மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

ரயில் தினம் கொண்டாடிய மாணவர்கள்!

ரயில் தினம் கொண்டாடிய மாணவர்கள்!

சென்னை புறநகர் ரயிலில் மாணவர்கள் கத்தி, வீச்சருவாள், பட்டாசுகளுடன் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஸ் டே கொண்டாடி வந்த மாணவர்கள் பேருந்து மீது ஏறி அட்டகாசம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதால் அத்தகைய செயல்களுக்குக் காவல்துறை தடைவிதித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 09) காலை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் வலைதளங்களில் சில வீடியோக்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரயில் தினம் கொண்டாடுகின்றனர். ரயில் பெட்டியை அலங்கரித்து அதில் வரும் மாணவர்கள் கையில் பட்டாக்கத்தியுடன் வலம்வருகிறார்கள். ரயில் பிளாட்பாரத்துக்குள் நுழையும்போது கத்தியைத் தரையில் தேய்க்கிறார்கள்.

இதைப் பார்த்த பயணிகள் அச்சத்துடன் ஒதுங்கி நிற்கின்றனர். பின்னர் அவர்கள் பிளாட்பாரத்தில் கத்தியுடன் அங்கும் இங்கும் நடக்கின்றனர். பட்டாசுகளைக் கொளுத்தி பிளாட்பாரத்திலேயே வெடிக்கின்றனர். அதைப் பயணிகள் அச்சத்துடன் பார்த்தபடி விலகிச் செல்கின்றனர்.

இத்தனை கலவரங்கள் நடக்கும்போது ஒரு ரயில்வே போலீஸ் கூட பிளாட்பாரத்திலோ, ரயிலிலோ இல்லை என்பது அந்த வீடியோ காட்சியில் தெரிகிறது. மற்றொரு வீடியோ காட்சியில் ரயிலில் தொங்கியபடி சாகசம் செய்தபடி மாணவர்கள் செல்கின்றனர். இவையெல்லாவற்றையும் வீடியோவாக எடுத்து அதை தங்கள் ஃபேஸ்புக்கிலும் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோக்கள் வைரலானதை அடுத்து போலீஸார் தண்டபாணி என்ற மாணவரைக் கைது செய்தனர். மேலும் சில மாணவர்களைத் தேடி வருகின்றனர்.

பொதுவாக ரயில்களில் பட்டாசுகள் எடுத்து செல்ல தடையிருந்தும், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மாணவர்கள் கத்தி, வீச்சருவாளுடன் சென்றது அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து, நெமிலிச்சேரிக்குச் செல்லும் புறநகர் ரயிலில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் திருடர்களுக்குப் பயந்து வந்த நிலையில் தற்போது மாணவர்கள் செய்யும் செயல்களைப் பார்த்து அவர்களுக்கும் பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon