மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 10 அக் 2017

டெங்கு: ஆய்வுக்குத் தடையா?

டெங்கு: ஆய்வுக்குத் தடையா?

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக காய்ச்சல் ஆய்வுக்குத் தமிழக சுகாதாரத்துறை தடை விதிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (அக்டோபர் 10) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் துடித்துக்கொண்டிருக்கின்றனர்.நோயைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாகப் புள்ளி விவரங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது.

டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோருக்கு டெங்கு நோயைக் கண்டறிவதற்கான மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்றும், காய்ச்சலுடன் அனுமதிக்கப்படுபவர்களுக்கு எந்த ஆய்வும் செய்யாமல் நேரடியாக வைரஸ் காய்ச்சலுக்கு மருத்துவம் அளிக்க வேண்டும் என்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு சுகாதாரத் துறையிலிருந்து உத்தரவிடப்பட்டிருக்கிறது.

மருத்துவம் பயனின்றி உயிரிழப்பவர்களை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்கள் பட்டியலில் சேர்க்காமல் வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்ததாகக் கணக்கு காட்ட வேண்டும்; மருத்துவமனைகளில் டெங்குவுக்காக மருத்துவம் பெற வந்தவர்களை வைரஸ் காய்ச்சலுக்காக மருத்துவம் பெற வந்தவர்கள் எனக் கணக்கு காட்ட வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் நோக்கமாகும்.

இதன் மூலம் அடுத்த சில நாட்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் குறைந்துவிட்டதாகக் கூறிப் பெருமிதப்பட்டுக்கொள்வதுதான் ஆட்சியாளர்களின் திட்டமாகும்.

டெங்குவைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதுவரை பாமக சார்பில் 5 முறை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அப்போதே தமிழக ஆட்சியாளர்கள் சுதாரித்துக் கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால் டெங்குவையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் கட்டுப்படுத்தியிருக்க முடியும்.

ஆனால், ஊழல் செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டிய ஆட்சியாளர்கள் டெங்குவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டியிருக்கிறது. இப்போது கூட டெங்குவால் பாதிக்கப்பட்டு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்துக் காட்டும் முயற்சியில் சுகாதாரத்துறை அமைச்சரும், செயலரும் ஈடுபட்டுள்ளனர்.

புள்ளி விவரங்களில் தில்லுமுல்லு செய்வதை விடுத்து டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள், அவர்களுக்கு அளிக்கப்படவிருக்கும் சிகிச்சைகள் குறித்த உண்மையான விவரங்களைத் தமிழக அரசு வெளியிட வேண்டும். டெங்குவைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் இருந்தால் மத்திய அரசிடமிருந்து தேவையான உதவிகளைப் பெற வேண்டும்'' என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon