மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

குட்கா விவகாரம்: எப்ஐஆரில் மிஸ்ஸான அமைச்சர்!

குட்கா விவகாரம்: எப்ஐஆரில் மிஸ்ஸான அமைச்சர்!

பரபரப்பாக பேசப்படும் குட்கா ஊழல் விவகாரத்தில், காவல்துறை தாக்கல் செய்துள்ள எப்ஐஆரில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பெயர் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருளை விற்பனை செய்ய அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உயரதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாகவும், இதுதொடர்பாக விசாரிக்கக் கோரி வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு புகார் கடிதம் அனுப்பியதாகவும் நாளேடுகளில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, அமைச்சர், காவல்துறை உயரதிகாரிகள் பதவிவிலக வேண்டுமென சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். இதுகுறித்து சிபிஐ விசாரணை கோரி திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

குட்கா ஊழல் தொடர்பாக பல்வேறு தலைவர்களும் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இதுதொடர்பாக உயர்நீதிமன்றக் கிளையில் கதிரேசன் என்பவர் தாக்கல் செய்திருந்த வழக்கு தொடர்பாக, பதில்மனு தாக்கல் செய்த தலைமை செயலாளர்,"தங்கள் தரப்பு ஆவணங்களை ஆய்வு செய்தபோது வருமான வரித்துறை அனுப்பியதாக எந்த கடிதமும் தங்களுக்கு வரவில்லை" என்று கூறியிருந்தார். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. தலைமை செயலாளர் உண்மையை மறைக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. தொடர்ந்து குட்கா விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு இயக்குனர் தலைமையில் நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த சூழ்நிலையில் குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக தற்போது ஊழல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். ஆனால் அதில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் பெயர்கள் இடம்பெயரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மொத்த 17 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் தகவல் அறிக்கையில், செங்குன்றம் உதவி ஆணையர் மற்றும் அவருக்கு கீழ் உள்ள காவல் துறையினர், வணிகவரித்துறை அதிகாரிகள், உணவுத் தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், குட்கா கிடங்கு நடத்தி வந்த மாதவராவ் மற்றும் அவரது உதவியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon