மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 21 அக் 2020

டெங்கு: தமிழக அரசு இருக்கிறதா?

டெங்கு: தமிழக அரசு இருக்கிறதா?

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சுமார் 400 பேர் இறந்துள்ள நிலையில், தமிழக அரசு இருக்கிறதா, செயல்படுகிறதா என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், காய்ச்சலுக்குப் பலர் பலியாகியுள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு இறந்துள்ளதாக அதிகாரபூர்வத் தகவல் வெளியாகியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் 35 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். ஆனால், இரண்டு நாள்களில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால், டெங்குவைவிட தங்களுடைய உட்கட்சிப் பிரச்னையைத்தான் ஆட்சியாளர்கள் கவனிக்கின்றனர் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டிவரும் நிலையில், இதுதொடர்பாக (அக்டோபர் 9) தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சுமார் 400 பேர் இறந்துள்ள நிலையில், தமிழக அரசு இருக்கிறதா என்றும் செயல்படுகிறதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது. ஆனால், இதைக் கட்டுப்படுத்த வேண்டிய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. மேலும், அமைச்சர் டெங்கு காய்ச்சல் என்று சொல்லாமல் மர்மக் காய்ச்சல் என்றே கூறி வருகிறார்.

இதைக் கவனிக்க வேண்டிய முதல்வரும், துணை முதல்வரும் மக்களைப் பற்றி கவலைப்படாமல், மக்களின் வரிப்பணத்தை வீணாக்கி மாவட்டந்தோறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை ஆடம்பரமாக கொண்டாடி வருகிறார்கள். இதற்குச் செலவு செய்யும் தொகையை டெங்கு பாதித்தவர்களுக்கு மருத்துவச் சேவை செய்ய பயன்படுத்தியிருக்கலாம்.

மேலும் மேடைக்கு மேடை இது ஜெயலலிதா வழியிலான ஆட்சி என்றே பேசிவருகின்றனர். ஜெயலலிதா ஒன்றும் சுதந்திர போராட்டத் தியாகி இல்லை. அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். ஆக, ஆட்சியாளர்களே நடப்பது ஊழல் ஆட்சி என்று ஒப்புக்கொள்கின்றனர். எனவே அரசு, மக்கள் மீது கவனம் செலுத்தி டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கக் வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon