மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

தாத்தாக்கள் ஹீரோக்களா?

தாத்தாக்கள் ஹீரோக்களா?

தாத்தாக்கள் நாயகர்களாக நடிப்பதை ஒப்புக்கொள்ளும் நாம், இளம் பெண்கள் திருமணம் ஆனதும் (நாயகிகளாக) ஒப்புக்கொள்வதில்லை ஏன்? எனக் கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை கஸ்தூரி.

நாக சைதன்யா - சமந்தா திருமணம் அக்டோபர் 6, 7 ஆகிய தேதிகளில் கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. தற்போது நட்சத்திரத் தம்பதிகளாக மாறியுள்ள நாக சைதன்யா - சமந்தா ஜோடியின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருவதோடு திரையுலகினர் பலரும் அவர்களுக்குத் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துவருகிறார்கள். திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று சமந்தா கூறியது ஊடகங்களில் செய்தியாக வந்தது.

இதைக் குறிப்பிட்டு நடிகை கஸ்தூரி, "திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று சமந்தா அறிவித்ததைச் செய்தியாக்கியுள்ள ஊடகங்கள் நாக சைதன்யாவிடம் தொடந்து நடிப்பீர்களா என்று கேள்வி எழுப்பாதது ஏன்?" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ட்விட்டரில் அவரைப் பின்தொடரும் ஒருவர், "உங்க கூட நடித்த ரஜினியும் கமலும் இன்னும் நாயகனாக நடிக்கிறார்கள். உங்களால் முடியவில்லை. அந்தக் காரணம்தான்" என்று பதிலளித்தார்.

இதற்கு கஸ்தூரி, "ஆனால் ஏன்? அதுதான் என் கேள்வி. தாத்தாக்கள் நாயகர்களாக நடிப்பதை ஒப்புக்கொள்ளும் நாம், இளம் பெண்கள் திருமணம் ஆனதும் (நாயகிகளாக) ஒப்புக்கொள்வதில்லை? ஏன்? ஏன்? ஏன்?" என்று கேட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இன்று (அக்.09) கும்பகோணத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், “ரஜினியும், கமலஹாசனும் பேசுவதே இப்போது தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்திவருகிறது. இதுவரை கேள்வி கேட்க யாருமில்லாத நிலை இருந்தது. இப்போது அவர்கள் கேள்வி கேட்கும்போது, அதை எதிர்த்து மற்றவர்கள் எதிர்க்கேள்வி கேட்கின்ற நிலை உருவாகி உள்ளது. இவர்கள் இருவருமே சமூக அக்கறை கொண்டவர்கள். சமூக மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று நினைப்பவர்கள். இருவரும் அரசியலுக்கு வருவது நல்லது தான். ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு முன்பே கமல் வந்துவிடுவார் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon