மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

டெங்கு ஒழிப்பு: 2000 கடைகளுக்குக் கெடு!

டெங்கு ஒழிப்பு: 2000 கடைகளுக்குக் கெடு!

தொற்று நோய் தடுப்பு இயக்ககம், டெங்குவை ஒழிக்கும் பொருட்டு, சென்னையில் உள்ள 2000 கடைகளுக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொசு உற்பத்தி ஆகும் வகையில் செயல்பட்டதாக இந்தக் கடைகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 100க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கிறார்கள். . நேற்று மட்டும் 11 பேர் இறந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கிராமம், நகரம் என சகல இடங்களிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். டெங்குவை ஒழிக்கத் தமிழக அரசு தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் டெங்குவை மிக முக்கியப் பிரச்சனையாக கருதி தமிழக அரசு தீவிரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. டெங்கு கொசுகளைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொசு உற்பத்தியாகும் பொருட்களை அகற்றத் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன.

பல்வேறு பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் கடைக்காரர்கள் கழிவுப் பொருட்களையும் பழைய பொருட்களையும் தேக்கி வைத்திருந்தது சென்னை மாநகராட்சி நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இவ்வாறு கொசு உற்பத்தி ஆகும் வகையில் செயல்பட்ட 2000 கடைக்காரர்களுக்குத் தொற்று நோய் தடுப்பு இயக்ககம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தண்ணீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்திக்குக் காரணமாகும் டயர் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை 2 நாளில் அகற்ற வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது. பழைய பொருட்கள் மற்றும் கழிவுப் பொருட்களை உரிய காலத்திற்கு அகற்றாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும் என சுகாதாரத் துறை கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon