மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

நடப்பது டெங்கு ஆட்சி!

நடப்பது  டெங்கு ஆட்சி!

தமிழகத்தில் டெங்கு ஆட்சி நடக்கிறது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் டெங்கு வேகமாகப் பரவிவரும் நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜு டெங்குவைவிடக் கொடியது திமுகதான் என்று கூறிவருகிறார். இதற்கு பதிலளிக்கும் விதமாகச் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (அக்டோபர் 9) செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின்,"டெங்குவைவிட திமுகதான் கொடியது என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். ஆனால் இந்த ஆட்சியே டெங்கு ஆட்சியாக உள்ளது" என்று தெரிவித்தார்.

அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கியிருப்பதற்கு கேரள முதல்வருக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டார் ஸ்டாலின். இதுதொடர்பாக ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

“எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு காலதாமதமாக நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பில்தான் இதற்கு அவகாசம் கேட்டுள்ளனர். அதாவது ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைவிட, ஆட்சியில் இருக்கும்வரை கொள்ளையடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு காலம் தாழ்ந்து போனாலும், நீதி வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. காலதாமதம் குதிரை பேரத்திற்கு வழி வகுக்கிறதோ இல்லையே, ஆட்சியாளர்கள் கொள்ளையடிக்க வழி வகுக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரையில் இந்த ஆட்சி நீடிக்கும்.

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கெயில் திட்டத்தை எதிர்த்துப் போராடுவோம் என்று இப்போது அறிவிப்பது முரண்பாடானது என்று பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார். அவர் எப்போதுமே முரண்பாடாகத்தான் எல்லாவற்றையும் சொல்லிவருகிறார். கெயில் திட்டமாக இருந்தாலும் சரி, எந்த திட்டமாக இருந்தாலும் விவசாயிகளுடைய நலன் பாதிக்காத வகையில் செயல்படுத்த வேண்டும். கெயில் கியாஸ் திட்டத்தை சாலைகளில் நிறைவேற்றுவதை வரவேற்கிறோம். எனவே அதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று ஸ்டாலின் கூறினார்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon