மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

தியேட்டர் கட்டணம்: கைவிரிக்கும் தமிழக அரசு!

தியேட்டர் கட்டணம்: கைவிரிக்கும் தமிழக அரசு!

‘திரைப்படங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கேளிக்கை வரியைக் குறைக்கவோ, முழுமையாக ரத்து செய்யவோ அரசுக்கு எந்த திட்டமும் இல்லை’ என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 27 முதல் தமிழகத்தில் வெளியாகும் புதிய தமிழ் படங்களுக்கு 10 சதவிகிதமும், பிறமொழி படங்களுக்கு 20 சதவிகிதமும் கேளிக்கை வரி வசூலிக்கப்படும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதற்குத் திரைத்துறையினர் சார்பில் எதிர்ப்புகள் வரத்தொடங்கியது. தற்போது மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஜி.எஸ்.டி. வரியுடன் தமிழக அரசு விதிக்கும் கேளிக்கை வரியையும் சேர்த்து 40 சதவிகிதம் வரையில் வரி செலுத்த வேண்டியுள்ளது. இதனால் திரைப்படத்துறை நலிவடையும் நிலை உருவாகியுள்ளது. எனவே, கேளிக்கை வரியை முழுமையாக நீக்க வேண்டும் என்று திரைத்துறையினர் சார்பில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

இப்படியொரு இக்கட்டான நிலைமையில் கேளிக்கை வரி விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “திரைப்படத் துறையின் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து இரண்டு மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே முன்பு 30 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டிருந்த கேளிக்கை வரியை 10 சதவிகிதமாகக் குறைத்துள்ளோம். சில மாநிலங்கள் தவிர்த்து மற்ற மாநிலங்களில் கேளிக்கை வரி உள்ளது. அப்படிப் பார்த்தால் தமிழகம்தான் திரைத்துறைக்கு வரிவிலக்கு, மானியம் உட்பட பல்வேறு சலுகைளை வழங்கி வருகிறது. தமிழில் பெயர்வைத்தால் இங்கு வரிவிலக்கு கொடுக்கப்படுகிறது. கேளிக்கை வரியை முழுமையாக நீக்குவது குறித்து இப்போது எந்த திட்டமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

திரையரங்கக் கட்டண உயர்வு குறித்து பேசிய அவர், “திரையரங்க டிக்கெட் கட்டணத்தை உயர்த்தித் தந்தால் முறைப்படி அரசுக்கு கட்ட வேண்டிய வரியை அதிலேயே முறையாகக் கட்டிவிடுவோம். அதனால் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தான் இந்த புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு பெரிதாக பொதுமக்களை பாதிக்காது” என்று கூறியுள்ளார்.

கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது தொடர்பாக நடிகர் சங்க துணைத்தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நேற்று (அக் 9) சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகின. இந்த வரி விவகாரம் தொடர்பாக தலைமைச்செயலகத்தில் இன்று (அக் 10) முதல்வரைச் சந்தித்து பேசவுள்ளதாகத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் முன்பே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon