மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

அவதூறு வழக்கு தொடர்ந்தார் ஜெய் அமித் ஷா!

அவதூறு வழக்கு தொடர்ந்தார் ஜெய் அமித் ஷா!

தனது நிறுவனத்தின் வருமானம் அதிகரித்துள்ளது தொடர்பாக தவறான செய்தி வெளியிட்டதாக ‘தி வயர்’ இணையதளம் மீது அமித் ஷாவின் மகன் ஜெய் அமித் ஷா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிரதமராக மோடி பதவியேற்றபின் பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் அமித் ஷாவுக்குச் சொந்தமான நிறுவனத்தின் லாபம் 16 ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளதாக தி வயர் இணையதளம் கடந்த 8ஆம் தேதி கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில், ரிஜிஸ்டிரார் ஆஃப் கம்பெனீஸில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற அடுத்த ஆண்டில் பாஜக தலைவர் அமித் ஷாவின் மகன், ஜெய் அமித்பாய் ஷா நடத்தும் தொழிலின் ஆண்டு நிகர வருமானமானது முந்தைய ஆண்டைவிட 16,000 மடங்கு அதிகரித்துள்ளது.

ரிஜிஸ்டிரார் ஆஃப் கம்பெனீஸின் பேலன்ஸ் சீட்டின்படி மார்ச் 2013 மற்றும் மார்ச் 2014 மாதங்களில் முடிவடைந்த நிதியாண்டுகளில் ஷாவின் ‘டெம்பிள் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் அவ்வளவாகத் தொழில்புரியாமல் முறையே ரூ.6,230/- மற்றும் ரூ.1,724/- நஷ்டமடைந்திருந்தது. 2014-15ஆம் ஆண்டில் ரூ.50,000/- வருவாயில் ரூ.18,728/- லாபம் ஈட்டிய இந்நிறுவனம், 2015-16இல் ஈட்டிய ஆண்டு நிகர வியாபாரம் ரூ.80.5 கோடி என்று குறிப்பிட்டிருந்தது.

இந்தக் கட்டுரை இந்திய அளவில் அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும், அமித் ஷா பதவி விலக வேண்டும், சி.பி.ஐ. அமலாக்கத்துறை விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. அதேவேளையில், விதிகளின்படியே ஜெய் ஷாவுக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், செய்தி வெளியிட்ட தனியார் இணையதள செய்தி நிறுவனம்மீது ரூ.100 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து விளக்கமளித்துள்ள ஜெய் ஷா, தனது நிறுவனம் சட்டப்படியே வணிக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. எங்கள் குடும்ப சொத்துகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளேன் என்று தெரிவித்திருந்தார். தி வயர் இணையதளம் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி, அகமதாபாத் நீதிமன்றத்தில் தி வயர் இணையதளத்தின் ஊடக ஆசிரியர், உரிமையாளர், கட்டுரையாளர் உள்ளிட்ட ஏழு பேர் மீது ஜெய் ஷா நேற்று (அக்.9) அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை (அக்.11) விசாரணைக்கு வரவுள்ளது.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon