மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

பொருளாதார வளர்ச்சி: ரிசர்வ் வங்கி கணிப்பு!

பொருளாதார வளர்ச்சி: ரிசர்வ் வங்கி கணிப்பு!

அடுத்த இரண்டு காலாண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதத்தை அடையும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநரான உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொருளாதாரமானது நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மூன்று ஆண்டுகளிலேயே மிகவும் மோசமான வகையில் 5.7 சதவிகித வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்திருந்தது. இதன் எதிரொலியாக பல்வேறு தரப்பிலிருந்து அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும் வளர்ச்சிக்கான நடவடிக்கையில் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநரான உர்ஜித் படேல் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

மிண்ட் செய்தியாளர்களிடம் இதுகுறித்துப் பேசிய உர்ஜித் படேல், “வளர்ச்சி குறித்து நாணயக் கொள்கைக் குழு ஆலோசித்து வருகிறது. வளர்ச்சிக்காகப் பணவீக்கத்தில் பாதிப்பு ஏற்படும் வகையிலான நடவடிக்கைகள் ஒருபோதும் இருக்காது. பொருளாதார வளர்ச்சிக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பணவீக்க இலக்கை அடைய முயற்சிக்கப்படும். ஆகஸ்ட் மாதத்தில் நுகர்வோர் குறியீடு 3.36 சதவிகிதமாக இருந்தது. 4 சதவிகிதத்தை மையமாகக்கொண்டு பணவீக்க விகிதம் இருக்கும்படி ரிசர்வ் வங்கி இலக்கு வைத்துச் செயல்பட்டு வருகிறது. அதைக் கருத்தில் கொண்டே ரெப்போ வட்டி விகிதத்தை நாங்கள் உயர்த்தவில்லை” என்றார்.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon