டெங்கு உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி தொடர்ந்த வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் டெங்குவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் போதிய சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் சிரமப்படுகிறார்கள். எனினும், தமிழகத்தில் டெங்குவால் 35 பேர் மட்டுமே உயிரிழந்ததாக சுகாதாரத் துறை செயலர் அக்டோபர் 8ஆம் தேதி தெரிவித்தார்.
இந்நிலையில் டெங்குவால் உயிரிழப்புது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் டெங்கு பாதிப்பைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ .5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துச் செயல்பட வேண்டிய ஆய்வகங்கள் முறையே செயல்படுவதில்லை.எனவே, மதுரையில் 33 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் பூச்சியியல் ஆய்வகத்தைப் புதுச்சேரிக்கு மாற்றும் அரசின் முடிவைக் கைவிட வேண்டும் என்றும் தன்னுடைய மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று (அக் 1௦) விசாரணைக்கு வந்தது. டெங்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய மாநில அரசுகள் அக்டோபர் 24ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.