மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

சந்தானம் கைது?

சந்தானம் கைது?

பணத் தகராறில் ஏற்பட்ட மோதலில் கட்டிட காண்டிராக்டரைத் தாக்கியதாக நடிகர் சந்தானம் மீது காவல் துறையில் கொடுத்த புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நகைச்சுவை நடிகர் சந்தானம், வளசரவாக்கம், சௌத்ரி நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் சண்முக சுந்தரம் என்பவரிடம் குன்றத்தூரை அடுத்த கோவூர், மூன்றாம் கட்டளை பகுதியில் கல்யாண மண்டபத்துடன் கூடிய அடுக்குமாடி கட்டிடம் கட்ட ஒப்பந்தம் செய்துகொண்டதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதற்காக சந்தானம் தனது பங்களிப்பாக ஒரு பெரிய தொகையை சண்முக சுந்தரத்திடம் கொடுத்துள்ளார். பின்பு சில காரணங்களால் கட்டிடம் கட்டும் முடிவை இருவரும் நிறுத்திவிட்டனர். இதையடுத்து சந்தானம் தான் கொடுத்த பணத்தை சண்முக சுந்தரத்திடம் திருப்பிக் கேட்டுள்ளார்.

இதனையடுத்து, அதில் குறிப்பிட்ட தொகையை சண்முகசுந்தரம், சந்தானத்திடம் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மீதம் தர வேண்டிய தொகையை தருமாறு சந்தானம் கேட்டு வந்தார். ஆனால் சண்முகசுந்தரம் மீதி தொகையை கொடுக்காமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று மாலை சந்தானம் தனது மேலாளர் ரமேஷுடன் வளசரவாக்கத்தில் உள்ள சண்முக சுந்தரம் அலுவலகத்திற்கு வந்து பணத்தைக் கேட்டுள்ளார். அங்கு சண்முக சுந்தரம் மற்றும் அவரது நண்பர் பிரேம் ஆனந்த் ஆகியோர் இருந்துள்ளனர்.

இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அதுவே கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது. சண்முக சுந்தரத்துக்கு ஆதரவாக வந்த பிரேம் ஆனந்த் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் சந்தானமும் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில், சந்தானம் கொடுத்த புகாரின் பேரில் காண்டிராக்டர் சண்முகசுந்தரம் மற்றும் வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் காண்டிராக்டர் கொடுத்த புகாரின் பேரில் சந்தானம் மீதும் கொலை மிரட்டல், ஆபாசமாகப் பேசியது, தாக்கியது என்று மூன்று பிரிவுகளில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரில் சந்தானத்தை கைது செய்வது குறித்து போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon