மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

டிஜிட்டல் திண்ணை: அமைச்சரிடம் பேசிய சசிகலா

டிஜிட்டல் திண்ணை: அமைச்சரிடம் பேசிய சசிகலா

மொபைலில் டேட்டாவை ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். “பயணங்கள் நிறைய மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கும்!” என்று ஸ்டேட்டஸ் ஒன்றைப் பதிவிட்டிருந்தது ஃபேஸ்புக். “புரியலையே...” என கமெண்ட் போட்டது வாட்ஸ் அப். அதற்கு ரிப்ளை எதுவும் போடாமல், அடுத்த ஸ்டேட்டஸை அப்டேட் செய்தது ஃபேஸ்புக்.

“சசிகலாவுக்கு நெருக்கமான உறவினர் ஒருவரது செல்போன் எண்ணிலிருந்து நேற்று அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு போன் வந்திருக்கிறது. ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. விடாமல் அதே எண்ணிலிருந்து கால் வந்தபடியே இருந்திருக்கிறது. எப்படியும் சசிகலாதான் பேசுவார் என நினைத்து மணியன் போனைத் தவிர்த்திருக்கிறார். உடனே எடப்பாடியைத் தொடர்பு கொண்டு, தனக்கு விடாமல் சசிகலா தரப்பிலிருந்து போன் வருவதைச் சொல்லியிருக்கிறார். எடப்பாடியோ, ‘எடுத்துப் பேசுங்க. எவ்வளவு நாள் தவிர்க்க முடியும்? உங்க தரப்பு நியாயம் என்னவோ அதைச் சொல்லிட்டு வெச்சுடுங்க’ என்று சொல்லியிருக்கிறார்.

அவர் எடப்பாடியுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே கால் வெய்ட்டிங்கில் அந்தக் கால் மறுபடியும் வந்திருக்கிறது. போனை எடுத்திருக்கிறார் மணியன். ‘சின்னம்மா பேசுறாங்களாம்...’ என்று சொல்லிவிட்டு போன் கைமாறியிருக்கிறது. முதலில் நலம் விசாரிப்புகள் முடிந்ததும், ‘நீங்க செஞ்சது நியாயமா?’ என சசிகலா கேட்டிருக்கிறார். அதற்கு மணியன், ‘கட்சியில் இருக்கும் எல்லோரையும் தினகரன் நீக்கிட்டே இருந்தாரு. கடைசியில் என்னையும் பொறுப்பில் இருந்து நீக்கினாரு. அதுவும் உங்க ஒப்புதலுடன் நீக்குவதாக அறிவிச்சாரு. என்னை நீக்கிட்டு அதுக்கு பதிலாக நியமிச்ச ஆட்கள் யாரும் சரியானவங்க இல்லை. எனக்கு பதிலாக மட்டும் இல்லை...ஒட்டுமொத்தமாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் யாருமே சரியில்லை. அப்புறம் நான் என்ன செய்ய முடியும் சொல்லுங்க..’ எனக் கேட்டிருக்கிறார்.

‘உங்கள நீக்குனது எனக்குத் தெரியாதே’ என சசிகலா சொல்லியிருக்கிறார். அதற்கு மணியன், ’ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் உங்க படமே போடக் கூடாதுன்னு சொன்னாரு. இப்போ பாருங்க... ரெண்டு கூட்டம் நடத்தினாரு. அத்தோடு அமைதியாகிட்டாரு. கூட்டத்த ஏற்பாடு செய்யிறதுக்குக்கூட ஆட்கள் சரியா இல்ல. எங்களை ஸ்லீப்பர் செல்லுன்னு வேற திட்டிட்டு இருக்காரு... ஓ.பி.எஸ். எங்களைப் பற்றிய கம்ப்ளீட் ரிப்போர்ட்டை டெல்லிக்கு கொடுத்துட்டாரு. அதுக்கு எடப்பாடியே பயந்துட்டு இருக்கும்போது நாங்க என்னதான் செய்யிறது? நீங்களே சொல்லுங்க...’ எனக் கேட்டாராம்.

’இதெல்லாம் எனக்கு தெரியாது. பேசாம துணைப் பொதுச் செயலாளராக பழனிசாமிய நியமிச்சுட்டுப் போயிருக்கலாம். நான் தினகரன்கிட்ட பேசுறேன். நீங்க எதையும் மனசுல வெச்சுக்காதீங்க...’ என்று சொல்லி சமாதானம் பேசியிருக்கிறார் சசிகலா. இப்படியாக அந்தப் பேச்சு 20 நிமிடங்கள் நீண்டிருக்கிறது. நேற்று இரவு 8 மணிக்கு மேல், தான் தங்கியிருக்கும் தி.நகர் வீட்டிற்கு தினகரனை அழைத்து நீண்ட நேரம் பேசியிருக்கிறார் சசிகலா.

மணியன் சசிகலாவுடன் பேசிவிட்டு, உடனே முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புகொண்டு, சசிகலாவிடம் பேசிய விபரங்களைச் சொல்லியிருக்கிறார். ‘அவ்வளவுதான்... பிரச்னை முடிஞ்சுது. இனி போன் பண்ண மாட்டாங்க விடுங்க..’ எனச் சொன்னாராம் எடப்பாடி.

அமைச்சர்கள் எல்லோருக்குமே எடப்பாடி தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருக்கும் தகவல், சசிகலா தரப்பிலிருந்து யார் போன் செய்தாலும் எடுத்துப் பேசுங்க. தினகரன் இதுவரை செய்தவற்றையெல்லாம் சசிகலாவிடம் சொல்லுங்க என்பதுதான்!” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டு ஷேர் செய்தது வாட்ஸ் அப்.

தொடர்ந்து மெசேஜ் ஒன்றையும் டைப்பிங் செய்ய ஆரம்பித்தது. “சசிகலா பரோலில் வந்த பிறகு தினகரன் அணியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் பேச்சில் ஏகத்துக்கும் மாற்றம் தெரிகிறது. இவ்வளவு நாளாக ஆட்சியைக் கலைப்போம் எனப் பேசிவந்தவர்கள், இப்போது ‘ஆட்சியைக் கலைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால் எடப்பாடி முதல்வராகத் தொடர்வதிலும் எங்களுக்கு உடன்பாடு இல்லை. பொதுச் செயலாளர் சின்னம்மாவுக்கும் ஆட்சியை கலைக்கும் எண்ணம் இல்லை’ என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களே சொல்ல ஆரம்பித்துள்ளனர். என்ன மாயமோ!” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

திங்கள், 9 அக் 2017

அடுத்ததுchevronRight icon