மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

மாற்று டிவி விவாதம்: வாயை மூடிப் பேசவும்!

மாற்று டிவி விவாதம்: வாயை மூடிப் பேசவும்!

- சிவா

உலகில் மூட நம்பிக்கைகள் இல்லாத மதமே இல்லை. உதாரணத்துக்கு மீடியாவும் ஒரு மதம் என்று வையுங்கள். சீனியர் பத்திரிகையாளர்கள் எது சொன்னாலும் சரியாக இருக்குமெனத் தலையாட்டிக்கொண்டு ஜூனியர்கள் அதை அப்படியே நம்புவதையும், சத்தமாகப் பேசினால் நாம் சொல்வதை உலகம் நம்பும் எனத் தப்புக்கணக்குப் போடுவதையும் மூட நம்பிக்கைகள் எனக் கொள்ளலாம். இதில் இரண்டாவது மூட நம்பிக்கையைப் பற்றித்தான் நாம் பேசப் போகிறோம். ஏனென்றால், முதலாவது சுய அறிவு தொடர்பானது என்பதால் மீடியாவுக்குள் சாதிப்பதற்கு வந்தவர்கள், சம்பாதிப்பதற்கு வந்தவர்கள் என்பதைப் பொறுத்து இது மாறுபடும்.

தேசிய ஊடகங்கள் எனத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் சில ஊடகங்களில்தான் சத்தமாகப் பேசும் மூடநம்பிக்கை அதிகமாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் என்றால் இவர்கள்தான் எனக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கலாம். ஆனால், அர்னாப் கோஸ்வாமி டைம்ஸ் நவ் தொலைக்காட்சியிலிருந்து வெளியேறி ரிபப்ளிக் டிவி என்ற புதிய தொலைக்காட்சியைத் தொடங்கியபிறகு, அவரது இடத்தை நிரப்புவதற்காக அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் விவாதத்துக்கு வருபவர்களைப் பேசவிடாமல் காட்டுக் கூச்சல் போடுவதற்குப் பலர் வந்துவிட்டனர். தொலைக்காட்சியைப் பார்ப்பதற்காக சண்டையிட்ட காலம் சென்று, சண்டைகளைப் பார்ப்பதற்காகவே தொலைக்காட்சியை நாடும் காலம் வந்துவிட்டது. நான் சொல்வதெல்லாம் உண்மை, நம்புங்கள். இவர்களுக்கு நடுவே ஊடகங்களின் தனித்தன்மையைக் காப்பாற்றியபடி, தொலைக்காட்சியின் விவாத நெறியாளராக எப்படி இயங்க வேண்டும் என்பதைப் பாடமாக எடுத்துக்கொண்டிருக்கிறார் ஃபே டிசௌசா (Faye D’Souza).

எத்தனை விவாதங்களில் சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், பெண்கள் அணியும் ஆடை குறித்து கிண்டல் செய்யப்பட்டதற்கு ஃபே நடத்திய விவாதம் அட்டகாசமான ஒன்று. அந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய மௌலானா, “ஆண்களுடன் சம அந்தஸ்து வேண்டுமென்றால் நீங்கள் அண்டர்வேர் போட்டுக்கொண்டு வேலைக்குப் போகலாமே. அப்போது கண்டிப்பாக சம அந்தஸ்து கிடைக்கும்” என்று ஒரு கல்லை வீசினார். மற்ற கண்ணாடிகளாக இருந்தால் சட்டென உடைந்து சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், ஃபே டிசௌசா இதற்கு மாற்று மருந்து வைத்திருந்தார்.

மௌலானாவின் கேள்வியைக் கேட்டு அனைவரும் கிட்டத்தட்ட அமைதியாகிவிட, ஃபே மிகவும் மென்மையான குரலில் “பெண்களை பயமுறுத்தினால் தங்கள் வேலையை விட்டு ஓடி தலையில் துணியைப் போட்டுக்கொண்டு சமையலறையில் சென்று நின்றுகொள்வார்கள். நாம் மீண்டும் இந்த நாட்டைக் கையில் எடுத்துக்கொள்ளலாம் என எல்லா ஆண்களும் நினைக்கிறார்கள். மௌலானாஜி, உங்களுக்கு நான் ஒரு செய்தி வைத்திருக்கிறேன். நாங்கள் எங்கும் போகப் போவதில்லை. உங்கள் பயமுறுத்தலுக்கெல்லாம் அஞ்சப் போவதும் இல்லை. இது ஒரு பெண் நடத்தும் செய்தி சேனல். இதுதான் என் வேலை. உங்கள் பேச்சு என்னை எந்த விதத்திலும் பயப்பட வைக்காது” என்று அவர் பேசியது பெண்களை அடக்க நினைக்கும் ஆண்களுக்கு மட்டுமல்லாமல் மீடியாவைச் சேர்ந்த அனைவருக்கும் ஒரு பாடமாக இருந்தது.

தமிழிலும் சில உதாரணங்கள்

இந்தியா முழுவதும் ஒளிபரப்பப்படும் செய்தி சேனல்களில், தமிழக செய்தி சேனல்களில் மேற்கண்ட பத்திரிகையாளருக்கான குணாதசியம் அதிகம் பேரிடம் காணப்படுகிறது. குறிப்பாக நியூஸ் 18 குணசேகரன், நியூஸ் 7 நெல்சன் சேவியர், சன் டிவி ராஜா திருவேங்கடம் ஆகியோர் சத்தமாகப் பேசாமல் சரியான காரணங்களுடன் கேள்விகளையும், பதிலையும் கொடுத்து விவாதம் நடத்துவதில் சிறப்பாகச் செயல்படுகின்றனர். ஆனால், இவர்களையெல்லாம் இந்திய ஊடகங்கள் எனப்படும் ஆங்கில ஊடகங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது தமிழக அளவில் மக்களுக்கான பிரச்னைகளை மக்களின் பக்கம் நின்றே இவர்கள் பேசுவதுதான்.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செயல்படுத்தப்பட்ட அன்று இரவு நெல்சன் சேவியர் தலைமையில் ஒரு விவாதம் நடைபெறுகிறது. அப்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், திடீரென்று இரவில் அமல்படுத்தப்பட்ட விதமும் சரியென்று பேசுபவர்களைப் பார்த்து நெல்சன் ஒரு கேள்வி கேட்டார். “ஆட்டோ அல்லது கால் டாக்ஸியில் வீட்டுக்குத் திரும்பிவிடலாம் என நான் எடுத்துக்கொண்டு வந்த ஐநூறு ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்டுவிட்டது. இப்போது நான் எப்படி வீட்டுக்குத் திரும்பச் செல்வேன்? இத்தனை மணிக்கு மேல் நான் வங்கிக்குச் சென்று எப்படி பணத்தை மாற்றுவேன்? இப்படி நான் பாதிக்கப்பட்டதுபோலவே இந்திய நாட்டிலுள்ள அத்தனை மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.”

நெல்சன் சேவியரின் இந்தப் பேச்சு, ஒரு ஊடகத்தில் சம்பளத்துக்கு வேலை செய்யும் செய்தி ஆசிரியர் அல்லது நெறியாளர் என்ற பதவிக்கும் மேலாகத் தன்னை அடிப்படையில் ஒரு குடிமகனாக பாவித்து, தனது பதவிக்கு இருக்கும் அதிகாரத்தை, எவ்வித மனித உரிமை மீறலுக்கும் ஆட்படுத்தாமல் பயன்படுத்தப்பட்டதற்கான உதாரணம். ஃபே டிசௌசா இப்படியொரு புதிய தளத்தை ஆங்கில சேனல்களில் பயன்படுத்தியதால் இன்று பல முன்னணி சேனல்களுக்குப் போட்டியாகத் தான் பணிபுரியும் மிரர் நவ் சேனலைக் கொண்டுசென்றிருக்கிறார்.

டைம்ஸ் நவ் சேனலின் கிளை சேனல்தான் மிரர் நவ். ஆனால், அதற்கு சமமாக இந்த சேனலை எப்படிக் கொண்டு செல்ல முடிந்தது என்ற கேள்வியில்தான் வேகமாக மாறிவரும் இந்திய மீடியாவின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது. மிரர் நவ் சேனல் மும்பை நகரத்தின் அடிப்படை பிரச்னைகளைக் கையிலெடுத்து ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் விவாதிக்கிறது. உதாரணமாக ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டபோது மும்பை நகரத்தின் கடைக்கோடி மனிதனை எப்படி இந்த வரி பாதிக்கிறது என அவர் நடத்திய விவாதங்களும், கேட்ட கேள்விகளும் யூடியூபில் வைரலாக இருந்தன. நாங்கள் மிகவும் இளம் நிறுவனம். நாங்கள் வைத்திருந்த டார்கெட்டையெல்லாம் எப்போதோ கடந்து வந்துவிட்டோம். இப்போது பெரிய ஆட்களுடன் மோதிக்கொண்டிருக்கிறோம் என்கிறார். இத்தனை விரைவில் ஒரு சேனலை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஃபே வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கவும், சிறப்பு பயிற்சிகள் எடுக்கவும் இல்லை. பெங்களூரிலுள்ள மௌன்ட் கர்மெல் கல்லூரியில் இளங்கலை வர்த்தகம் படித்துவிட்டு, இந்தியாவின் முன்னணி பத்திரிகைகளிலும், சேனல்களிலும் பணியாற்றிய அனுபவத்துடன் மக்களுக்கான பிரச்னையைக் கையிலெடுத்துப் பேசுவதைத் தனது பலமாகக் கருதுகிறார்.

நியூஸ்லாண்டரி இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் “பெரிய சேனல்களின் பிரைம் டைமில் பேசுவதற்கு அரசியல் பிரச்னைகள், தேசிய பிரச்னைகள், சர்வதேசப் பிரச்னைகள் என ஆயிரம் இருக்கின்றன. ஆனால், மக்கள் பிரச்னையைப் பேசுவதற்கு எங்களுக்கு அதிக நேரமிருக்கிறது. வட இந்தியாவில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகமாகும்போது வட இந்திய சேனல் ஒன்று அதைப் பற்றிப் பேசவும், ஆராயவும் வேண்டிய அவசியம் அதிகம் இருக்கிறது” என்று கூறுகிறார். எதிர்பார்க்காத வளர்ச்சியிலும் தனது வளர்ச்சிக்குக் காரணமானவரை ஃபே டிசௌசா மறக்கவில்லை. மௌலானாஜிக்கு எனது நன்றியை நான் தெரிவித்தே ஆக வேண்டும். அவருக்கு நான் கொடுத்த பதிலுக்குப் பிறகு தான் அதிக மக்கள் எங்கள் சேனலைப் பார்க்கத் தொடங்கினார்கள் என்று நன்றி கூறியிருக்கிறார். Manhattan Night திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். ஒரு செய்தி. ஒரே ஒரு செய்தி... ஒரு பத்திரிகையாளனின் வாழ்க்கையையே மாற்றி, செய்திகளை அவன் தேடிச் செல்லாமல் அவனைத்தேடி செய்திகளை வரச் செய்யும் என்ற அந்த வசனம்தான் இப்போது ஃபே டிசௌசாவுக்கு நடைபெற்றிருக்கிறது.

ஆங்கில ஊடகங்களில் அனைத்து சேனல்களும் செய்தி சேனல்கள் தொடங்கியபோது ஏற்பட்டதுதான் கூச்சலிட்டுப் பேசுவது, மைக் லைன் துண்டிப்பது, விவாதத்திலிருந்து வெளியேற்றுவது போன்ற நாடகங்கள் எல்லாம். தமிழகத்திலும் கிட்டத்தட்ட இப்போது அந்நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால், ஒரு அர்னாப் கோஸ்வாமி உருவாவதற்குள், ஒரு ஃபே டிசௌசாவை உருவாக்க வேண்டிய அவசியம் தற்போது அதிகரித்திருக்கிறது. தமிழில் அப்படி உருவாவதற்கான அறிகுறிகள் நம்பிக்கை தரும் விதத்தில் இருக்கவே செய்கின்றன.

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon