மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: உலக வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்தும் 3D!

சிறப்புக் கட்டுரை: உலக வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்தும் 3D!

முத்துப்பாண்டி

பொதுவாக 3D என்ற உடனே திரைப்படங்கள்தான் நம் ஞாபகத்துக்கு வரும். முதன்முதலில் இந்தத் தொழில்நுட்பம் ஹாலிவுட்டில் அறிமுகம் செய்யப்பட்டாலும், 1984ஆம் ஆண்டு ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானது. அவதார், கிராவிட்டி, அலைஸ் இன் வொன்டர்லான்ட் போன்ற ஹாலிவுட் படங்கள் 3D தொழில்நுட்பங்களின் உச்சம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த வகைப் படங்களுக்கென தனி எதிர்பார்ப்பு இருந்துகொண்டேதான் இருக்கும். காரணம், அதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் காட்சிகளை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும். கால மாற்றத்தில் வீட்டிலிருந்தே இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டுகளிக்கும் வகையில் இப்போது 3D டி.விகளும் வந்துவிட்டன. அந்த வரிசையில் 3D பிரிண்டர்கள் தற்போது பிரபலமாகி வருகிறது.

உற்பத்தித் துறையில் இந்த 3D பிரிண்டர்களைப் பயன்படுத்தி சீனா பெரும் புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் சர்வதேச அளவில் உற்பத்தித் துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதைத் தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் இந்தத் தொழில்நுட்பம் பிரபலமடைந்து வருகிறது.

இதனிடையே ப்ளூம்பெர்க் ஊடகத்தில் வெளியான உலக வர்த்தக ஆராய்ச்சியின் தலைவர் ராவுல் லீரிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த 3D பிரிண்டர்களின் வளர்ச்சியால் 2060ஆம் ஆண்டுக்குள் உலக வர்த்தகத்தில் நான்கில் ஒரு பங்கு அழிந்து விடும்” என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், “அதிவேக 3D பிரிண்டர்களின் பயன்பாட்டைத் தொடர்ந்தால், உலகளாவிய உற்பத்திப் பொருள்களுக்குப் பெரும் இடையூறாக இருக்கும். இதன் விளைவாக உலக வர்த்தகத்தில் நான்கில் ஒரு பங்கு அழிந்து விடும். ஏனெனில், இந்தத் தொழில்நுட்பத்தினால் குறைவான வேலையாட்கள், குறைந்த ஊதிய நாடுகளில் இருந்து மூலப்பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டிய தேவைகள் குறைகின்றன. இதனால் பெரும் உற்பத்தி செய்யும் நாடுகள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் பொருட்கள் விற்பனையாகாமல் தங்கிவிட்டால் அவர்கள் எதிர்மறையான தாக்கத்தைச் சந்திக்க நேரிடும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த 3D பிரிண்டர்களை தற்போது ஒரு சில நாடுகள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. உலக அளவில் இது பிரபலமடைய இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3D பிரிண்டர்கள் மூலம் தற்போது எந்தத் தாக்கமும் இல்லாததுபோல் தோன்றினாலும், ராவுல் லீரிங் கூறியதுபோல் எதிர்காலத்தில் உலகளாவிய வர்த்தகத்துக்கு இது பெரும் இடையூறாக இருக்கும் என்பது உறுதி.

ராவுல் லீரிங் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உலக வர்த்தகத்தையே புரட்டிப்போடும் அளவிற்கு, இந்த 3D பிரிண்டரில் அப்படி என்ன இருக்கிறது என்று தானே யோசிக்கிறீர்கள்! முதலில் இந்த 3D பிரிண்டர் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.

ஜெராக்ஸ் இயந்திரம் புழக்கத்துக்கு வந்தபிறகு கார்பன் காகிதத்துக்கு வேலையில்லாமல் போனது. அச்சுத்துறையில் கம்ப்யூட்டர் செயல்பாட்டுக்கு வந்தபிறகு கணக்கு ஏடுகளுக்கு வேலையில்லாமல் போனது. எந்த ஒரு பொருளைத் தயாரிப்பதற்கும் ‘டை’ அதாவது மோல்ட் அவசியம். இந்த ‘டை’ தயாரிப்பதற்குப் பாரம்பரிய வேலையாட்கள் அவசியம்.

அதுமட்டுமில்லாமல் அதில் அடிக்கடி வடிவத்தை மாற்ற இயலாது. ஒரு ‘டை’ தயாரிப்பிற்கே பல நாள்களாகும். மேலும், இந்த டை இயந்திரத்தை வாங்க முதலீடும் அதிகம் தேவைப்படும்.

ஆனால், அத்தகைய பிரச்னைகள் எதுவும் 3D பிரிண்டரில் கிடையாது. ஒரு பொருளின் உண்மையான வடிவம் எப்படி இருக்குமோ, அதற்கான ‘டை’யை 3D பிரிண்டரில் உருவாக்க முடியும். இந்த ‘டை’யின் வடிவத்தை எப்போது வேண்டுமானாலும் மாறுதல் செய்து கொள்ள முடியும். இதனை வேண்டிய நிறத்திலும் மாற்றிக்கொள்ளலாம். பிளாஸ்டிக், செராமிக் எனத் தேவைக்கு ஏற்றார்போல் ‘டை’களை உருவாக்கும் பிரிண்டர்கள் இப்போது புழக்கத்துக்கு வந்துள்ளன.

உதாரணமாக ஒரு டேபிள் வடிவமைப்பை எடுத்துக்கொள்வோம். முதலில் ஒரு மரத்தை அறுத்து, பிறகு அதைப் பலகைகளாக மாற்றி, அதனை இழைத்து, அதற்கென கைதேர்ந்த வேலையாட்களைக்கொண்டு அதை வடிவமைக்கக் குறைந்தது 3 முதல் 4 நாள்கள் ஆகும். ஆனால், இந்த 3D பிரிண்டர்கள் மூலம் அந்த வடிவத்தை ஒரே நாளில் பெற முடியும். இதனால் நேரம் மிச்சமாவதோடு, அந்த தொழிலைச் சார்ந்த தொழிலாளர்களும் பாதிப்படைகின்றனர். ராவுல் லீரிங் வெளியிட்டுள்ள அந்த அறிக்கைக்கு இப்போது உங்களுக்குப் பதில் கிடைத்திருக்கும்.

இந்த 3D பிரிண்டர்களை குறிப்பிட்ட துறைகளில் மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்று இதன் எல்லையை நாம் வரையறுக்க முடியாது. ஏனெனில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் குண்டூசி முதல் விண்ணுக்குச் செல்லும் ராக்கெட் வரை அனைத்துத் துறைகளிலும் இதன் பயன்பாடு இருக்கும். தற்போது கட்டுமானத் துறையில் இதன் பயன்பாடு அதிகம் உள்ளது.

வெறும் புகைப்படத்தில் ஒரு கட்டுமானத்தைக் காண்பிப்பதை விட, அதை 3D பிரிண்டர் மூலம் ஒரு வடிவமாக்கிக் காண்பித்து வாடிக்கையாளர்களைக் கவர்கின்றனர். அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஷாப்பிங் மால்கள், ரிசார்ட்டுகள் போன்றவற்றின் மாதிரிகளை 3D பிரிண்டர் உதவியோடு உருவாக்கி வாடிக்கையாளர்களுக்கு எளிதில் புரிய வைக்கின்றனர். மீனாட்சி அம்மன் கோயிலில் தெற்கு கோபுர வாசலில் அந்தக் கோயிலின் முழு வரைபடமும் 3D வடிவத்தில் இருக்கும். இது அந்தக் கோயிலுக்கு புதிதாக வரும் பக்தர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் ஒரு கட்டடம் திடீரென சமூக விரோதிகளால் முற்றுகையிடப்படும்போது, அதிலுள்ள மக்களை மீட்கக் கட்டடத்தின் வரைபடத்துடன் கூடிய 3D மாதிரிகள் இருந்தால் காவல்துறையினருக்கு உதவியாக இருக்கும்.

3D பிரிண்டர்களைப் பயன்படுத்தி பொருள்களை மட்டுமல்ல, மனித உறுப்புகளையும் உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. இயங்கக்கூடிய சிறுநீரகங்களை உருவாக்கும் முயற்சியில் சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால் சிறுநீரகம் சார்ந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நவீன உலகத்துக்கு கம்ப்யூட்டர்கள் எப்படி மாற்றத்தைக் கொண்டுவந்ததோ அதைப் போல 3D பிரிண்டர்கள், உலக வர்த்தகத்தின் உற்பத்தித்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தக் காத்திருக்கின்றன.

தகவல்: Therecycler.com

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon