மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

தமிழ் சினிமாவின் ‘தாய்க் கிழவி’ நினைவு நாள்!

தமிழ் சினிமாவின் ‘தாய்க் கிழவி’ நினைவு நாள்!

-சிவா

“இந்த கண்ணாத்தா கிட்டயேவாடா?” என்று கையில் கம்புடன் அடிக்கத் துரத்தியபோது தெரியவில்லை இந்தக் கிழவியை இவ்வளவு காதலிக்கப்போகிறோம் என்பது. ராஜ் டிவியாகத் தான்இருக்க வேண்டும். ஒரு கார் வைத்துக்கொண்டு செய்யும் சேட்டைகள் அனைத்தும் அத்தனை சிரிப்பையும் ஆச்சரியத்தையும் வரவழைத்தன. ‘பாட்டி சொல்லை தட்டாதே’ படத்தைஇரண்டாயிரமாவது வருடத்தில் கருத்து தெரியும் வயதில் இருந்த அனைவரும் கார் செய்த சேட்டைகளுக்காகவே பார்த்தனர். அப்போது பெரும்பாலும் வயதான கேரக்டரிலேயே அதிகம்தென்பட்டதால் ‘தாய்க் கிழவி’ என்றே அந்த தலைமுறைக்கு அறியப்பட்டார் ஆச்சி மனோரமா. ஆனால், சிறு பிள்ளைகளையும் கவர்ந்திழுத்த ஏதோ ஒன்று அவரிடம் இருந்தது. அப்படி இழுக்கப்பட்ட பல ரசிகர்களுள் நானும் ஒருவன்.

கவுண்டமணியும், வடிவேலுவும் மகான்களாக அறியப்படும் இந்த டிஜிட்டல் பனிப்போர் காலத்தில் மனோரமாவும் யாரும், அறிந்தோ அறியாமலோ சம அளவுக்குப் புகழப்பட்டுக்கொண்டிருக்கிறார். மனோரமா என்ற ஆளுமையின் திறமையையும் இந்தத் தலைமுறை நேரில் பார்த்திருக்கிறது. அவரது பங்களிப்பையும் இழப்பையும் ஒருசேர அடையாளம் கண்டிருக்கும் தலைமுறை இது. அது எப்படிச் சாத்தியமானது என்பதுதான் கேள்வி.

பாட்டி சொல்லை தட்டாதே திரைப்படத்தில் கண்ணாத்தாவாகச் சிறுவர்களை இழுத்தார் என்றால், கவுண்டமணியுடன் ‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’ படத்தில் சரியான ரகளைசெய்திருப்பார். உள்ளாடை வாங்குவது பற்றி கவுண்டமணி பேசிக்கொண்டிருக்க, அங்கே வரும் ஆச்சி எனக்கும் ரெண்டு வாங்கிட்டு வரச்சொல்லுங்க என்று அசால்ட்டாக பத்தவைத்துப்போட்ட வெடி இப்போதுகூட நம் வாழ்வில் தேவையான இடம்கிடைக்கும்போது படபடவென வெடிக்கும். கஞ்சத்தனமான ஒரு கேரக்டரை வைத்து ஆயிரம் படங்கள் வந்தாலும், தங்கமான புருஷன்திரைப்படத்தில் ஆச்சி நடித்த கேரக்டர்போல வருமா? இயக்குநர் இராம. நாராயணன் உருவாக்கிய கேரக்டர் என்றாலும் முழுக்க முழுக்க ஆச்சியை நம்பி எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதுஅப்போதே தெரிந்தது.

மற்றவர்களைப் போல காமெடிக்கு மட்டும் மனோரமா என்ற ஆளுமை பயன்படுத்தப்படவில்லை. சிரிப்பு, அழுகை, அன்பு, பாசம், காதல், பாடல் என எந்தக் களத்தில் விட்டாலும் சுத்தி சுத்தி அடிக்கும் ஆல்-ரவுண்டராக இருந்தார் என்றால் எத்தனை ஆச்சரியம். இனி தமிழ் சினிமா இப்படியொரு பன்முகத் திறமை கொண்ட பெண் கலைஞரை எப்போது உருவாக்கும்!

எந்த ஒன்றையும் உருவாக்குவதைவிடவும் மக்களிடையே கொண்டுசெல்வதில்தான் மிகப் பெரிய திறமை வேண்டும். அப்படி, தமிழ் சினிமாவின் மூலம் அடித்தட்டு மக்களின் மொழியாக ஒரு தமிழ் மொழி பரவலாக்கப்பட்டது. அந்த மொழியைப் பலருக்கும் கொண்டுபோய் சேர்க்க ஆச்சி எப்படிப் பயன்பட்டார் என்பதைத் தமிழ் சினிமா அறியும். அவரும் அறிவார். அதனால்தானோ என்னவோ கடைசியாக அவர் கலந்துகொண்ட சினிமா பத்திரிகையாளர்கள் சங்க விழாவில் சென்னைத் தமிழிலும், செந்தமிழிலும் உரையாற்றினார். அவர் வழியாகவே சொல்வதென்றால் ‘இன்னாடா இன்னாடா மகிமை’ என்றுதான் சொல்ல வேண்டும்.

சில படங்களைப் பார்க்கும்போது இக்கால இளவட்டங்கள் ‘ஓவர் ஆக்டிங்’ என்ற சுருக்குப் பைக்குள் ஆச்சியை அடைக்க நினைக்கிறார்கள். சின்னத் தம்பி, நாட்டாமை, நட்புக்காக, சின்ன கவுண்டர், எஜமான் எனச் சில படங்களை அந்த லிஸ்டிலும் வைக்கிறார்கள். சினிமாத்தனமாக நடிகை மனோரமா இல்லையென்பதைப் படத்திலிருந்து ஆயிரம் வழிகளில் விளக்கலாம். ஆனால் நேரடி அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து கொள்வது அதைவிட சிறப்பாக இருக்கும்.

கல்லூரி மாணவர்களின் ‘பசுமை காப்போம்’ என்ற ஒரு நிகழ்வுக்காக இயற்கையைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் பற்றி மனோரமாவிடம் சிறு பேட்டியெடுக்கச் சென்றோம். இளம்மாணவர்கள் என்பதால் யாரும் செய்யாத ஒன்றைச் செய்ய வேண்டுமென விரும்பி அவர்கள் செய்தது ஒளிப்பதிவாளராக அவர்களுடன் சென்ற எனக்குப் பயன்பட்டது. திரை மறைக்கும் குறைந்தஒளியில்கூட எதிரே நிற்பவரை அடையாளம் காண முடியாத அளவுக்குப் பார்வைத் திறன் குறைந்திருந்த மனோரமா கேமராவுக்குக் கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது. “நான் தலையையும்கண்ணையும் ஒரே மாதிரியா திருப்பிக்கிட்டு வர்றேன். ஃபிரேம்ல தலை நேரா வரும்போது சொல்லுங்க தம்பி” என்று ஃபிரேமுக்குள் அவராகவே வந்தார். “சொல்லுங்கப்பா என்ன பிரச்னை?”என்றவரிடம், இயற்கையைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் பற்றி சொல்லுங்கம்மா எனக் கேட்டதும் ரெடியானார்.

“மரம், செடி, கொடியெல்லாம் அழிச்சு என்னய்யா பண்ணப்போறீங்க. ஒரு மரத்தை வெட்ட ஒரு நிமிஷம் போதும். ஆனால், ஒரு மரத்தை வளக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா. நமக்கேதெரியாம வெய்யில் அதிகமா இருக்கும்போது மரத்தடில தான் ஒதுங்கி நிப்போம். ஆனா, அந்த மரத்துக்கு நன்றி சொல்வோமா. மாட்டோம். ஆனா, நமக்கே தெரியாம அந்த மரம் நமக்கு உதவுது. அதனால நிறைய செடி நடுங்க. மரம் தேவைப்படலைன்னு நீங்க நினைக்கலாம். ஆனா, அடுத்த தலைமுறைக்கு கண்டிப்பா தேவைப்படும். என் வீட்டுக்கு வந்து பாருங்க, நான் வெச்சமரமெல்லாம் இன்னைக்கு என் பேரப்பிள்ளைங்க விளையாட பயன்படுது. இதைவிட நமக்கு எதுப்பா சந்தோஷம் தரும்?” எனப் பேசிவிட்டு, அடுத்து என்ன என்று கேட்டார். எங்ககிட்ட இருந்த எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிட்டீங்கம்மா, நாங்க கட் பண்ணிக்கிறோம் என்று சொல்லிவிட்டுப் போனார்கள் அந்த மாணவர்கள்.

ஒரு வாரம் கழித்து கல்லூரி விழா முடிந்ததும், ஆச்சியின் பேச்சில் எந்த இடத்திலும் வெட்ட முடியாததால் அப்படியே முழுவதையும் ஒரே வீடியோவாகப் பயன்படுத்திவிட்டதாகச் சொன்னபோது ஆச்சி என்ற ஆளுமையின் எல்லை புரிந்தது.

வயது, ஒரு தடையாக அந்த ‘கணீர் கிழவி’க்கு இருந்ததில்லை. அவரது ரசிகர்கள் மட்டுமே இறுதிக் காலத்தில் அவரிடமிருந்து தள்ளி வைக்கப்பட்டனர். அதனால்தானோ என்னவோ ஒரு வழியாக உங்களையெல்லாம் சந்தித்ததில் சந்தோஷம் என அந்த விழாவில் பேசிவிட்டுச் சென்றவரை உடல் இயக்கத்துடன் அடுத்த முறை யாராலும் பார்க்க முடியவில்லை. இந்தக் குற்ற உணர்ச்சியுடனே நம்மை மகிழ்விக்க அவர் நடித்த வாழ்ந்துவிட்டுப்போன கேரக்டர்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்க வேண்டும்.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon