மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

அம்மங்கி அம்மாள் என்கிற வரதாச்சாரி!

 அம்மங்கி அம்மாள் என்கிற வரதாச்சாரி!

விளம்பரம்

அம்மங்கி திருவரங்கத்தில் இருந்து நம்பெருமாளின் பிரசாதங்களோடு மேல்கோட்டை நாராயணபுரம் புறப்பட்டார். பெருமாள் பிரசாதங்களோடு புறப்பட்ட அம்மங்கி அம்மாளுக்கு போய்க் கொண்டிருக்கும்போதே இன்னோர் நற்செய்தியும் கிடைக்கிறது.

அது... ராமானுஜரை அழைத்துச் சென்று சிவனேபரத்துவம் என்று சொல்லவைப்பதற்காக வீரர்களை அனுப்பினானே சோழ மன்னன், அவன் ராமானுஜர் என்று கருதி கூரத்தாழ்வானை சபையின் முன் நிறுத்தி, ‘சிவனே பரத்துவம்’ என்று சொல்லச் சொன்னான் அல்லவா? அப்போது கூரத்தாழ்வான் மறுத்ததால் அவரது கண்களை பிடுங்கச் சொல்லி அம்மன்னன் உத்தரவிட, அடுத்த கணம், நீ என்னடா என் கண்ணைப் பிடுங்குவது? தினம் தினம் ராமானுஜரையும், எம்பெருமான் ரங்கநாதனையும் பார்த்த என் கண்கள் இன்று உன்னைப் பார்ப்பதே பாவம்.அதனால் நானே என் கண்களை பிடுங்கிக் கொள்கிறேன், என்று தன் பார்வையை இழந்தார்.

அதன் பின் பெரிய நம்பிகளையும் சோழமன்னன் சிவனை ஏற்கச் சொல்லி வற்புறுத்த அவரது கண்களும் பிடுங்கப்பட்டது. கூரத்தாழ்வானும், பெரிய நம்பிகளும் பார்வை இழந்து திருவரங்கத்துக்குத் திரும்புகையில் அரங்கத்தின் எல்லை தொடும் தறுவாயில் பெரிய நம்பிகள் காலமானார்.

இந்த பாவங்களுக்கெல்லாம் காரணமான சோழமன்னன் நோய்க்கு ஆட்பட்டு இறந்துவிட்டான் என்ற செய்திதான் மேல்கோட்டைக்குப் புறப்படும்போது அம்மங்கி அம்மாளுக்குக் கிடைக்கிறது.

உடனே வேகவேகமாக ஆசை ஆசையாக மேல்கோட்டைக்குச் சென்று அங்கே இருக்கும் ராமானுஜருக்கு நம்பெருமாளின் பிரசாதங்களைக் கொடுத்து, சோழமன்னனுக்கு நேர்ந்த கதி பற்றியும் சொல்ல ராமானுஜருக்கு அப்போதுதான் நடந்தது எல்லாம் தெரிகிறது.

தனக்கு இப்படி ஒரு நற்செய்தியும், திருவரங்கத்துக்குப் பிரசாதங்களும் கொண்டு வந்த அம்மங்கி அம்மாளுக்கு ராமானுஜர் ஏதேனும் பரிசு கொடுக்க நினைத்தார். சட்டென அவரை அருகில் அழைத்து த்வயம் எனப்படும் மோட்சத்துக்கான சுலோகத்தை அவருக்கு உபதேசித்தார். அருகிலே இருந்த ராமானுஜரின் மேல்கோட்டை சிஷ்யர்கள், ‘ என்ன ஜீயரே... அவருக்கு எடுத்த எடுப்பிலேயே த்வயத்தை உபதேசித்து விட்டீரே?’ என்று ராமானுஜரைப் பார்த்துக் கேட்க,

‘இத்தனை தூரம் பெருமாள் பிரசாதம் கொண்டுவந்த இவர்க்கு த்வயத்தை அர்த்தத்தோடு உபதேசிப்பதை விட அடியேனால் வேறொரு கைம்மாறு செய்ய முடியுமா?’ என்று கேட்டிருக்கிறார் ராமானுஜர்.

சரி...இந்த நிகழ்வை நாம் அம்மங்கி அம்மாள் என்பவருக்காப் பார்த்தோம்.

ராமானுஜர் நியமித்த 74 சிம்மாசனாதிபதிகளில் பெண்களும் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் பெயர்கள் கூட இருக்கின்றன என்றும் சிலர் சொல்கிறார்கள். அதில் ஒரு பெயர்தான் அம்மங்கி அம்மாள்.

நாம் ராமானுஜருடைய வாழ்வின் பல பகுதிகளைப் பல்வேறு கோணங்களில் பார்த்து வருகிறோம். 74 சிம்மாச னாதிபதிகளில் பெண்கள் கிடையாது என்பதே உண்மை. ஆலய நிர்வாகங்களில் எல்லாம் பெண்களை ஈடுபடுத்திய ராமானுஜர்... சிம்மாசனாதிபதிகளில் பெண்களை வைக்கவில்லை.ஏனெனில் பெண்கள் சந்நியாசிகளாக இருப்பது இன்றே மிக மிகக் குறைவு. அன்று அதை விட மீச்சிறு குறைவு. இல்லை என்றே சொல்லிவிடலாம்.

மேலும் சிம்மாசனாதிபதிகள் என்பவர்கள் வைணவத்தை நிலைநிறுத்த ஊர் ஊராய், கிராமம் கிராமமாய் செல்ல வேண்டும். இப்படிப்பட்ட பணிகள் அன்றைய நிலையில் பெண்கள் சிம்மாசனாதிபதிகள் ஆக முடியவில்லை.

ஆனால் அம்மங்கி அம்மாள் என்ற பெயர் சிம்மா சனாதிபதிகள் பட்டியலில் இருந்தவுடன், ‘ராமானுஜர் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்’ என்கிறார்கள். ராமானுஜரைப் போல அன்றைய ஆன்மிக, சமய, தத்துவ, நடைமுறை உலகில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தவர் யாருமில்லை.

அதனால், அம்மங்கி அம்மாளை பெண் என்றெல்லாம் சொல்லமுடியாது. அம்மங்கி அம்மாளின் பெயர் வரதா ச்சாரி. ராமானுஜரோடு வாதம் செய்ய வந்து தோற்று..ராமானுஜரின் பெயரை தன் பின்னால் சூடிக் கொண்ட அருளாளப் பெருமாள் எம்பெருமானரைப் பார்த்தோம் அல்லவா... அவரது சீடர்தான் அம்மங்கி அம்மாள்.

அவர் ஒரு நாள் இறைவனுக்கு பாலமுது படைக்கும்போது பால் சூடாக இருந்ததால் சற்றே ஊதியிருக்கிறார். அதை அறிந்த இறைவன், ’அம்மாளோ...’ என்றிருக்கிறார். அதாவது பிள்ளைக்கு சூடான பால் கொடுக்காமல் ஊதிக் கொடுக்கும் அம்மாவைப் போன்று ஊதுகிறாய் என்று இதன் அர்த்தம்.இதையடுத்து அவர் அம்மங்கி அம்மாள் என்று பக்தர்களால் அழைக்கப்பட்டார்.

இப்படி ராமானுஜ சீடர்களில் பல பெயர் சுவாரஸ்யங்கள் உள்ளன.

ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் முயற்சிகளால் ராமானுஜ வைபவம் தமிழகத்திலும் உலகத்திலும் பலருக்கும் பருகப் பருக திகட்டாத அமுதமாக தொடர்கிறது. ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் இந்த சேவை தொடரட்டும்!

ஆழ்வார்கள் ஆய்வு மையம் வளரட்டும்... ராமானுஜர் புகழ் ஓங்கட்டும்!

விளம்பர பகுதி

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon