மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 10 அக் 2017

சிறப்புக் கட்டுரை: ஓடிடி எனும் மாயவன் - 3

சிறப்புக் கட்டுரை: ஓடிடி எனும் மாயவன் - 3

கேபிள் சங்கர்

இன்றைய தேதிக்குத் தமிழ்நாட்டில் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் எல்லாருமே, சட்டென அதை நிறுத்திவிட்டு, ‘ஏன் நாம வெப் சீரீஸ் ஆரம்பிக்கக் கூடாது’ என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். பலர் தயாரிப்பில்கூட இறங்கிவிட்டார்கள். எப்படி டிஜிட்டல் சினிமா பிரபலமான பிறகு, முன்பின் அனுபவமில்லாதவர்கள் எல்லாம் சினிமா தயாரிப்பில் இறங்கினார்களோ, அதுபோல இப்போது வெப் சீரீஸ் தயாரிப்பில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலோருக்கு டி.வி தொடருக்கும் வெப் சீரீஸுக்கும் குறைந்தபட்சம் ஆறு வித்தியாசங்களாவது தெரியுமா என்று தெரியவில்லை. வெப் சீரிஸ் தயாரிப்பதால் என்ன லாபம், எப்படி அதைச் சந்தைப்படுத்துவது, எவ்வளவு செலவு ஆகும் என்பது போன்ற முக்கியக் கேள்விகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆட்டத்தில் இறங்கியவர்களை விடுங்கள். தெரிந்தே ஆட்டத்தில் இறங்கியவர்கள் சிலர் இருக்கிறார்கள்.

வெற்றி பெற்ற வெப் சீரீஸ் பரிசோதனை

கார்த்திக் சுப்புராஜ் தன் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் சார்பாக ஒரு வெப் சீரீஸையும், ட்ரெண்ட் லவுட் சேனல், ‘அமெரிக்க மாப்பிள்ளை’ எனும் சீரீஸையும், மெட்ராஸ் சென்ட்ரல் லிவின் எனும் சீரீஸின் வெற்றிக்குப் பின் மெட்ராஸ் சென்ட்ரல் புகழ் கோபி, சுதாகர், ஜாவித்தை வைத்துப் புது சீரீஸையும் ஆர்மபித்திருக்கிறார்கள். ஏற்கெனவே புட் சட்னி குழுவினரின் cntrl+Alt+Del எனும் வெப் சீரீஸ் தமிழில் வெற்றிகரமாய் வெளியாகியிருக்க, குட்டி பத்மினி தங்கள் நிறுவனத்தின் மூலமாய் ஆல்ட் பாலாஜி பிளாட்பார்முக்கு நடிகர் நந்தா நடிப்பில் தமிழில் ஒரு சீரிஸை அளித்திருக்கிறார். தெலுங்கில் அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் வியூ பிளாட்பார்முக்காக PillA என்ற சீரீஸைத் தயாரித்திருக்க, அவர்களின் லேட்டஸ்டான ‘சோஷியல்’ சீரீஸின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ராணா டகுபதி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதே ரீதியில் தமிழில் தயாரிக்க இருப்பவர்கள் யாராவது பணம் தருவார்களா, அதை வைத்து ஒரு சில சதவிகித லாபத்தில் சுருட்டிக்கொடுக்கலாமா என்று எங்கெல்லாம் தமக்குச் செல்வாக்கு உண்டோ அங்கேயெல்லாம் போய்க் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் சிலர். ஆனால், இத்தனை ஓடிடி பிளாட்பார்ம்கள் எப்படித் தங்கள் இடத்தை நிலைநிறுத்திக்கொள்ளப் போகின்றன. எங்கேயிருந்து பார்வையாளர்களை இழுக்கப் போகிறார்கள், எப்படி இவர்கள் செய்யும் செலவுக்கு வருமானத்தை எடுக்கப் போகிறார்கள் என்ற கேள்விகள் ஒரு புறமிருக்க, தயாரிப்பாளர்கள் போட்ட பணத்தை இதில் எப்படி எடுக்க முடியும் என்பதையும் நாம் பார்க்கலாம்.

Ctrl+Alt+Del எனும் புட் சட்னியின் எட்டு எபிசோட் சீரிஸுக்கு, ஒரு எபிசோடுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு என்று சொல்கிறார்கள். அவர்களின் கன்டென்ட் தரத்தைப் பார்க்கும்போது நிச்சயம் அதற்குத் தகுதியான விஷயமாய்த்தான் தெரிந்தது. வெறும் யூடியூப் விளம்பரங்கள், ஹிட்ஸ்கள் மூலம் காசு பார்க்க வேண்டுமென்றால் தொடர்ந்து விளம்பரப்படுத்தப்பட்டு, மில்லியன் கணக்கில் பார்வையாளர்களைச் சென்றடையும்போது நிச்சயம் ஒரு லாபகரமான புராஜக்டாய் இருக்கும். ஆனால், மில்லியன் கணக்கில் தமிழில் ஹிட் வர சில வருடங்கள் ஆகலாம். அதற்காக ஒரு சிறந்த வியாபார முறையை அதில் கையாண்டார்கள். கிட்கேட், மிரிண்டா என்று இரண்டு புராடக்டுகளைத் தங்கள் வெப் சீரீஸின் முக்கிய நிகழ்வின்போதெல்லாம் கேரக்டர்கள் மூலம் பயன்படுத்தவோ, அல்லது சொல்லுவது போலவோ ஒவ்வொரு எபிசோடிலும் காட்சிப்படுத்தி அந்த விளம்பரதாரர்களைத் தங்களது சீரீஸுக்கு பிராண்ட் பார்ட்னராய் ஆக்கி, பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு தயாரிப்பில் இறங்கினார்கள்.

இது எல்லாருக்கும் சாத்தியமாகாது. ஏனென்றால் புட் சட்னி எனும் நிறுவனம் கல்சுரல் மிஷின் எனும் நிறுவனத்தைச் சார்ந்தது. இந்தியில் மட்டுமில்லாமல் பெரிய அளவில் மார்க்கெட்டில், முக்கியமாய் யூடியூப் நெட்வொர்க்கில் பெரும் பலமுள்ள நெட்வொர்க். எப்படி சன் தன் குழும சேனல்களுக்குத் தன் சன் சேனலை வைத்து மார்க்கெட் செய்கிறதோ அதுபோல தன் பெரும் மார்க்கெட் விரிவாக்கத்தை வைத்து விளம்பரதாரர்களை பெற்றுத் தங்களது வெப் சீரிஸை வெற்றி பெற வைத்தார்கள். இப்படிப்பட்ட நிறுவனத்துக்கே இப்படியான பெரும் பின்னணி தேவையிருக்க, மற்றவர்களின் வெப் சீரிஸ்களை எப்படி மார்க்கெட் செய்வது என்பது ஒர் பெரிய கேள்விக்குறிதான்.

செயல்படுவதன் அவசியம்

இப்படி யோசித்துக்கொண்டிருப்பதைவிடச் செயல்படுவது சிறந்தது என மெட்ராஸ் சென்ட்ரல் நிறுவனத்தினரின் ‘லிவின்’ மக்கள் மத்தியில் பேர் பெற ஆரம்பித்திருக்க, உடனடியாய் புட் சட்னியின் சேனலுடன் தங்கள் சேனல் லிவின்னை அதிலும் ப்ளே செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். தங்களது சேனலுக்கான சப்ஸ்கிரைபச்ஸை விட, அதிக சப்ஸ்கிரைபர்ஸ் வைத்திருக்கும் சேனலில் அவர்களது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிப் பெரும் பார்வையாளர்களை ஈர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதே வேளையில், தங்களுக்கென்று தனியாய் ஓடிடி பிளாட்பார்மை ஆரம்பித்து, புட் சட்னியின் நிகழ்ச்சிகளையும் தங்களது வெப் சீரிஸ்களையும் ஒளிபரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

இப்படித் தங்களை நிரூபித்த நிறுவனங்களே அடுத்த கட்டத்தை நோக்கி நகரப் பெரும் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருக்க, பாலாஜி மோகனின் “ஆஸ் ஐயம் சபரிங் ப்ரம் காதல்” சீரீஸ் எடுத்து முடிக்கப்பட்டு, பின்பு ஹாட் ஸ்டாரும், ட்ரண்ட் லவுடும் இணைத்து அதை விலை கொடுத்து வாங்கி ஹாட் ஸ்டாரில் வெளியிட்டன. ஒரு எபிசோட் கிட்டத்தட்ட ஆறு லட்ச ரூபாய்க்கு என்று சொல்கிறார்கள். நிச்சயம் இது லாபகரமான வியாபாரம்தான். ஆனால், எல்லோராலும் இந்தச் முதலீட்டை செய்து காத்திருக்க முடியுமா? எல்லா நிகழ்ச்சிகளையும் இப்படி நல்ல விலை கொடுத்து வாங்குவார்களா? சாட்டிலைட் சேனல் போட்டி போல பலர் பேர் ஆளாளுக்கு ஓடிடி பிளாட்பார்ம் ஆரம்பித்துவிட்டாலும் எத்தனை நாளைக்கு இவர்களால் நெட்பிளிக்ஸ், சன் நெக்ஸ்ட், ஹாட் ஸ்டார், அமேசான் ப்ரைம் போன்றோருடன் போராட முடியும்? மக்கள் எப்படி இத்தனை பிளாட்பார்ம் நிகழ்ச்சிகளையும் பார்ப்பார்கள்?

அடுத்த வாரம் பார்க்கலாம்.

கட்டுரையாளர் குறிப்பு: கேபிள் சங்கர் எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், இயக்குநர். ‘சினிமா வியாபாரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். ‘தொட்டால் தொடரும்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: [email protected]

ஓடிடி எனும் மாயவன் - 1

ஓடிடி எனும் மாயவன் - 2

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon