மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 1 ஏப் 2020

தீபாவளி போனஸ் அறிவிப்பு!

தீபாவளி போனஸ் அறிவிப்பு!

பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்குத் தீபாவளிக்கு 20 சதவிகித போனஸ் வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 9) அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வருகிற 18ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களின் ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் 2017-2018ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015ஆம் ஆண்டின்படி, போனஸ் பெறத் தகுதியான சம்பள உச்ச வரம்பு 21,000 ரூபாயாக மத்திய அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்க உத்தரவிடபட்டுள்ளது.

லாபம் ஈட்டிய நிறுவன ஊழியர்களுக்கு அவர்களின் ஊதியத்தில் 20 சதவிகிதம் , நஷ்டம் அடைந்த நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவிகிதம் போனஸ், கருணைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறைந்தபட்சமாக 8 ஆயிரத்து 400 முதல் அதிகபட்சமாக 18, 800 வரை போனஸ் வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 69 ஆயிரத்து 610 தொழிலாளர்களுக்கு 489 கோடியே 26 லட்சம் ரூபாய் போனஸாக வழங்கப்படும்.

லாபம் ஈட்டிய பொதுத் துறை ஊழியர்களுக்கு அந்த நிறுவனங்கள் ஒதுக்கக்கூடிய உபரித் தொகையைக் கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை வழங்கப்படும்.

நஷ்டம் அடைந்த பொதுத் துறை ஊழியர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 10 விழுக்காடு வழங்கப்படும்.

தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஆகிய பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வழங்கப்படும்.

லாபம் ஈட்டிய கூட்டுறவுச் சங்கங்களின் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையுடன் மொத்தம் 20 விழுக்காடு வரையிலும் ஒதுக்கக்கூடிய உபரி தொகைக்கு ஏற்ப வழங்கப்படும். பிற கூட்டுறவுச் சங்கங்களின் ஊழியர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்குக் கடந்த ஆண்டுபோல, இந்தாண்டும் 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும். அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்ட கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய நிறுவனங்களின் தகுதியுடைய ஊழியர்களுக்கு அந்நிறுவனங்களின் லாப நஷ்டத்திற்கு ஏற்ப ஒதுக்கக்கூடிய உபரித் தொகையைக் கருத்தில் கொண்டு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகையோ அல்லது 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையோ வழங்கப்படும்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு வழங்கப்படும்.

லாபம் ஈட்டிய தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு ஒதுக்கக்கூடிய உபரித் தொகையுடன் 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காட்டிற்கு மிகாமல் வழங்கப்படும். லாபம் ஈட்டாத தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 4,000 ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாயும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2,400 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon