மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

நடிகர் சங்கப் பொதுக் குழு சர்ச்சை!

நடிகர் சங்கப் பொதுக் குழு சர்ச்சை!

சினிமா துறை சார்ந்த ஜிஎஸ்டி, திரையரங்க உரிமையாளர்கள் பிரச்சினை, திருட்டு விசிடி பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு திரைத் துறை சார்பில் அரசை சந்தித்தபோது என்னை அழைக்காதது ஏன் என்று நடிகர்சங்க பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் சங்கத் துணைத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் கருணாஸ் கேள்வி எழுப்பியது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று (அக்.08) நடைபெற்றது. இதில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், ஆகியோருடன் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட 1000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். வெளி மாவட்டங்களைச் சேர்ந்த நாடக நடிகர்களும் இதில் கலந்துகொண்டனர். நாசர் தலைமையிலான நிர்வாகம் நடத்தும் கடைசிப் பொதுக்குழு கூட்டம் இதுவாகும். இதனையடுத்து அடுத்த வருடம் சங்க தேர்தல் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் பேசிய நடிகர் கருணாஸ், "நான் உங்களுக்காகவே இருக்கிறேன். உங்களுடைய குரலை உங்களைவிட உயர்த்தி சொல்லக்கூடிய ஒரு இடத்தில் என்னை நீங்கள் உருவாக்கி வைத்துள்ளீர்கள். ஆனால் திரைத்துறை சார்ந்த பிரச்சினைகளுக்காக அரசை நாடியபோது என்னை அழைக்காதது வருத்தமாகவுள்ளது. இனி வரும் காலங்களில் திரைத் துறை சார்ந்த பிரச்சனைகளில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்" எனத் தனது கோரிக்கையை முன்வைத்தார். இந்த பேச்சால் பொதுக்குழுவில் சற்று பரபரப்பான சூழல் நிலவியதாகத் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து நடிகர் சங்க முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, "சர்ச்சைக்குரிய கருத்து எதையும் கருணாஸ் அவர்கள் பேசவில்லை, திரைத் துறையின் பிரச்சினைகளைச் சட்டமன்றத்தில் பேசி அரசின் கவனத்துக்கு நேரடியாகக் கொண்டுசெல்லும் இடத்தில் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருக்கும்போது அவர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றிருக்கலாம். அது பேச்சுவார்த்தையின் போது மேலும் பலமாக இருந்திருக்கும் என்று கூறினார். மற்றபடி எந்த சர்ச்சைக்குரிய கருத்தையும் அவர் பேசவில்லை" என்று தெரிவித்தார்.

கேளிக்கை வரி மற்றும் திரையரங்க டிக்கெட் கட்டணம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை (அக்.10) அன்று தலைமைச் செயலகத்தில் அரசு மற்றும் திரைத் துறையினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதற்குத் திரைத் துறை சார்பில் அமைக்கப்படவுள்ள பேச்சுவார்த்தைக் குழுவில் கருணாஸ் இடம்பெறவுள்ளதை நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விஷால் உறுதிசெய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சரத்குமார் தலைமையிலான நிர்வாகத்தைச் சார்ந்த சிலர் நடிகர் சங்கத்துக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்றது தொடர்பாக விஷால், "சென்னை, கூடுவாஞ்சேரி, வேங்கடமங்கலம் பகுதியில் நடிகர் சங்கத்துக்குச் சொந்தமாக இருந்த 26 சென்ட் நிலத்தை, முந்தைய நிர்வாகிகள் நடிகர் சங்க செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் ஒப்புதல் பெறாமல் முறைகேடாக விற்றுவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி நடிகர் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் தீர்மானமாக உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

நடிகர் சங்கத்துக்கான அடுத்த தேர்தல் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. அதில் போட்டியிடுவது குறித்து அவர், "நாங்கள் நிச்சயம் போட்டியிடுவோம். முதலில் எங்களுக்குப் போட்டியிடும் எண்ணம் இல்லை. ஆனால், நாங்கள் வெற்றிபெற்றபோது முன்வைத்த முதல் கோரிக்கை சங்கக் கட்டிடம் கட்டுவது என்பதுதான். இன்னும் கட்டிடப் பணிகள் நிறைவடையாமல் இருப்பதால் அடுத்த தேர்தலில் கட்டாயம் போட்டியிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon