மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 15 செப் 2019

ஆண்ட்ரியாவோடு பயப்படத் தயாரா?

ஆண்ட்ரியாவோடு பயப்படத் தயாரா?

எந்த மாதிரியான கதையாக இருந்தாலும் அந்தக் கதையின் தன்மைக்கேற்பத் தன்னை மாற்றிக்கொண்டு வெற்றிகண்டுவருபவர் ஆண்ட்ரியா. தரமணி படம் தந்த வரவேற்பை அடுத்து, சித்தார்த்துடன் ஹாரர் த்ரில்லரில் களமிறங்கியுள்ளார். இதன் ட்ரெய்லர் நேற்று (அக்டோபர் 9) மாலை இணையத்தில் வெளியானது.

மிலிண்ட் ராவ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது. இந்தியில் ‘தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்’ எனவும், தெலுங்கில் ‘குருஹம்’ எனவும், தமிழில் ‘அவள்’ என்ற பெயரிலும் தயாராகி வருகிறது. சிரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும், கிரிஷ் இசையமைப்பாளராகவும் பணிபுரிகின்றனர்.

ஒரு வீட்டைச் சுற்றியே நடைபெறும் மர்மங்களைச் சொல்லும் இந்தப் படத்தின் கதையானது ஓர் உண்மை சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது என ட்ரெய்லரில் குறிப்பிட்டுள்ளனர். சித்தார்த்தும் ஆண்ட்ரியாவும் கணவன் மனைவியாக வாழ்ந்துவரும் அரண்மனை போல உள்ள வீட்டுக்கு அருகில் புதிதாக குடிபுகும் மற்றொரு குடும்பத்தால் உண்டாகும் தொந்தரவுகளை ஹாரர் த்ரில்லரில் சொல்லியிருக்கிறார்கள். திகில் காட்சிகளில் ஆண்ட்ரியா பயப்படுவதோடு நாமும் சேர்ந்து பயப்படுவோம் என்பதை ட்ரெய்லரை பார்க்கையில் நம்ப முடிகிறது.

சித்தார்த்தின் எடாகி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும், வியாகம் 18 மோஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துவரும் இந்தப் படத்தை நவம்பரில் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

அவள் ட்ரெய்லர்

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon