இந்தியாவிலேயே முதல் திருங்கை காவல்துறை உதவி ஆய்வாளரான பிரித்திகா யாசினி இன்று (அக்டோபர் 9) சென்னை சூளைமேடு காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.
சேலம் கந்தபட்டியைச் சேர்ந்த கலையரசன், சுமதி என்ற தம்பதிக்கு பிறந்தவர்தான் பிரித்திகா யாசினி. இவர் காவல் துறை அதிகாரி தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்றவர். இவர் பிறப்பில் ஆணாக இருந்தாலும், பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறினார். சான்றிதழ்களில் பிரதீப் குமார் என்று இருந்த தன்னுடைய பெயரை பிரித்திகா யாசினி என மாற்றிக்கொண்டார்.
பிசிஏ பட்டம் முடித்திருந்த யாசினி, தமிழகக் காவல் துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது அந்தப் பணிக்கு விண்ணப்பித்தார். யாசினி திருநங்கை என்பதால் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத் தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. எழுத்துத் தேர்வில் பிரித்திகா தேர்ச்சி பெற்றார். அடுத்து நடந்த உடல் தகுதித் தேர்வின்போது, ஓட்டப் பந்தயத்தில் ஒரு நொடி தாமதமாக வந்ததாகக் கூறி, பிரித்திகா தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்தில் பிரித்திகா மனு செய்தார். அதில் கிடைத்த தீர்ப்புக்குப் பிறகே அவருக்குப் பணி நியமனம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இவருக்கு கடமை நியமன ஆணை வழங்கப்பட்டது. அதையடுத்து, இவர் ஓராண்டாக வண்டலூரில் உள்ள தமிழ்நாடு போலீஸ் உயர் பயிற்சி நிலையத்தில் பயற்சி பெற்று வந்தார்.
அதன்பிறகு, தருமபுரி காவல் நிலையத்தில் பயிற்சி பெற்றுவந்த அவர், இறுதியாகச் சென்னையில் நடைபெற்ற சிறப்பு வகுப்பில் பங்குபெற்றார். அங்கு அவருடன் சுமார் 244 பேரும் பயிற்சியில் கலந்துகொண்டார்கள். இந்த 244 பேருக்கும் சென்னை மாநகரக் காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணி வழங்கப்பட்டுள்ளது. அதில், பிரித்திகா யாசினி சூளைமேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். அதற்கான ஆணையை, தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர்ரி நேற்று ( அக்டோபர் 8) யாசினிக்கு வழங்கினார்.