மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 21 அக் 2020

சிறப்புப் பார்வை: குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு நெருக்கடி!

சிறப்புப் பார்வை: குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு நெருக்கடி!

அஜோய் மஹாபிராஷாதா

காந்தி ஜெயந்தி அன்று போர்பந்தரில் நடைபெற்ற கட்சிப் பேரணியில் பாஜக தலைவர் அமித் ஷா குஜராத் சட்டமன்றத் தேர்தல்கள் டிசம்பர் முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன என்று அறிவித்தார். தேர்தல் கமிஷன் அதிகாரபூர்வமாகத் தேதிகளை அறிவிக்காத நிலையில் ஷா இவ்வாறு கூறியுள்ளது ஆச்சர்யம்தான். இவர் இவ்வாறுதான் நடக்கும் என ஊகிக்கிறாரா அல்லது தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தைப் புறக்கணிக்க எண்ணுகிறாரா என்று தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல்களப் போட்டிகள் அதிகாரபூர்வமாகத் தொடங்கிவிட்டன. மோடி - ஷா இரட்டையரைப் பொறுத்தவரை குஜராத் மாநிலம் மிகவும் முக்கியம். தொடர்ந்து 22 ஆண்டு காலம் பாஜக ஆட்சியில் இருந்துவந்த மாநிலமாயிற்றே.

2019இல் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் பாஜக ஆட்சியை முறியடிக்கும் நம்பிக்கையில் மும்முரமான பிரசாரத் திட்டத்தை காங்கிரஸ் கட்சி தீட்டிவருகிறது. மிகவும் பழைமையான கட்சி என்பது உண்மைதான் என்றாலும், அமைப்பு ரீதியாகக் கடந்த இருபது ஆண்டுகளில் பலவீனமடைந்து வந்துள்ளது என்பதால் தன் ஆற்றலைப் புதுப்பித்துக்கொண்டு ஸ்திரப்படுத்திக்கொள்ளும் உத்தியைக் கட்சி மேற்கொள்ள வேண்டும். இந்த முறை பாஜகவுக்குத் தேர்தல்களம் அந்தளவு சுலபமாக இருக்கப் போவதில்லை என்பதும் தெரிகிறது.

தேர்தல்களைக் குறித்த அறிவிப்பு வெளியிட்டதோடு ஷா, ‘குஜராத் வளர்ச்சி மாதிரி’ என்பதிலும் கவனம் செலுத்திவருகிறார். ராகுல் காந்தி தனது ‘இத்தாலி நாட்டுக் கண்ணாடி’ வழியாகப் பார்ப்பதால் அவருக்கு இந்த உண்மை நிலவரம் புரியவில்லை என்றும் அவரைத் தாக்கிப் பேசியுள்ளார்.

ஓ.பி.சி. வாக்கு வங்கி கைகொடுக்குமா?

பல்வேறு சமூகங்களை ஓ.பி.சி. பிரிவில் ஒன்றாக இணைப்பதன் மூலம் பாஜக அதிகாரத்துக்கு வந்தது. பாடிதர்கள், தாகூர்கள், ராஜபுத்திரர்கள் உள்ளிட்ட சாதியினர் இணைந்து பாஜக தலைமையின் பெரும்பான்மையை உருவாக்கியது. இந்தக் காவிக் கூட்டணி முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர் மாதவ்சிங் சோலங்கியின் க்ஷத்திரியர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் முனைப்புக்குச் சவால்விட்டது.

ஆனால், கடந்த சில வருடப்போக்கைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் கணிசமான ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்த மக்கள் காவிக்கட்சிக்கு எதிராக வாக்களிக்கப்போவதாகத் தெரிகிறது. படிதார் மற்றும் தாகூர் பிரிவினர் வேலையில்லாத் திண்டாட்டம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எழுந்துள்ள விவசாயிகள் பிரச்னைகளால் மாநில அரசை எதிர்க்க முடிவு செய்துள்ளனர். இவ்விரண்டு சாதிகளுமே சமூகத்தில் ஆதிக்கமும் செல்வாக்கும் கொண்டவை.

இந்த இரண்டு பகுதிகளிலும் பாஜக முன்பு நடந்த தேர்தல்களில் மகத்தான வெற்றிகளை ஈட்டியது. ஆனால், 2017 தேர்தலிலும் அப்படியே இருக்குமா என்பது சந்தேகம்தான். இப்போது குஜராத்தில் நடைபெற்றுவரும் தலித் கலவரங்கள், கால்நடை வளர்ப்பவர்கள், வர்த்தகர்களுக்கு எதிராக எழும் பிரச்னைகள் அனைத்துக்கும் மாநில அரசின் மோசமான நடவடிக்கைகளை இணைத்துப்பார்க்கும்போது குஜராத் வளர்ச்சி மாதிரி மக்களின் வாழ்வாதார அடிப்படைப் பிரச்னைகளுக்குத் தீர்வு வழங்கவில்லை என்ற எண்ணம் நிலவுகிறது.

மாநிலத் தலைமையின் பலவீனம்

குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்தபோது, அம்மாநிலத்தில் மிக நீண்ட காலம் முதலமைச்சராக இருந்த சாதனை பாஜகவுக்குச் சாதகமான அம்சமாக இருந்தது. ஆனால், அவர் பிரதமரான பிறகு அங்கு மாநிலத் தலைமையைப் பொறுத்தவரை பாஜக சிக்கலை எதிர்கொண்டுள்ளது. மோடியே தனக்கு அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுத்த ஆனந்தி பென் படேல், ஊழல் மற்றும் தன்னிச்சையான போக்குக்காக நீக்கப்பட்டுவிட்டார்.

அவருக்குப் பின் வந்த சவுராஷ்டிர தலைவர், விஜய் ரூபாணிக்கு அங்கு நிலவும் கொந்தளிப்பான அரசியல் நிலவரத்தை ஒருங்கிணைத்துக் கட்டுப்படுத்தும் திறன் இல்லை என்பதை பாஜகவினரே ஒப்புக்கொள்கின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் ஷா, தன் போர்பந்தர் உரையில் வரும் தேர்தலில் குஜராத் மாதிரி முக்கியமான பிரசார உத்தியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த உத்தி அனைத்துப் பிரிவு மக்களிடையே செல்லுபடியாகும் என்றும் கட்சிக்கு எதிரான சமூக கோபங்களும் குறையும் என்று பாஜகவினர் நம்புகின்றனர்.

காங்கிரஸின் தன்னம்பிக்கை

மறுசீரமைப்புச் செய்யப்பட்டிருக்கும் காங்கிரஸ் கட்சி இம்முறை பாஜகவின் நிலைமையைச் சிக்கலாக்கப் போகிறது. கட்சி வழக்கத்துக்கு மாறாக, பாஜகவுக்கு முன்பாகவே தேர்தலுக்குத் தயாராகிவிட்டது. ராகுல் காந்தியின் சவுராஷ்டிரா பயணம், அதுவும் படிதார் பிரிவினர் அதிகம் உள்ள இடங்களை, அதிலும் தங்கள் மோசமாக தோல்வியடைந்த தொகுதிகளைத் தேர்ந்தெடுத்தது, இந்தக் கட்சியின் நேர்மறை அணுகுமுறைக்கான சிறந்த உதாரணம்.

ராகுல் காந்தி தனது உரைகளில் நிலக்கடலை, பருத்தி ஆகிய இரண்டு முக்கியமான வாணிபப் பயிர்களைச் சரியான நேரத்தில் உற்பத்தி செய்யத் தவறியது குறித்து ரூபாணி அரசைத் தாக்கினார். மாநில அரசின் மோசமான கொள்முதல் கொள்கைகளால் பயிர்களின் விலை மோசமாக வீழ்ச்சியடைந்து, பெரும்பாலும் ஓ.பி.சி. அதிகமாக உள்ள விவசாயிகளை பாதித்தது. எனவே, இவர்கள் அரசுக்கு எதிராகக் கடந்த சில மாதங்களாகக் கிளர்ச்சி செய்து வருகின்றனர்.

இங்கு வேலையில்லாத் திண்டாட்டம், குறிப்பாக ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு மிகப் பெரிய பிரச்னையாக மாறியிருப்பதால், ராகுல் காந்தி இளம் சமுதாயத்தினரிடம் அதிகம் உரையாற்றினார். பாஜகதான் ஒரே இந்து சக்தி என்ற இமேஜைக் குறைக்க ராகுல் காந்தி அங்குள்ள முக்கியமான இந்துக் கோயில்களுக்குச் சென்றார்.

ஆளும்கட்சிக்கு எதிரான உணர்வு

அரசுக்கு எதிராக மக்களிடையே எழுந்துள்ள உணர்வைத் தெளிவாகக் காண முடிந்தாலும், மாநில அளவிலான வலுவான தலைமை இல்லாததுதான் காங்கிரஸின் பின்னடைவுக்குக் காரணம் என்று தி வயர் இதழிடம் பேசிய ராகுல் காந்தியின் உதவியாளர்களுள் ஒருவர் கூறினார். ராகுல் காந்தியின் குஜராத் பயணம் காங்கிரஸ் தலைவர்கள் பலரது கண்களைத் திறந்துள்ளது. மக்களின் கோபம் வெளிப்படையாகத் தெரிகிறது. பல சமுதாயத் தலைவர்கள் ராகுல் காந்தி போகும் இடங்களில் எல்லாம் அவரைச் சந்திக்க வேண்டும் என்று காத்திருந்தார்கள். காங்கிரஸ் கட்சிக்கு 4,000 வாக்குகள்கூடக் கிடைக்காத இடங்களில் இப்போது நூற்றுக்கணக்கான செல்வாக்கு மிகுந்த மக்கள் தனிப்பட்ட முறையில் ராகுலைச் சந்திக்கக் காத்திருந்தனர். இது சந்தேகத்துக்கே இடமில்லாமல், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நல்ல ஆரோக்கியமான அறிகுறிதான் என்று அவர் கூறினார்.

கட்சியை ஒழுங்குப்படுத்தும் முனைப்பில் இதன் மத்திய தலைமை ஆகஸ்ட் மாதம், நான்கு செயல் தலைவர்களை இம்மாநிலத்தில் நியமித்தது. ஓர் ஆதிவாசி தலைவர், படேல் சமுதாயத்தைச் சேர்ந்த இருவர், மேலும் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் எனத் தேர்ந்தெடுத்தது இம்மாநிலத்தில் நிலவும் சாதி, சமூகப் பாகுபாடுகளைக் கருத்தில் கொண்டுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.

விகாஸ் கண்டோ தாயீ கயா சே (மாதிரி வளர்ச்சி வீழ்ச்சி அடைந்தது) மற்றும் மாரா ஹதா சேட்ரி கயா (என்னை நீ முட்டாளாக்கிவிட்டாய்) போன்ற பிரசாரங்களை வெளியிடும் சமூக ஊடகங்கள் விஷயத்தில் பாஜகவுக்கு ஈடுகொடுப்பதில் காங்கிரஸ் ஓரளவு வெற்றிகண்டுள்ளது. வெற்றிகரமான ஒரு சமூக ஊடகத்தை நடத்திவந்த அமித் ஷா கூட இதன் தாக்கத்தால் தன் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்கில் குஜராத் மக்களிடம் “பாஜகவுக்கு எதிரான பிரசாரத்துக்கு செவிசாய்க்க வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தன் பெயரைக் குறிப்பிட விரும்பாத அகமதாபாத் ஆர்.எஸ்.எஸ். ஊழியர் ஒருவர், இளம் சமுதாயத்தினரிடையே பாஜக குறிப்பிடத்தக்க அளவுக்கு வாக்குகளை இழக்கும் என்றும் ஜி.எஸ்.டியும்கூடக் கட்சியை வெகுவாக பாதித்துள்ளது என்றும் தி வயர் இதழிடம் கூறினார். “அதனால்தான், 35 வயதுக்கு மேற்பட்டவர்களைப் பாதிக்கும் பிரச்னையில் கவனம் செலுத்தி அதே நேரத்தில் தேர்தலுக்கு முன்பாக மோடி ஹவா (காற்று) சாதகமான காற்று வீசச் செய்ய வேண்டும் எனக் கட்சி சிந்தித்து வருவதாக” அவர் மேலும் கூறினார். ராகுல் காந்தியைக் குறித்த பாஜக தலைமையின் தாக்குதலுக்குப் பிறகு மத்திய தலைமையிடம் இங்குள்ள ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் ராகுல் காந்தி குறித்து நேரடியாகத் தாக்கிப் பேசுவது நம்மையே பூமராங் போலத் திருப்பித் தாக்கி அவருக்கு தேவையில்லாத விளம்பரத்தைப் பெற்றுத் தரும் எனக் கூறியுள்ளனர்.

புலனாய்வுத்துறை ஆய்வின்படி பாஜகவுக்கு 110 இடங்களுக்கு மேல் கிடைப்பதே கஷ்டமாக இருக்கலாம் எனத் தெரிகிறது. இத்தனை இடங்கள் பெற்றால் கட்சி ஆட்சியை மீண்டும் பிடிக்கலாம். ஆனால், முந்தைய தேர்தல்களை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவான செயல்பாடாகவே இருக்கும்.

ஆய்வு அறிக்கைகள் என்ன கூறினாலும், குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது அவ்வளவு சுலபமானதாக இருக்கப் போவதில்லை என்பது மட்டும் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களின் கூற்றிலிருந்து தெளிவாகப் புரிகிறது. மோடியால் மட்டுமே இங்கு கட்சி மோசமான வீழ்ச்சியை சந்திக்கக்கூடிய சாத்தியக்கூறிலிருந்து காப்பாற்ற முடியும் என்பதை கட்சி உணர்ந்துள்ளது.

இரண்டு கட்சிகளும் தங்கள் குரலை உயர்த்தி ஒருவரை ஒருவர் தாக்கி உரையாற்றத் தொடங்கியுள்ள நிலையில் குஜராத் தேர்தல்களம் கசப்பான அரசியல் போராட்டத்தை எதிர்நோக்கி உள்ளது.

நன்றி: Thewire.in

தமிழில்: ராஜலட்சுமி சிவலிங்கம்

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon