வெற்றியுடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அணி இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலுமே தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது. இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறும், கானாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon