மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: சுய வேலைவாய்ப்பு: ஏமாற்றும் அரசு! - விவேக் கவுல்

சிறப்புக் கட்டுரை: சுய வேலைவாய்ப்பு: ஏமாற்றும் அரசு! - விவேக் கவுல்

ஆகஸ்ட் 15, 2017 அன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தனது நான்காம் சுதந்திர தின உரையை ஆற்றியிருந்தார். அப்போது அவர், “கடந்த மூன்று வருடங்களில், லட்சக்கணக்கான இளைஞர்கள் சுயமாக வாழ்வதற்கு பிரதான் மந்த்ரி முத்ரா யோஜனா திட்டம் உதவியாக இருந்துள்ளது. அது மட்டுமல்ல, ஓர் இளைஞரால் இரண்டு அல்லது மூன்று இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிகிறது” என்று பேசியிருந்தார்.

இதேபோன்ற கருத்துகளை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரான அமித் ஷாவும் தெரிவித்திருந்தார். கடந்த மே மாதம் அமித் ஷா, “125 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவது சாத்தியமில்லை. எனவே, அதற்கு ஒரு புதிய தோற்றத்தை அளிக்க நாங்கள் முயற்சி செய்துள்ளோம். சுய வேலைவாய்ப்புகளை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். அரசு எட்டு கோடி பேரை சுய தொழில் தொடங்க வைத்திருக்கிறது” என்று பேசியிருந்தார்.

அதாவது, பிரதான் மந்த்ரி முத்ரா யோஜனா (முத்ரா கடன்) திட்டத்தின்கீழ் வழங்கப்படும் கடன் தொகையால் ஒவ்வொருவரும் சுய தொழில் தொடங்குகின்றனர் என்பது போன்றுதானே இவர்கள் பேசி வருகின்றனர்?

பிரதான் மந்த்ரி முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ், 2015-16ஆம் ஆண்டில் 348.8 லட்சம் கடன்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 2016-17ஆம் ஆண்டில் 397 லட்சம் கடன்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 2017-18ஆம் ஆண்டில் (செப்டம்பர் 8ஆம் தேதி வரை) 153.29 லட்சம் கடன்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 899.09 லட்சம் கடன்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, பிரதான் மந்த்ரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 9 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையிலேயே 8 கோடி பேருக்கு சுய தொழில் தொடங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அமித் ஷா பேசியிருக்க வேண்டும்.

ஒரு முத்ரா கடன் ஒருவருக்கு சுய வேலைவாய்ப்பு வழங்குவதாக இவர்கள் கூறுகின்றனர். அதுவும் ஒரு முத்ரா கடனை வைத்து தொழில் தொடங்கும் ஒருவரால், இரண்டு அல்லது மூன்று பேருக்கும் மேலானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்றும் மோடி பேசுகிறார்.

2015-16ஆம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட கடன் தொகை 1,37,449.3 கோடி ரூபாய். 2016-17ஆம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட கடன் தொகை 1,80,528.5 கோடி ரூபாய். 2017-18ஆம் ஆண்டில் (செப்டம்பர் 8 வரை) ஒப்புதல் அளிக்கப்பட்ட கடன் தொகை 71,320.64 கோடி ரூபாய். 2015-16ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட கடன் தொகை 1,32,954.7 கோடி ரூபாய். 2016-17ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட கடன் தொகை 1,75,312.1 கோடி ரூபாய். 2017-18ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட கடன் தொகை 68,188.76 கோடி ரூபாய். 2015-16ஆம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட சராசரி கடன் தொகை 39,405.30 ரூபாய். 2016-17ஆம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட சராசரி கடன் தொகை 45,472.00 ரூபாய். 2017-18ஆம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட சராசரி கடன் தொகை 46,527.61 ரூபாய்.

அதாவது, பிரதான் மந்த்ரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சராசரி கடன் தொகை, 2015-16ஆம் ஆண்டில் 39,405 ரூபாயில் இருந்து 2017-18ஆம் ஆண்டில் 46,538 ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்னும் சில தகவல்களை ஆழமாகப் பார்ப்போம்.

2015-16ஆம் ஆண்டில் பிரதான் மந்த்ரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்களின் எண்ணிக்கை 348.8 லட்சம். 2016-17ஆம் ஆண்டில் பிரதான் மந்த்ரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்களின் எண்ணிக்கை 397 லட்சம். 2015-16ஆம் ஆண்டில் புது தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்ட கடன்களின் எண்ணிக்கை 124.7 லட்சம். 2016-17ஆம் ஆண்டில் புது தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்ட கடன்களின் எண்ணிக்கை 99.9 லட்சம். 2015-16ஆம் ஆண்டில் பெண் தொழில்முனைவோர்க்கு வழங்கப்பட்ட கடன்களின் எண்ணிக்கை 276.3 லட்சம். 2016-17ஆம் ஆண்டில் பெண் தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்ட கடன்களின் எண்ணிக்கை 291.5 லட்சம். பிரதான் மந்த்ரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் ஓவர் டிராஃப்ட் கணக்குகளுக்கு 2015-16ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மொத்த கடன்களின் எண்ணிக்கை 24.2 லட்சம். பிரதான் மந்த்ரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் ஓவர்டிராஃப்ட் கணக்குகளுக்கு 2016-17ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மொத்த கடன்களின் எண்ணிக்கை 14.2 லட்சம். முத்ரா அட்டை வைத்திருப்பவர்களுக்கு 2015-16ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மொத்த கடன்களின் எண்ணிக்கை 5.2 லட்சம். முத்ரா அட்டை வைத்திருப்பவர்களுக்கு 2016-17ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மொத்த கடன்களின் எண்ணிக்கை 1.8 லட்சம்.

முந்தைய இரண்டு நிதியாண்டுகளிலும் புது தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்களின் எண்ணிக்கை 2.25 கோடி. இது மொத்த கடன்களில் சுமார் 30 சதவிகித பங்கு வகிக்கிறது. ஆக, பிரதான் மந்த்ரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 8 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக மோடி பேசியது கணக்குப்படி தவறாகிறது. ஏற்கெனவே சுய தொழில் தொடங்கியவர்களுக்கு ஏராளமான தொகை கடனாக வழங்கப்பட்டுள்ளது.

பிரதான் மந்த்ரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் தொகை மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. சிஷு (50,000 ரூபாய் வரை), கிஷோர் (50,000 முதல் 5 லட்சம் ரூபாய் வரை), தருண் (5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை) ஆகிய மூன்று பிரிவுகள் ஆகும்.

கடந்த இரண்டு நிதியாண்டுகளில் வழங்கப்பட்ட சிஷு கடன்கள், மொத்த கடன் தொகையில் 92-93 சதவிகித பங்கு வகிக்கிறது (மேற்கண்ட அட்டவணையின் படி). அதாவது மொத்த கடன்களில் 92-93 சதவிகித கடன்கள் சிஷு கடன்களாகவே வழங்கப்பட்டுள்ளது. சராசரியாக வழங்கப்படும் சிஷு கடன் தொகை 2015-16ஆம் ஆண்டில் 19,400 ரூபாயாகவும், 2016-17ஆம் ஆண்டில் 23,300 ரூபாயாகவும் இருந்துள்ளது. ஆக, பிரதான் மந்த்ரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் தொகை மிகவும் குறைவானது என்பது தெளிவாகிறது. இந்த சிறிய மூலதனத்தைக் கொண்டு தொழில் தொடங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது சாத்தியமற்றுப் போகிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு பதிலாக, ஏற்கனவே தொழில் முனைந்தவர்களுக்குக் கூடுதலாக மூலதனம் வழங்கவே இத்திட்டம் உதவி செய்கிறது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்கள் தொழில் தொடங்கியுள்ளனரா என்பதே பெரிய கேள்விக்குறியாகிறது.

இந்தியாவில் தொழில் தொடங்கியவர்கள் அனைவரும் விருப்பத்துடன் தொழில் தொடங்கியவர்கள் இல்லை. தயக்கத்துடன் விருப்பமின்றி வேறு வழியில்லாமல் தொழில் தொடங்கியவர்களே இங்கு அதிகம் என்று பொருளாதார வல்லுநர்களான அபிஜித் பேனர்ஜியும், எஸ்தர் துஃப்லோவும் கூறுகின்றனர். வேறு வாய்ப்புகள் இன்றி தொழில் தொடங்குகின்றனர். இந்தியாவின் தொழிலாளர் சக்தியில் 46-47 சதவிகிதம் பேர் சுய தொழில் தொடங்கியவர்களாகவே உள்ளனர். இதற்கான காரணத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்களின் நிலை சுய தொழில் தொடங்கியவர்களின் நிலையை விட சற்று சிறப்பாகவே இருப்பது தெளிவாகிறது (மேற்கண்ட அட்டவணையின் தகவலின்படி). சுய தொழில் தொடங்கியோரில் மூன்றில் இரண்டு பங்கு ஆட்கள் மாதத்துக்கு 7,500 ரூபாய் வருமானம் ஈட்டுகின்றனர். ஆனால், சம்பளத்துக்குப் பணிபுரியும் ஆட்களிலோ இது 38 சதவிகிதமாக மட்டுமே உள்ளது.

முத்ரா கடன்களால் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை குறித்து முத்ராவின் தலைமை செயல் அதிகாரியிடம் ஒரு தனியார் செய்தி நிறுவனத்தின் பேட்டியில் கேள்வியெழுப்பட்டது. அதற்கு அவர், “அதுகுறித்து நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். சரியான கணக்கு எங்களிடம் இல்லை. இதுகுறித்து ஆய்வு செய்ய நித்தி ஆயோக் முயற்சி செய்து வருகிறது” என்று பதிலளித்தார்.

உண்மையான சூழ்நிலை இப்படியிருக்கும்போது, முத்ரா கடன்களால் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கிறது என்று அரசு விளம்பரம் செய்வதும் போலியாகிறது. ஏனெனில், வேலைவாய்ப்புகளுக்காக அலைபவர்களின் பிரச்னையைத் தீர்ப்பதைவிட அதிகாரத்தில் இருப்பதே ஆட்சியாளர்களுக்கு முக்கியமாகத் தெரிகிறது. அதற்கான ஓர் அரசியல் தந்திரமாகவே இந்த வீண் விளம்பரங்கள் வெளியிடப்படுவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழில்: அ.விக்னேஷ்

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon