மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு!

ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு!

பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை திருவல்லிக்கேணி காவல்துறை ஆய்வாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா ஜெ.அப்துல் ரஹீம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “ராமநாதபுரத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இந்து முன்னணி பிரமுகர் வெட்டப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு இஸ்லாமியர்கள்தாம் காரணம் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா அறிக்கையும் பேட்டியும் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாகக் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சொத்துத் தகராறில் இந்து முன்னணியைச் சேர்ந்த நான்கு பேர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனிடையே, ஹெச்.ராஜா இரு சமூகத்தினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக அவதூறாகப் பேசியுள்ளார். அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அந்தப் புகாரின் பேரில் ஹெச்.ராஜாமீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த மனுவை நேற்று (அக்டோபர் 09) விசாரித்த உயர் நீதிமன்றம், ஹெச்.ராஜாமீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சென்னை திருவல்லிக்கேணி காவல்துறை ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளது .

செவ்வாய், 10 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon