மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் சிலை!

அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் சிலை!

உத்தரப் பிரதேசத்தில் ஆன்மிகச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் ராமருக்கு அயோத்தியில், 100 அடி உயரத்தில் சிலை வைக்க யோகி ஆதித்யநாத் அரசு திட்டமிட்டுவருகிறது.

உத்தரப் பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு புதிய திட்டங்களை அறிவித்துவருகிறது. அந்த வரிசையில் உ.பி.யின் சுற்றுலா அமைச்சகம், ராமருக்கு மிகப் பெரிய சிலை வைக்கும் திட்ட வரைவை முன்மொழிந்துள்ளது. ராமர் பிறந்த இடம் என்று கூறப்படும் அயோத்தி, உத்தரப் பிரதேச மாநிலத்தின் பைசாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதை, ராமஜென்ம பூமி என்றும் அழைப்பார்கள்.

இந்நகரத்தை ஒட்டியுள்ள சரயு ஆற்றங்கரையில்தான் ராமருக்கு 100 அடி உயரத்தில் பிரமாண்டமான சிலை வைக்கத் திட்டமிட்டுள்ளது. சிலை அமைப்பது குறித்த வரைவுத் திட்டம் உத்தரப் பிரதேச ஆளுநர் ராம் நாயக்கிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மொத்த திட்ட மதிப்பீடு ரூ.195.89 கோடி என மத்தியச் சுற்றுலாத் துறைக்கு மாநில அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை ஏற்று ரூ.133.70 கோடியை உடனடியாக மத்தியச் சுற்றுலாத் துறை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மாவைச் சந்தித்து ராமாயண அருங்காட்சியகம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தியிருந்தார். அதன் பிறகு, அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்க ரூ.154 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon