மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

வாக்கி டாக்கி ஊழல்: திமுக புகார் மனு!

வாக்கி டாக்கி ஊழல்: திமுக புகார் மனு!

‘வாக்கி டாக்கி கொள்முதல் ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று திமுக சார்பில் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக போலீஸுக்கு வாங்கப்பட்ட வாக்கி டாக்கி டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி தமிழக டிஜிபிக்கு விளக்கம் கேட்டுக் கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து, டிஜிபி ராஜேந்திரன் பதவி விலக வேண்டுமெனவும், இதுகுறித்த விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டுமெனவும் பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாக்கி டாக்கி ஊழல் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்தவும், அதுவரை சட்டம் - ஒழுங்கு டிஜிபி பொறுப்பிலிருந்து டி.கே.ராஜேந்திரனை விடுவிக்கவும் ஆளுநர் உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து நேற்று (அக்டோபர் 9) திமுக சார்பில் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், வாக்கி டாக்கி முறைகேடு தொடர்பாக பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்த வேண்டுமென தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளரிடம் மனு அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.அன்பழகன், “காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் ரூ.88 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆதாரத்தோடு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி முறைகேடாக வாங்கிய வாக்கி டாக்கி எப்படி ஒழுங்காக வேலை செய்யும்? இதுபோன்ற சூழ்நிலையில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கை எப்படி பாதுகாக்க முடியும்? எனவே, மேலும் இதுதொடர்பாக ஐஜியிடமும், தமிழக கவர்னரையும் சந்தித்து மனு கொடுக்கவும் திமுக திட்டமிட்டுள்ளது. தற்போது கொடுக்கப்பட்ட மனு மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் சென்று முறையிடவும் திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon