மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

குழந்தைகளைக் காக்கப் போராடுங்கள்!

குழந்தைகளைக் காக்கப் போராடுங்கள்!

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் வித்தியார்த்தி தொடர்ந்து குழந்தைகள் நல வாழ்வு, மற்றும் குழந்தைகளுக்கான கல்வி, என்று குழந்தைகளுக்காகப் போராடிவருகிறார். அதேபோல் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிராகவும், குழந்தைத் தொழிலார்களை ஒழிக்கவும் தொடர்ந்து பாடுபட்டுவருகிறார். அவர் டெல்லியில் நடத்திவரும் ‘பச்பன் பச்சாவ் ஆந்தோலன்‘ (குழந்தைப் பருவம் மீட்போம் இயக்கம்) என்ற அமைப்பின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், குழந்தைகளின் கல்விக்கான அடிப்படை உரிமையைக் காக்கும் வகையில் சிறுவர்கள், சிறுமியரை சர்க்கஸ்களில் பயன்படுத்துவதற்கு முற்றாகத் தடை விதிக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2011ஆம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்தது. சர்க்கஸ்களில் பணிபுரியும் சிறுவர், சிறுமியரின் மறுவாழ்வுக்கான திட்டங்களை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

குழந்தைகளுக்காகத் தொடர்ந்து போராடிவரும் கைலாஷ் சத்தியார்த்தி பாரத் யாத்ரா என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்திவருகிறார். குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை இந்த அமைப்பின் மூலம் நாடு முழுவதிலும் ஏற்படுத்திவருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதி இன்று (அக். 09) காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள ஒரு பள்ளியில் நடந்தது. பள்ளிக் குழந்தைகளிடையே உரையாற்றினார்.

“குழந்தைகள் வன்முறையில் ஈடுபடக் கூடாது. அகிம்சை முறையில் ஒற்றுமையாகச் செயல்பட்டால் நாம் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறலாம். பிரிவினைவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் தங்கள் நோக்கத்தை நிறைவு செய்வதற்கு குழந்தைகளை பயன்படுத்தக் கூடாது. குழந்தைகள் எதையும் சாதிக்கும் திறனுடையவர்கள். அதனை கல்வி மூலம் சாதிப்பார்கள். குழந்தைகளுக்குக் கல்வி என்பது மிக அவசியம். மத்திய, மாநில அரசுகள் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். கல்வி குறித்த விழிப்புணர்வைப் பெற்றோர்களிடம் ஏற்படுத்த வேண்டும்” என்று அவர் பேசினார்.

குழந்தைகள் வன்முறைகளுக்கு எதிராக போராடும் இந்த அமைப்பில் 9 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். சமூக ஊடகங்கள் மூலம் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் ஆதரவு அளித்துவருகின்றனர் என்று கைலாஷ் சத்தியார்த்தி தெரிவித்தார்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon